You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சொல்வது என்ன?
- எழுதியவர், மாலன்
- பதவி, மூத்த ஊடகவியலாளர்
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
அன்று இரவு ஐ.பி.எல். இறுதிப் போட்டி. அது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தினமாக இல்லை என்றால் நகத்தைக் கடித்துக் கொண்டு நாற்காலியின் விளிம்பில் அமர்ந்து கிரிக்கெட் போட்டி முடிவுகளைக் காணத் தொலைக்காட்சியில் கண் பதித்துக் காத்திருந்திருக்கும் தேசம்.
ஆனால் நவம்பர் 10ஆம் தேதி இரவு நாடு பிகார் தேர்தல் முடிவுகளைக் காண அதே ஆவலோடு காத்திருந்தது. காரணம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக ஏற்றமும் இறக்கமுமாக, தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தன.
இறுதியில் ஆட்ட நாயகன் மோதி, நிதீஷ் குமாருக்கு ஆட்சியைப் பெற்றுத்தந்தார் என டைம்ஸ் ஆப் இந்தியாவின் தலைப்புச் செய்தி அறிவிக்கிறது (Modi hits a six for Nitish in thriller).
பிகார் தேர்தல் முடிவுகளை நான்கைந்து வரிகளில் சொல்லிவிடலாம்:
1. நிதீஷ்குமார் கட்சியின் பலம் சற்றொப்ப பாதியாகக் குன்றியிருக்கிறது (2015ல் 71: 2020ல் 43) என்றாலும் அவர் நான்காம் முறையாக முதல்வராகிறார்
2. பா.ஜ.கவின் பலம் சற்றொப்ப 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது (2015ல் 53; 2020ல் 74) கம்யூனிஸ்ட்கள் நீங்கலாக மற்ற அனைத்துக் கட்சிகளின் ஸ்டிரைக் ரேட் (போட்டியிட்ட மொத்த இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி என்ற சதவீதம் ) குறைந்திருக்கிற சூழலில் பாஜகவின் ஸ்டிரைக் ரேட் கூடியிருக்கிறது. பிஹாரில் அது ஒரு முக்கியக் கட்சியாக முதன்மை பெறுகிறது.
3. காங்கிரஸ் கரைந்து வருகிறது. அதன் பலவீனம், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது.
4. சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்க முடியும். உருள் பெருந் தேருக்கு அச்சாணி அன்னார்.
ஆனால் பிகார் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள் பல உள்ளன. குறிப்பாகத் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும்.
தொடர்ந்து ஆள்வது தோல்விக்கு உத்திரவாதமல்ல
தொடர்ந்து ஆட்சியில் இருந்துகொண்டே தேர்தலைச் சந்திப்பது ஒரு தலைவருக்கு அல்லது கட்சிக்குச் சவாலானது என்ற ஒரு கருத்து அரசியல் நோக்கர்களிடையே உண்டு. அதை அவர்கள் ஆட்சிக்கு எதிரான மனநிலை (anti - incumbency) என்ற சொற்றொடரால் குறிப்பதுண்டு.
அது ஒரு காலகட்டம் வரையில் உண்மையாக இருந்ததும் உண்டு, கேரளத்தில் மார்க்சிஸ்ட்கள் தலைமை தாங்கிய இடது முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியும் மாறிமாறி ஆட்சியில் அமர்வதுண்டு. தமிழ்நாட்டிலும் எம்.ஜி.ஆர் மறைவுக்க்குப் பின் 1989லிருந்து 2011 வரை தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாறிமாறி ஆட்சி நடத்தின.
ஆனால் இதற்கு விலக்குகளும் உண்டு. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தொடர்ந்து 23 ஆண்டுகள் (1977-2000) முதல்வராக இருந்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்திருக்கிறார்.
நிதீஷ் குமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருவது இந்தத் தேர்தலில் அவருக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
அந்தக் கணிப்பு ஓரளவிற்குச் சரியே. ஆனால் தேர்தல் உத்திகளைச் சரியாகத் திட்டமிட்டால் அந்தப் பின்னடைவை வெற்றியாக மாற்ற முடியும் என்பதை பிகார் தேர்தல் இன்னொரு முறை நிரூபிக்கிறது.
கடந்த சில தேர்தல்களாக இந்தியாவில் ஓசையில்லாமல் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வாக்காளர்களில் பெண்கள் ஏறத்தாழ ஆண்களுக்கு சரியளவில் இருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் அளவிற்கு அவர்கள் வாக்களிக்க வருவதில்லை என்ற நிலை இருந்து வந்தது.
கடந்த சில தேர்தல்களாக அது மாறிவருகிறது. ஆண்கள் வாக்களிப்பதற்கும் பெண்கள் வாக்களிப்பதற்குமிடையே ஒரு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்று முடிவை அவர்கள் அரசியலை மாத்திரம் கணக்கில் கொண்டு எடுப்பதில்லை.
தங்கள் அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய நலத்திட்டங்களைக் - குடிநீர், சமையல் எரிவாயு, போக்குவரத்து, மருத்துவம் போன்றவற்றைக் - கருத்தில் கொண்டு வாக்களிக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஜெயலலிதா ஆட்சியிலிருந்தவாறே 2016ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
அதேபோல் 2019 மக்களவைத் தேர்தலில் மோதி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெறுவதற்குப் பெண்களின் வாக்குகள் காரணமாக இருந்தன.
இதே உத்தியை நிதீஷ் - பாஜக கூட்டணி இந்த பிகார் தேர்தலில் மேற்கொண்டது. இந்தியாவில், யார் எவருக்கு வாக்களித்தார்கள் என்பதை ஆதாரபூர்வமாக அறிய முடியாத ரகசிய வாக்கு முறை பின்பற்றப்படுகிறது.
ஆனால் வேறு தரவுகளைக் கொண்டு இதனை ஓரளவு ஊகிக்க முடியும் பிகாரில் இம்முறை பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களித்துள்ளனர். (ஆண்கள்: 54.7% பெண்கள் 59.9%) ஆனால் மூன்று கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவில் முதல் கட்டத்தில் ஆண்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தனர் (ஆண்கள் 56.8%, பெண்கள் 54.4%). அந்தத் தொகுதிகளில் நிதீஷ் - பாஜக கூட்டணி அடி வாங்கியிருக்கிறது.
அப்படி ஆகக் கூடும் என்பதைக் களநிலவரங்கள் மூலம் ஊகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் பெண்களை வாக்களிக்கத் திரட்டியது. அதனால் இரண்டாம் கட்டத்தில் பெண்களின் வாக்குப் பதிவு 58.8% ஆக உயர்ந்தது (ஆண்கள் 52.9%) மூன்றாம் கட்டத்தில் அது 65.5% என அதிகரித்தது.
பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் (தமிழ் நாட்டைப் போலவே), ஊராட்சிப் பதவிகளில் 50% இட ஒதுக்கீடு (தமிழ்நாடு போலவே) நிதிஷ்குமார் அரசு அளித்திருக்கிறது.
மோதி தனது பிரசாரத்தில் மின்சார வசதி, குடிநீர் வழங்கல் இவற்றோடு பெருந்தொற்றுக் காலத்தில் அளிக்கப்பட்ட இலவச ரேஷன் பொருட்கள், ஜன்தன் கணக்கு மூலம் அளிக்கபட்ட நிதி உதவி இவற்றைக் குறிப்பிட்டு பேசினார். பிகாரில் கொண்டாடப்படும் பண்டிகையான சாத் வரை இலவச ரேஷன் தொடரும் என் அறிவித்தார்.
இதனால் அறியப்படும் செய்தி என்னவென்றால், களத்தை நுட்பமாக நிர்வகித்தால் (micro management) ஆட்சியிலிருந்து கொண்டு தேர்தலை சந்தித்தாலும் மீண்டும் வெற்றிபெற முடியும்.
யாருடன் கூட்டணி என்பது முக்கியம்
நமது அமைப்பில் தேர்தல் கூட்டணிகள் என்பது கொள்கைக் கூட்டணிகள் அல்ல அவை தேர்தல் கணக்குகளின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் தெரிந்த உண்மை. அங்கு களப்பணிக்கு பலன் உண்டு.
பழம் பெருமைகள் எடுபடாது. காங்கிரஸ் பிகாரை நெடுங்காலம் ஆண்ட கட்சி. முதல் தேர்தல் நடைபெற்ற 1951லிருந்து 1990 வரை (இடையில் 1977முதல் 1980 வரையிலான மூன்றாண்டுகள் நீங்கலாக) பிகாரை ஆண்ட கட்சி. ஆனால், நாடெங்கிலும் காணப்படுவதைப்போல அது இன்று பெருமளவில் மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டது.
தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கேட்ட இடங்களைக் கொடுப்பதற்காக கூட்டணியில் இருந்த இரு சிறு கட்சிகளான முன்னாள் முதல்வர் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா என்ற கட்சிக்கும், விகாஸ்ஷீல் இன்ஸான் கட்சிக்கும் இடங்களை குறைத்தது.
அந்த இரு கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க. - நிதீஷ் கூட்டணியில் இணைந்து கொண்டன. அவை தலா நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த எட்டு இடங்களின் காரணமாக தேசிய ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை உறுதி பெற்றிருக்கிறது. இவை இல்லை என்றால் அந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிட்டியிராது.
இந்தக் கட்சிகளுக்கு இடங்களை மறுத்து காங்கிரசிற்கு 70 இடங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசிற்கு இடங்களைக் குறைத்துக் கொண்டு இந்தக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால் இன்று ஒருவேளை தேஜஸ்வி ஆட்சியில் அமர்ந்திருக்கலாம்.
சிறிய கட்சிகளுக்குப் பெரிய பங்குண்டு
சிறிய கட்சிகள்/ கூட்டணிகளால் தனித்து வெற்றிபெற முடியாமல் போகலாம். ஆனால் அவற்றால் சில கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்க முடியும். ஏறத்தாழ சமபலம் கொண்ட இரு கட்சிகளோ இரு கூட்டணிகளோ மோதும் அலையில்லாத தேர்தலில் சிறுகட்சிகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் இதைத் தமிழ்நாட்டில் பார்த்தோம். இம்முறை பிகாரிலும் இது நடந்திருக்கிறது.
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி (LJP) ஒருபோதும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவின் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்றது.
இம்முறை அது தனியாக 134 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் பா.ஜ.கவிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராகக் களமிறங்கியது. அவரை கடுமையான மொழிகளில் விமர்சனம் செய்தது. பா.ஜ.கவிடம் டிக்கெட் கேட்டு மறுக்கப்பட்டவர்களைத் தனது வேட்பாளராக அறிவித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளைப் பிரித்தது. ஆனால், அந்த வாக்குகள் LJP-க்குப் போகவில்லை. மாறாக ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்குச் சென்றன. அது கூடுதலான இடங்களைப் பெற்றது.
லோக் ஜன்சக்தி கட்சியினால் குறைந்தது 23 இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இதேபோல மகா கட்பந்தனின் வாய்ப்பை ஓவாசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி பாதித்துள்ளது. அந்தக் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது.
பிகார் அரசியலுக்கும் தமிழக அரசியலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. வலுவான மாநிலக் கட்சிகள், உதிரி உதிரியான சிறுகட்சிகள், மாறி மாறி அமைந்த கூட்டணிகள், வாரிசு அரசியல், ஜாதி அரசியல், கணிசமான அளவில் தலித்துகள், சிறுபான்மையினர், இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள், வாக்காளர்களில் கணிசமான அளவு பெண்கள் எனப் பல ஒற்றுமைகள் உண்டு.
பிகார் தேர்தல் முடிவுகளும் அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான செய்திகளைக் கொண்டிருக்கின்றன. கூர்ந்து அவதானித்தால் அவற்றைக் கண்டுகொள்ள முடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: