வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் காரணமாக சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது.

பட மூலாதாரம், ARUN SANKAR / getty images

படக்குறிப்பு, நிவர் புயல் காரணமாக சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது.

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தளவுப்பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என்றும், நாளை மறுநாள் (நவம்பர் 30) தென்தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

டிசம்பர் ஒன்றாம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் , தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கணித்துள்ளது.

நவம்பர் 30, டிசம்பர் 01 மற்றும் டிசம்பர் 02 ஆகிய தேதிகளில் சூறாவளிக் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் கடல் பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், டிசம்பர் 2 வரை அந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மேலதிக விவரங்களை அறிய imdchennai.gov.in இணையதளத்தை காணவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நிவர் புயல், கொரோனா தொற்று: தமிழகம் தாக்குப்பிடித்தது எப்படி?

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்க ரூ.7,525 கோடி செலவு செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

நிவர் புயல்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் தலைமை செயலகத்தில், நிவர் பேரிடர் மற்றும் கொரோனா பெருந்தொற்று குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், சேதம் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

நிவர் புயலால் இறந்த நான்கு நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டதாகவும், பயிர்ச் சேதம் மட்டுமல்லாமல், கால்நடைகள் இறந்துபோயிருந்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

பேரிடர் காலத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி, நிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றார்.

கொரோனா பரவல் கட்டுப்பாடு குறித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதால், கோவிட் -19 அறிகுறி தென்பட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் தொற்று குறைக்கப்பட்டது என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

''நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருவேளையும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து கபாசூரக்குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா மாதிரி சேகரிப்பில் இந்திய அளவில் அதிக மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தோம். ஒவ்வொரு நாளும் சுமார் 70,000 மாதிரிகளை சோதனை செய்தோம். அதிகபட்சமாக 95,000 மாதிரிகளை சோதனை செய்தோம். இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வகம் தமிழகத்தில்தான் அமைந்துள்ளது. 67 அரசு மற்றும் 153 தனியார் ஆய்வகங்கள் செயல்படுகின்றன,'' என்றார் அவர்.

கொரோனா காலத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் 13 முறை இணையவழியில் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் மருத்துவக் குழுவினருடன் 10 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மூத்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

பேரறிவாளன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனை ஒன்றில் இம்மாதத்தில் இரண்டாம் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த குயில்தாசன் - அற்புதம் அம்மாள் மகனான இவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.

இதையடுத்து பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன் ஜோலார்ப்பேட்டையில் உள்ள தமது வீட்டில் இருந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று விழுப்புரம் வந்து மரகதம் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, சிறுநீர்ப் பாதை தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த பேரறிவாளன் அது தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு டிசம்பர் 7ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுநீரக தொற்று காரணமாக இரண்டாவது முறையாக பேரறிவாளன் விழுப்புரத்திலுள்ள மரகதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :