ஜல்லிக்கட்டு மலையாள படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை - கேரளாவில் சர்ச்சையான மாடு பிடி கதை

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், JALLIKATTU TEAM

(இன்றைய நாளில் உலக அளவிலும் இந்திய அளவிலும் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படம் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளிவந்த இந்த படம், இன்டர்நெட் ஓடிடி தளங்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அங்கமாலி டைரிஸ் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஜல்லிக்கட்டு படம் மலையாள மொழியில் வெளியானது.

கடந்த ஆண்டு ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ஸோயா அக்தர் இயக்கிய இந்தி படமான கல்லி பாய், ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருது பரிந்துரை வரை சென்ற படங்கள். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மலையாள படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

கேரளாவில் இடுக்கி பகுதிக்கு அருகில் ஒரு மலை கிராமத்தில் கசாப்புக் கடைக்கு வந்த எருமை மாடு ஒன்று வெட்டப்படப்போகும் முன் கடைசி நேரத்தில் தப்பித்துவிடுகிறது. இதன்பின் அது செய்யும் அட்டகாசமும், அதைப்பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் ஒரு கிராமமே அலைவதுதான் படத்தின் கரு. இதை பரபரப்பு, பதற்றத்துடன் கதையாக சொல்லியிருப்பதுதான் படத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

இயக்குநர் லிஜோவுக்கு இது ஏழாவது படம். இந்த படத்தின் தலைப்புக்காகவே அதன் மீதான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் வங்கியுடன் இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல்

லக்ஷ்மி விலாஸ்

பட மூலாதாரம், LAKSHMI VILAS BANK

சென்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க இந்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த வங்கியில் டெபாசிட்தாரர்களின் நலன் மற்றும் வங்கியின் நிதி நிலை ஸ்திரத்தன்மை சரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு அதை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. வங்கியின் வாரா கடன் தொகை அதிக அளவில் இருப்பதால் அதன் பரிவர்த்தனை செயல்பாடுகளுக்கு 30 நாட்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதனால், வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து டிசம்பர் 16ஆம் தேதி வரை அதிகபட்சமாக ரூ.25,000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என அறிவித்தது.

அந்த வங்கியின் வாரியக்குழு முடக்கப்பட்டு கனரா வங்கியின் முன்னாள் தலைவர் மனோகரனை சிறப்பு அதிகாரியாக இந்திய நிதியமைச்சகம் நியமித்தது.

இந்த நிலையில், லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆசியாவில் முன்னோடி நிதி நிறுவனமாக அறியப்படும் டிபிஎஸ் வங்கி, 18 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கி இணைப்பு மூலம் அதன் கிளைகளின் எண்ணிக்கை 600 ஆக உயரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :