தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் - முதல்வர், துணை முதல்வர் உறுதி

தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த் தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றை துவக்கிவைக்கும் விழா இன்று மாலை நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

`அதிமுக ஆட்சி தொடரும் என நம்பிக்கை`

விழாவில் பேசிய அமித் ஷா, கொரோனாவை கையாளுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது எனவும் தமிழகத்தில் ஆதிமுக ஆட்சி தொடரும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

''முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்," என அமித் ஷா தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, திமுக என்ன சாதனை செய்தது என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, சாதனை பட்டியலை தரமுடியுமா என சவால் விடுத்துள்ளார். ''மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது? திமுகவினர், பாஜகதான் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது என்று கூறுவார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பத்து ஆண்டுகளில், திமுகவினர் என்ன சாதனைகளை செய்தார்கள்? சாதனை பட்டியலை திமுக தரட்டும். திமுக கூட்டணியில் இருந்த போது, மன்மோகன் சிங் அரசு ரூ.16,156 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது பாஜக ஆட்சியில், தமிழகத்திற்கு ரூ.32,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்கு முன்பு, திமுக தங்களின் குடும்பத்தை திரும்பி பார்க்கட்டும் என்று கடுமையாக பேசினார் அமிஷ் ஷா.

தமிழகத்தின் கொரோனா கால செயல்பாட்டை பாராட்டிய அமித் ஷா, கொரோனா காலத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் கவனிப்பு தமிழ்நாட்டை போல வேறு எந்த மாநிலத்திலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகிய குறியீடுகளில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது என்றார் அமித் ஷா.

மாநிலங்களுக்கு இடையான போட்டியில் தமிழகம் முன்னிலை வகிப்பதை போல, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில், வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன என்றும் அவர் பேசினார்.

கூட்டணி தொடரும்

முன்னதாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார். மேலும் அதிக இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் முதல்வர் பழனிசாமி.

''நீர் மேலாண்மை திட்டங்களுக்குத் தமிழக அரசு அதிக கவனம் எடுத்து கொண்டதால், தற்போது தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது என்றும் மத்திய அரசின் விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. மத்திய அரசின் பங்கேற்போடு, தமிழக அரசு, சென்னை நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது வழித்தடம் அமைக்கவுள்ளது,'' என்றார் முதல்வர் பழனிசாமி.

மேலும்,தமிழ்நாட்டில் ரூ.1,433 கோடியில் 6000கும் மேற்பட்ட நீர் நிலைகள் குடிமராமத்துத் திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், தமிழக அரசு எடுத்த முயற்சியால், முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதன்மூலம், 65,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசு மற்றும் மத்திய பாஜக அரசு இனைந்து செயல்படுவதால் வளர்ச்சிகள் சாத்தியமானது என்று குறிப்பிட்டார். அதேநேரத்தில், 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார்.

நீர் மேலாண்மை மற்றும் அரசின் செயல்பாடுகளுக்காகப் பல விருதுகளைத் தமிழக அரசு வாங்கி குவித்துள்ளது என்றும், மக்களின் நலனுக்காக மேலும் உழைக்கும் என்றும் அதற்கு சாட்சியாகத்தான் இந்த விருதுகள் வந்துசேர்ந்துள்ளன என்றும் பேசினார் ஓபிஎஸ்.

இந்த விழாவிற்குப் பிறகு அமித் ஷா தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவரை சந்தித்தனர். அதன்பின் அங்கு பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஹெச். ராஜா, இல. கணேசன், கரு. நாகராஜன், நடிகை குஷ்பு, நடிகை நமீதா, வானதி ஸ்ரீனிவாசன், ஆகியோர் பங்கேற்றனர்.

பின் குஷ்பு உட்பட புதியதாகக் கட்சியில் சேர்ந்தவர்கள் அமித் ஷாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், "தொடர்ந்து பாஜக தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிகம் பேர் கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர் பாஜக ஒரு வலுவான கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என நம்பிக்கை உள்ளது." என தெரிவித்தார் பேசினார்.

முன்னதாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த அமித் ஷா, விமான நிலையத்திற்கு வெளியில் வந்த அவர் சிறிது தூரம் சாலையில் இறங்கி நடந்துவந்தார்.

விமான நிலையத்தில் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். அமித் ஷாவை வரவேற்பதற்காக கிண்டி கத்திபாரா மேம்பாலத்திலிருந்தே பா.ஜ.க., அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த அமித் ஷா, தனது வாகனம் ஜிஎஸ்டி சாலையை வந்தடைந்தவுடன், வாகனத்தை நிறுத்தி, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவருக்காக காத்திருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற அவர், பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறி, தனியார் தங்கும் விடுதியைச் சென்றடைந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் நடந்துவந்தபோது அவர் மீது பதாகையை வீசியதாக நங்கநல்லூரைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக அமித் ஷாவின் தமிழக வருகையையொட்டி GoBackAmitShah எனும் ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அவருக்கு ஆதரவாக TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டேகிலும் ட்விட்டரில் பதிவிடப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :