You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரரைப் போற்று குறித்து கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்: “பல இடங்களில் சிரிக்கவும், அழுகவும் செய்தேன்”
"சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்தேன். எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," என கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இவரின் கதையை தழுவிதான் சூரரைப் போற்று திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
"சூரரைப் போற்று திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன், கதையில் பெரும் கற்பனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் எனது புத்தகத்தின் சாராம்சம் தத்ரூபமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நிஜ ரோலர் கோஸ்டரை போல. எனது குடும்ப நினைவுகளை கண்முன் கொண்டுவந்த பல தருணங்களில் சிரிக்கவும் அழுகவும் செய்தேன்," எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கோபிநாத்.
அடுத்தடுத்து பதிவிட்டுள்ள ஐந்து ட்விட்டர் பதிவுகளில், திரைப்படத்தையும், அதில் நடித்த சூர்யாவையும், அபர்ணாவையும் மற்றும் இயக்குநர் சுதா கோங்குராவையும் வெகுவாக பாராட்டியுள்ளார் கோபிநாத்.
"தனது கனவை நினைவாக்கியே தீர வேண்டும் என்ற அசாத்திய எண்ணம் கொண்ட, தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற உறுதி கொண்ட கதாபாத்திரத்தை சூர்யா வலுவாக நடித்திருந்தார். இந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊக்கமளிக்கும் ஒரு திரைப்படமாக இது உள்ளது."
"முழுக்க முழுக்க ஒரு ஆணை மையப்படுத்திய கதையில் சூர்யா நாயகனாகவும், அதே சமயம் அதற்கு வலுவாக ஈடுகொடுக்கும் கதாபாத்திரத்தில் அவரின் மனைவியாக அபர்ணாவை நடிக்க வைத்து கதையை ஒரு உத்வேகமளிக்கும் நல்லுணர்வு வழியில் சமன்நிலை படுத்தியதற்கு இயக்குநர் சுதாவுக்கு பெரும் பாராட்டுக்கள்."
"அபர்ணாவால் நடிக்கப்பட்ட எனது மனைவி பார்கவியின் கதாபாத்திரம், நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென சுயமான சிந்தனைகளை கொண்ட, வலுவான பெண்மணியாக அதே நேரம் மென்மையான மற்றும் அச்சமற்ற பெண்மணியாக, கிராமத்து பெண்களுக்கு ஒரு முன்னோடியாக அது அமைந்துள்ளது. குறிப்பாக தங்களின் முயற்சியால் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இது ஒரு உத்வேகம்."
"பல முரண்பாடுகளை கொண்ட கிராமப்புறத்திலிருந்து வரும் ஒரு தொழில்முனைவோரின், தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான நம்பிக்கை சற்று நாடகத்தன்மையுடன் பதியப்பட்டிருந்தாலும் உண்மையை பிரதிபலிக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த கோபிநாத்?
சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியானது.
இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்.
இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.
அவர் இந்தக் கதைகளை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த கோபிநாத், துவக்கக் கல்வியை வீட்டிலேயேதான் பெற்றார். பிறகு நேரடியாக பள்ளிக்கூடத்தில் 5ஆம் வகுப்பில் சேர்ந்தார்.
அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, சைனிக் பள்ளியில் சேர்வதற்கு தேர்வெழுதி, அதில் வெற்றிபெற்றார் கோபிநாத். அப்போது அவருக்கு வயது வெறும் 11தான். இந்த முதல் வெற்றிதான் அவரது வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியது என்று சொல்லலாம். சைனிக் பள்ளியில் இருந்து நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி, அங்கிருந்து இந்திய ராணுவம் என அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்தார் கோபிநாத்.
கோபிநாத் ராணுவத்தில் கேட்பனாகப் பணியாற்றும்போதுதான், 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிழக்கு பாகிஸ்தான் தொடர்பாக யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் முன்னணி அதிகாரியாக செயல்பட்ட அனுபவமும் கோபிநாத்துக்கு இருக்கிறது.
ஆனால், யுத்தத்திற்குப் பிறகு தான் வாழ்வைத் தொடர்ந்து ராணுவத்திலேயே கழிக்க கோபிநாத் விரும்பவில்லை. 28 வயதிலேயே ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்.
ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்த காலகட்டம். நாம் ஏன் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை ஆரம்பிக்கக்கூடாது என நினைக்கிறார் கோபிநாத். அப்போது அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான முதலீடு ஏதும் அவரிடம் இல்லை.
இருந்தபோதும் முயற்சிகளைத் துவங்குகிறார் அவர். அது ஒரு இமாலயப் பணியாக அமைகிறது. குறிப்பாக, அரசின் ஒவ்வொரு துறைகளிடமும் அனுமதி வாங்குவதென்பது ஒரு சாகசக் கதையாகவே இருக்கிறது.
பிற செய்திகள்:
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: