நிதிஷ் குமார்: "இன்ஜினியர் பாபு" தொடர் முதல்வராக இருக்க நகர்த்திய 'அரசியல் காய்கள்'

    • எழுதியவர், கீர்த்தி தூபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நிதிஷ் குமார் 2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, பூர்னியா தொகுதி தேர்தல் பரப்புரையின்போது, "இதுதான் எனது கடைசி தேர்தல் பிரசார தினம். இதுதான் எனது கடைசி தேர்தல். எல்லாம் நல்லபடியாக நடக்கும்," என்று தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு வெளிவந்ததுமே, பிஹார் அரசியலில் உள்ள பலரும் அவரது அரசியல் காட்சி முடிவுக்கு வருவது போல கருதினார்கள். ஆனால், வேறு சிலரோ, நிதிஷ் வாக்காளர்களை மீண்டும் ஒருமுறை ஈர்க்க உணர்ச்சிபூர்வமாக ஈர்க்கப் பார்ப்பதாகக் கருதினார்கள்.

ஐக்கிய ஜனதா தளத்தின் கடந்த 20 ஆண்டு கால அரசியலை உற்றுப் பார்த்தால், அந்த கட்சி, ஆட்சியிலும் அதிகாரத்திலும் தொடர்ந்து நீடிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை புரிந்து கொள்ள முடியும். நிதிஷ் குமாருக்கு அந்த உத்தி அத்துப்படி. எப்போது, எங்கு, எப்படி பேசினால் காரியம் நடக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் அவர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பாட்னாவில் உள்ள சமூக அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டி.எம். திவாகர், நிதிஷ் குமாரின் அரசியலை வெகு காலமாக கூர்ந்து நோக்கி வருபவர். "நிதிஷ் குமார், எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய அரசியல் தலைவர் கிடையாது. அவர் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் சிந்தித்து பேசக்கூடியது," என்று கூறினார்.

"தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் வாக்காளர்களிடம் பேசும் முன்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் உள்கட்சி ஆய்வில், அரசியல் காற்று தங்களுக்கு சாதகமாக இருக்காது என கூறப்பட்டிருந்தது. இது ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மக்களின் பிரதிபலிப்பா? இதை சரி செய்ய என்ன செய்யலாம் என அக்கட்சியினர் சிந்தித்தனர். அதன் வெளிப்பாடாகவும் நிதிஷ் குமாரின் அரசியல் பேச்சு இருக்கலாம்," என்கிறார் பேராசிரியர் திவாகர்.

ஆனால், பிகார் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்ட போது, எதிர்பார்த்தது போல மிகவும் மோசமான நிலைக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி செல்லவில்லை என்பதை ஜேடியு கட்சியினர் உணர்ந்தனர்.

அரசியல் கூட்டணிகளுக்கு இடையே செய்து கொள்ளும் வசதிகள் போல, ஒருவேளை தேர்தல் முடிவில் நிதிஷ் குமார் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காதபோது, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்டால் நிதிஷ் குமாரே முதல்வராக தொடருவார் என்று அக்கட்சித் தலைமை தெளிவாகவே கூறியது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் பரப்புரைகளின்போது நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தியே, பாஜகவும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலை சந்தித்தன.

வாழும் கலை சாணக்கியர்

2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்திருந்தது. அப்போது நடந்த பேரவைத் தேர்தலின்போது, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை காட்டாட்சி என்று முழக்கமிட்ட நிதிஷ் குமார், ஆட்சியில் இருந்த 15 ஆண்டுகளும் அவர்கள் மக்களை ஏமாற்றும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பேசியவற்றை சாதித்து நிறைவேற்றிக் காட்டினோம் என்று பரப்புரை செய்தார்.

அந்த தேர்தலில் காட்டாட்சிக்கும், நல்லாளுகைக்கும் இடையிலான மோதல் இது என்கிற முழக்கத்துடன் நிதிஷ் கட்சி வாக்காளர்களை சந்தித்தது.

பிஹாரில் உள்ள மூத்த பத்திரிகையாளர் மணிகாந்த் தாகூர், "2005 முதல் 2010ஆம் ஆண்டுவரை பிகாரில் ஏராளமான நலத்திட்டங்களை நிதிஷ் குமார் நிறைவேற்றி வாக்காளர்களைக் கவர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்கவை, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் திட்டம். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் தமது முதலாவது ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை அவர் செலவிட்டார். ஆனால், கடந்த ஏழரை ஆண்டுகளில் நிதிஷின் பதவிக்காலத்தில், ஊழல் மலிந்து காணப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் உள்ளது," என்று கூறினார்.

"பிஹாரின் கிராமப்புறங்களில் நிதிஷ் குமாருக்கு என தனி செல்வாக்கு இருந்தது. ஆனால், இரண்டாவது முறையாக பதவிக்கு வந்தபோது ஊழல் கறைபுரண்டதால், ஆட்சியில் தொடர, நிதிஷ் நடத்தும் நாடகமே அவரது வாய் ஜாலங்கள் என்று, மக்களில் பலர் பேசத் தொடங்கினர்" என்று மணிகாந்த் தாகூர் சுட்டிக்காட்டுகிறார்.

2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடந்தபோது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், தனித்து தேர்தல் களம் கண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றிக் கனியை அவரால் பறிக்க முடியவில்லை.

ஆனால், இதை வேறு விதமாக பார்க்கும் பேராசிரியர் டி.எம். திவாகர், "அந்த தேர்தலில் போதிய மேல் தட்டு மக்களின் வாக்குகள் கிடைக்காததை அடுத்து, ஜித்தின் ராம் மன்ஜியை முதல்வராக்கினார் நிதிஷ். இதன் மூலம் அந்த சமூகத்தைச் சேர்ந்த முதல்வரை ஆட்டி வைக்கும் சூத்திரதாரியாக தான் இருப்பதாக பட்டியலின மக்களிடையே நிதிஷ் காட்டிக் கொண்டார்," என்றார்.

2014ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் பதவியில் இருந்து இறங்கிய நிதிஷ், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜித்தின் ராம் மன்ஜியை பதவியில் இருந்து இறக்க, 130 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

'ஜனதா தளம் மீண்டெழும் வாய்ப்பு'

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாரதிய ஜனதா கட்சி ஒழிக்கப்பார்த்தது என்று குற்றம்சாட்டுகிறார் சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் தமிழக பிரிவு தலைவர் ராஜகோபால்.

"ஒரு காலத்தில் ஜனதா தளம் ஆதரவு கொடுத்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்க முடிந்தது. ஆனால் ஜனதா தளத்தை சுக்கு நூறாக பாரதிய ஜனதா உடைத்துப் போட்டுவிட்டது. தற்போது பிகாரில் நடந்து கொண்டிருப்பது ஜனதா தளத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக அமையும்." என்றார் அவர்.

"தேஜஸ்வியும் சரி, நிதீஷ் குமாரும் சரி ஜனதா தளம் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதனால் அவர்களது கூட்டணியை முரண்பாடுகளைக் கொண்டதாகக் கருத முடியாது." என்றார் அவர்.

ஜனதா தளம் என்ற கட்சி ஒருங்கிணைந்து மீண்டெழுந்தால் அதுவே தேசிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

சதுரங்கம் ஆடிய நிதிஷ்

பிகாரில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வந்த லாலு பிரசாத் யாதவ் கட்சியை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தில் அமர வேண்டுமானால், அதற்கு தனித்து அரசியல் செய்வது பலன் கொடுக்காது என்பதை உணர்ந்த நிதிஷ். ஜெயபிரகாஷ் நாராயணின் அரசியல் பள்ளியில் கற்றுக் கொண்ட படிப்பினையின் விளைவாக, லாலு கட்சியுடனேயே நிதிஷ் தேர்தல் உறவு வைத்துக் கொண்டார்.

சமூக நீதிக்கான வளர்ச்சி என்ற முழக்கத்தை அந்த இரு தலைவர்களும் முன்வைத்து மக்களை சந்தித்தார்கள். தனது அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார்.

ஆனால், தேஜஸ்விக்கு எதிரான ஊழல் புகார்களோடு மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நிதிஷ் குமார் அளித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார். அதன் விளைவாக தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை இழந்தார்.

ஆனால், பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த மறுதினமே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்ந்தார் நிதிஷ் குமார். இதே நிதிஷ்தான் அதற்கு முந்தைய தேர்தலில் வாக்காளர்களை சந்தித்தபோது, நான் மண்ணுக்குள் புதைவேனே தவிர, பாஜகவுடன் மீண்டும் அணி சேர மாட்டேன் என்று முழங்கியவர்.

இதன் காரணமாகவே நிதிஷ் குமாரை சந்தர்ப்பவாதி என்று தனது அரசியல் மேடைகளில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்து வந்தார்.

லாலு, நிதிஷ் நட்டு மலர்ந்த காலத்தில், நிதிஷை 'மாமா' என்றே பதின்ம வயதைக் கடந்திருந்த தேஜஸ்வி அழைத்து வந்தார். இப்போது வளர்ந்து முப்பது இறண்டு வயதை கடந்த நிலையில், அதே நிதிஷுக்கு எதிராக இதுநாள்வரை அரசியல் காய்களை நகர்த்தி வந்தார் தேஜஸ்வி.

இப்போது மீண்டும் தேஜ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடம்பெற்ற மகாகத்பந்தன் அணியுடன் அரசியல் உறவைக் கொண்டு புதிய ஆட்சிக்கு அடித்தளமிட்டிருக்கிறார் நிதிஷ் குமார்.

"இன்ஜினியர் பாபு"

அரசியலில் விட்டுக் கொடுப்புகள், சதுரங்க ஆட்டங்கள் போல மாறி வந்தாலும், அணிகள் மாறி வாக்கு கேட்கும் தலைவர்களை பிகார் மக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே பார்த்து வருகின்றனர்.

1951ஆம் ஆண்டு பாட்னா நகரை அடுத்த பக்தியார்பூரில் பிறந்தவர் நிதிஷ் குமார். பிகார் பொறியில் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த அவர், அரசியலுக்கு நுழைந்த காலத்தில் இன்ஜினியர் பாபு என்றே அழைக்கப்பட்டு வந்தார். இன்றளவும் பிகாரின் தொலைதூர கிராமங்களில் அந்தப் பெயருடனேயே நதிிஷ் அறியப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: