You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை: பழி வாங்கப் போவதாக இரான் பதறுவது ஏன்?
இரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக சொல்கிறது இரான்.
யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப் போவதாக இரான் பதறுவதற்கு காரணம் என்ன?
அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர். இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் உயரதிகாரியாகவும் இருந்தார்.
இரானிய அணு ஆயுத திட்டங்களைச் முன்னெடுத்துச் செல்வதில், சக்திவாய்ந்த நபராக மொஹ்சென் ஃபக்ரிஸாதே இருந்தார் என பல மேற்கத்திய பாதுகாப்பு படைகள் குறிப்பிடுகின்றன.
1989-ம் ஆண்டில், அமத் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட ரகசிய திட்டத்துக்கு இவர் தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த அமத் திட்டம் மூலம் தான், இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு கைவிடப்பட்டது என்கிறது சர்வதேச அணு சக்தி கழகம்.
ஆனால் அமத் திட்டம் ரகசியமாக தொடர்ந்தது என்று கூறும் இஸ்ரேல் பிரதமர், 2018-ம் ஆண்டில், இஸ்ரேல் திரட்டிய ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முன்னெடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.
சர்வதேச அணுசக்திக் கழகம், இரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான விசாரணையில், ஃபக்ரிஸாதே உடன் பேச பல காலமாகக் காத்திருந்தது.
2018 கால கட்டத்திலேயே, இரானிய அணு ஆயுத திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இந்த பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், இரண்டாவது உலக போரின் போது, முதன் முதலாக அணு ஆயுதங்களை தயாரித்த ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெமருடன், இரானின் மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஒப்பிட்டு எழுதியிருந்தார்கள்.
ஏன் இவர் கொல்லப்பட்டார்?
இரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் தலைவராக ஃபக்ரிஸாதே இருந்தார். எனவே இப்போதும், மொஹ்சென் ஃபக்ரிஸாதே ஒரு முக்கியமான நபர்.
2015-ம் ஆண்டு கையெழுத்தான இரான் அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி, இரான் செயல்படத் தொடங்கிய பின், குறைந்த செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Low Enriched Uranium) அதிகம் சேமிக்கத் தொடங்கியது. அதோடு, 2015 ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக யுரேனியத்தை செரிவூட்டத் தொடங்கியது.
எங்களால் பின்னோக்கிச் செல்ல முடியாது என, இரானின் சர்வதேச அணுசக்தி கழகத்தின் தூதர் அலி அஸ்கர் சொல்தனி சமீபத்தில் கூறினார்.
இஸ்ரேல் குற்றம் சாட்டியது போலவே மொஹ்சென் ஃபக்ரிஸாதே ஒரு முக்கிய நபர் என்றால், அவரது மரணம் இரான் அணு ஆயுத விவகாரங்களில் முன்னோக்கிச் செல்வதில் தடை ஏற்படுத்துவதாக இருக்கும்.
பழி தீர்போம் - சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும்
மொஹ்சென் ஃப்க்ரிஸாதே அப்சார்ட் நகரத்தில் நடந்த தாக்குதலால், உயிரிழந்துவிட்டார்.
ஃபக்ரிஸாதேவை படுகொலை செய்தவர்களைப் பழி வாங்குவோம் என உறுதி அளித்துள்ளார் இரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ராணுவ ஆலோசகர் ஹொஸ்ஸியன் தேகன்
சர்வதேச சமூகம் இந்த தீவிரவாத செயலை கண்டிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார் இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மது ஜாவேத் சரிஃப்
இன்று தீவிரவாதிகள், இரானின் முக்கியமான விஞ்ஞானியைக் கொலை செய்து இருக்கிறார்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர்.
இந்த படுகொலை ஒரு தெளிவான சர்வதேச அத்துமீறல். இந்த பிராந்தியத்தில் அழிவைக் கொண்டு வரவே இந்த படுகொலை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இஸ்ரேல் நாட்டுக்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தெரிகிறது எனக் கூறி இருக்கிறார் ஐநாவுக்கான இரான் தூதர் மஜித் தக்த் ரவன்சி.
பிற செய்திகள்:
- வாழ வைத்த வாழை, முறித்துப் போட்ட நிவர்: தனியாக நின்று சாதித்த தாயின் கண்ணீர்க் கதை
- பேண்ட் சூட் உடையில் இந்திய மணப்பெண்: புதுமைத் திருமணம்
- நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்
- டொனால்ட் டிரம்ப்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா அதிபர்?
- சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :