இரண்டாம் குத்து - சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: சந்தோஷ் பி ஜெயகுமார், டேனியல் ஆனி போப், மீனாள், ஷாலு ஷாமு, கரீஷ்மா கௌல், ஆகிரிதி சிங், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கம் புலி;

இயக்கம்: சந்தோஷ் பி ஜெயகுமார்.

தமிழில் 'அடல்ட் காமெடி' என்ற வகையில் வரும் திரைப்படங்கள் மிக அரிது. ஆகவே, 'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' என சந்தேஷ் பி ஜெயகுமார் இயக்கிய படங்களுக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. அதே பாணியில் அவர் இயக்கியிருக்கும் அடுத்த படம், 'இரண்டாம் குத்து'.

சந்தோஷும் டேனியலும் நண்பர்கள். இருவருக்கும் திருமணமானவுடன் தேனிலவுக்காக தாய்லாந்து சென்று அங்கே ஒரு வீட்டை எடுத்துத் தங்குகிறார்கள்.

அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. ஆசை நிறைவேறாமல் செத்துப்போன அந்தப் பேய், இருவரும் தன்னோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது.

அப்படி உறவு வைத்துக்கொள்பவர்கள் செத்துப்போவார்கள் என்றும் சொல்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து நண்பர்கள் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் கதை.

அடல்ட் காமெடி என்பதை செக்ஸ் குறித்து கொச்சையான சொற்களில் பேசுவது என்று இயக்குநர் புரிந்துகொண்டுவிட்டார் போலிருக்கிறது. அவரது முதலிரண்டு படங்களிலும் இந்தப் பிரச்சனை ஆங்காங்கு இருக்குமென்றாலும், இந்தப் படத்தில், எல்லாப் பாத்திரங்களும் படம் நெடுக இதே பாணியில் பேசி வெறுப்பேற்றுகிறார்கள்.

தவிர, படம் முழுக்க ஓரினச் சேர்க்கை குறித்து செய்யப்படும் கேலியும் கிண்டலும் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. ஒரு பேய் - காமெடி படத்தில் முதல் அரை மணி நேரத்தை இதற்கே செலவிட்டிருக்கிறார் இயக்குநர்.

இது போன்ற அம்சங்களே படத்தைக் காப்பாற்றிவிடும் என நினைத்தாலோ என்னவோ கதை, திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு காட்சிகூட சுவாரஸ்யமாக இல்லை.

படம் நெடுக கதாநாயகனும் நண்பனும் வசனங்களின் மூலம் சிரிக்கவைக்க ஏதேதோ முயற்சிகளைச் செய்கிறார்கள். ஓர் இடத்தில்கூட அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. பேய் அடிக்கடி வந்தாலும் ஒரு காட்சியில்கூட திகில் கிடையாது. பின்னணி இசையும் பாடல்களும் ரொம்பவும் சுமார் ரகம்.

கொரோனா காலத்திற்குப் பிறகு, தயங்கித் தயங்கி திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை இப்படி சோதித்தால் எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: