இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி

இந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல்.

பட மூலாதாரம், Indian Army

ஜம்மு காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மூண்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த படையினர், பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் பக்கத்தில் மூன்று படையினரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறுகிறது.

தங்கள் பக்கத்தில் நான்கு படையினரும், நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறியதாக இரு நாட்டுப் படையினரும் ஒரு தரப்பை மற்றவர் குற்றம்சாட்டுகின்றனர்.

சண்டையில் தீப்பிடித்து எரியும் பகுதி.

பட மூலாதாரம், SDMA

இந்தியாவில் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் இத்தகைய மோதல் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே உள்ள குரெஜ், உரி ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக பாகிஸ்தானும் கூறியுள்ளது.

நீலம், ஜீலம் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தூண்டுதல் ஏதும் இல்லாமலே இந்தியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக முஜஃபார்பாத்தில் உள்ள மாநில பேரிடர் பாதுகாப்பு முகமை தமது தினசரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியத் தரப்பு மூன்று பாதுகாப்புப் படையினர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது தவிர பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மார்ட்டார் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தான் தரப்பு பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாகவும், அப்பாவி கிராமவாசிகள் வேண்டுமென்றே தாக்கப்பட்டதாகவும் இந்தியத் தரப்பு கூறுகிறது.

சண்டையில் தீப்பிடித்து எரியும் பகுதி.

பட மூலாதாரம், SDMA

இந்தியப் படையினர் கொடுத்த பலமான பதிலடியில் பாகிஸ்தான் படையின் உள் கட்டுமான வசதிகள், எரிபொருள், ஆயுதங்கள், தீவிரவாத மையங்கள் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் சொல்கிறது.

பாகிஸ்தான் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்த அறிக்கையில் இந்தியத் தரப்பு நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் படையினர், 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பொதுமக்களில் குழந்தைகளும் இருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது.

எல்லைப் பகுதியில் உள்ள கெரன் செக்டாரில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீநகரில் உள்ள இந்தியாவின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.

வட காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரன் செக்டாரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகத்துக்கிடமான நடமாட்டத்தை தங்கள் படையினர் பார்த்ததாகவும், இதனால் உஷாரான படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாகவும் ராஜேஷ் காலியா கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: