கோவிஷீல்ட்: 4 கோடி டோஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு - சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தகவல்
(இந்த பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியாவிலும் நடக்கும் செய்திகளின் முக்கிய தகவல்களின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.)

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் 4 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தயாரித்து வருகிறது.
இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துவிட்டதாக ஐசிஎம்ஆர் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து தற்போது பெரிய அளவில், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
"இந்த பரிசோதனை முடிவுகளில் கிடைக்கப்படும் நம்பகமான முடிவுகள் இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றுக்கான தீர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதுவரை இந்தியாவில் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டதில் கோவிஷீல்ட் மிக நவீனமானது." என சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் 40 மில்லியன் (4 கோடி) டோஸ் தடுப்பு மருந்தை ஏற்கனவே தயாரித்துவிட்டதாகவும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ப்ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் உருவாக்கிய கோவிட் தடுப்பு மருந்து, 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த ப்ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்தை 300 மில்லியன் டோஸ் அளவிற்கு வாங்க உத்தேசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை

பட மூலாதாரம், Getty Images
ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவ தகவல்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, "ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ தகவல்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.
மேலும் இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்," கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னைகள் தொடர்பான மருந்துகள் போன்றவற்றுக்கான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாகவும் வளர் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாகவும் அமைகின்றன. விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு வளர் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக உருவாகும் சூழல் உள்ளது. கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் மட்டுமின்றி உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கும் தேவையற்ற வகையில் பெண்களை ஆபாசமாக காண்பித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆகவே விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்தவும், மீறும் ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு, மறுஉத்தரவு வரும்வரை தள்ளிவைப்பு - தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு, மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தள்ளிவைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக எழுந்த ஆட்சேபம் குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகளை மாவட்ட அளவில் கேட்க பள்ளி நிர்வாகங்கள் மூலம் தமிழக கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், மறுஉத்தரவு வரும்வரை பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கை தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளது.
அதில், பள்ளிகள்/கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என வல்லுநர்களும், பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி /கல்லுhரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும், 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், 9.11.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த இருவேறு கருத்துக்களையும் கல்வித்துறை ஆராய்ந்து, 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது.
கல்லூரிகளின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி / பல்கலைக்கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- "சூரரைப் போற்று" கேப்டன் கோபிநாத்தின் கதை என்ன?
- நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களோடு போரிட்டார்களா?
- பிகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்குச் சொல்வது என்ன?
- அமெரிக்க அதிபராகவுள்ள பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?
- உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மரணம்: யார் இவர்?
- குறையும் ஸ்டிரைக் ரேட்: தேர்தல்களில் காங்கிரஸ் துணையா, சுமையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












