அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய நாளில் நடந்த முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

அனைத்து காவல்நிலையங்கள், சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வுத்துறைகளில் ஒலி வசதியுடன் கூடிய சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தகைய வசதிகள் குறிப்பாக லாக் அப் அறைகள், விசாரணை அறைகள், விசாரணை கைதிகள் நுழைவு மற்றும் புறவாயில் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் பரம்வீர் சிங் சைனி என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ரோஹிங்டன் எஃப் நாரிமன், கே.எம். ஜோசஃப், அனிருதா போஸ் அடங்கிய அமர்வு விசாரித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.

அதில், "இன்றைய சூழலில் கைது நடவடிக்கைக்கான அதிகாரம் பெற்றுள்ள எல்லா புலனாய்வு அமைப்புகளும் காவல் நிலையங்களை போல தங்களுடைய விசாரணையை அவற்றின் அலுவலகங்களிலேயே நடத்தி வருகின்றன. அதே சமயம், காவலில் அத்துமீறி நடக்கும் செயல்படுகளும் மனித உரிமை மீறல்கள் இழைக்கப்படுவதாக எழும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி அனைத்து துறைகளும் கட்டாயம் சிசிடிவி கேமிராக்களை பொருத்தியிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், monticelllo

"இந்தப் பணிக்காக மாநில அளவிலான மேற்பார்வைக்குழுவை மாநில அரசுகளும், மத்திய அளவிலான மேற்பார்வைக்குழுவை மத்திய அரசும் உருவாக்க வேண்டும். டெல்லிக்கு உள்ளேயேயும் வெளியேயும் உள்ள மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி பொருத்தப்படுவதை மத்திய மேற்பார்வைக்குழு உறுதிப்படுத்த வேண்டும்."

"காவல்நிலையங்கள், புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதை எல்லா இடத்திலும் தெரியும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். விசாரணையின்போது மனித உரிமைகள் மீறப்படுவதாக கருதினால், அது குறித்து தேசிய அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையம் அல்லது துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த சிசிடிவி பதிவுகள் குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும்."

"இந்த சிசிடிவி கேமிராக்கள், காவல் நிலையங்களில் எல்லா இடங்களிலும் பதிவாகும் வகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும், நுழைவாயில், புறவாயில் பகுதிகள், காவல் நிலையத்தின் பிரதான வாயில், வராண்டாக்கள், ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, லாக் அப் அறை, காவல்நிலைய கூடம், வெளிப்புற மற்றும் உட்புற வளாகம் கழிவறைகள் நீங்கலாக நிறுவப்பட்டிருக்க வேண்டும். இந்த சிசிடிவி கேமிராக்கள், இரவில் செயல்படக்கூடிய சக்தி வாய்ந்தவையாக இருக்க வேண்டும். இந்த சிசிடிவி கேமிராக்களுக்கான இன்டர்நெட் வசதியை வழங்க வேண்டும். இந்த உத்தரவுக்கு கீழ்படியும் அறிக்கையை அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்க வேண்டும்." என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ), தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ), அமலாக்கத்துறை இயக்குநரகம் (இடி), தேசிய போதைப்பெருள் தடுப்புத்துறை (என்சிபி), வருவாய் புலனாய்வுத்துறை (டிஆர்ஐ), தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ), கைது நடவடிக்கை அதிகாரம் உடைய பிற துறைகள், அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் சமீப காலமாக லாக் அப் மரணங்களும், விசாரணை காலத்தில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சாத்தான் குளத்தில் தந்தை மகன் போலீல் காவலுக்கு பிந்தைய நீதிமன்ற காவலின்போது உயிரிழந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அசாதாரணமான ஆணையாக பார்க்கப்படுகிறது.

வாழ்வாதாரமின்றி தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய ரஜினிகாந்த்

ரஜினி

தனது குழந்தையின் கல்விக்காக உதவிக் கேட்டு ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில தினங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்களும் நிறைய பேர் ரஜினி வீட்டு வாசலில் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது முதல், ரஜினி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது போயஸ் கார்டன் வீட்டு முன்பு ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அதில் ஒரு பெண்ணும் நின்றிருந்தார்.. திருச்சியைச் சேர்ந்த அவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவர் பெயர் கெளரி ராமையா. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஆனால், சமீப காலமாக எந்த வேலையும் இல்லாமல் இந்த பெண் அவதிப்பட்டு வந்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தனது குழந்தையில் கல்வி செலவுக்கு உதவி கேட்டுக் காத்திருந்துள்ளார். மகன் 11வது வகுப்பும், மகள் 10-ம் படிக்கும் படிக்கிறார்கள். தற்போது பள்ளி திறக்காமல் இருப்பதால், வாட்ஸப் மூலம் படித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்லி விட்ட நிலையில், கௌரி ராமையாவிடம் இதற்கு செல்போன் வாங்குவதற்குக் கூட பணம் இல்லாமல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தனக்கு அரசு வழங்கியிருந்த மாற்றுத்திறனாளி 3 சக்கர சைக்கிளும் பழுதாகி விட்டதால், எங்குமே செல்ல முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.

அவர் பயணிப்பதற்கு அரசு கொடுத்த மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் முற்றிலும் பழுதாகி விட்டதால் அதைப் பயன்படுத்தி எங்கும் காய்கறி வியாபாரம் செய்யக் கூட நடந்து செல்ல முடியவில்லை. ஆஸ்துமா நோய் காரணமாக அவரது கணவரால் பணிக்குச் செல்ல முடியவில்லை. அவருக்கு மருந்தும் வாங்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களிடம் உதவிகளை பெறலாம் என்பதற்காக சென்னை வந்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரை சந்திக்க முற்பட்டுள்ளார்.

இதையறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது உதவியாளர் மூலம் அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கான நிதியுதவியை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, ரஜினி ரசிகர் ரஜினிபாலு, அந்த ரசிருக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் செல்போன் வாங்கிக் கொடுத்து ரஜினி சார்பில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு - என்ன பேசினார்?

தமிழருவி மணியன்

பட மூலாதாரம், Tamilaruvi Manian FB

ரஜினிகாந்தின் உடல்நிலையில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியல் முடிவு குறித்து சிந்தியுங்கள் என கூறியிருப்பதாக அவரை சந்தித்து விட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து தகுந்த நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் எனக் கூறினார். விரைவில் இது தொடர்பாக ரஜினிகாந்திடமிருந்து அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் புதன்கிழமை (டிசம்பர் 2 ) போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திடம் அரசியல் தொடர்பாக பேசியவற்றை வெளியிட மறுத்தார்.

மேலும், "தமிழக மக்களிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் ரஜினிகாந்திற்கு கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ, அதை அவ்வப்போது சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது" என்று தமிழருவி மணியன் கூறினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதை அவர் சொன்னால்தான் தானும் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறிய தமிழருவி மணியனிடம், அவரது உடல்நலத்தில் அக்கறை உள்ள மனிதராக என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோது, "அவரது உடல்நலனில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியலுக்கு வருவது பற்றி சிந்தியுங்கள் என சொல்லிவிட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :