You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக, அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி, தன்னை காசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கூறியதை தொடர்ந்து, அவர் மீது மேலும், ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.
தற்போது கல்லூரி மாணவி அளித்த புகாரை தொடர்ந்து, காசி மீது ஆறு பெண்கள் பாலியல் மற்றும் ஒரு பண மோசடி புகார் என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி காவல் விசாரணை புதன்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் காசியை சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மேலும் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் காசியின் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களின் விவரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவிலில் முகாமிட்டு காசியிடம் இருந்து பறிமுதல் செய்த ஏராளமான ஆபாச காணொளிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் அதன் பிறகு காசியிடம் அதில் இருக்கும் பெண்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டதாகவும் கூறி அதன் விவரத்தை நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த புலனாய்வின்போது காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து 800க்கும் அதிகமான காணொளிகள் மற்றும் படங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காசியிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணை குறித்து பெயர் வெளியிட விரும்பாத சிபிசிஐடி அதிகாரி கூறுகையில், இந்த வழக்கில் தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறினார்.
ஆனால், இதுவரை 6 பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் காசி மீது புகார் அளித்துள்ளனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் அளிக்கும் பெண்களின் விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் என்று சிபிசிஐடி அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் காசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தானாக எந்த பெண்ணையும் தேடி சென்று தான் ஏமாற்றவில்லை, என் உடல் அழகை பார்த்து என் மீது ஆசைப்பட்டு வந்த பெண்களை நான் ஏமாற்றியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறினர்.
காசியை பொறுத்தவரை அவர் மீது ஆசைப்படும் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசமாக உரையாடுவது (SEX CHAT), அவ்வாறு உரையாடும் போது அவர்களின் அந்தரங்க போட்டோ வீடியோக்களை எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு கேட்பது அவரது பாணியாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
காசியின் பேச்சில் மயங்கிய பெண்கள் அவர்களுடைய புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பி வைக்கும்போது அதை பதிவு செய்து கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதில் சில பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது அதனை காணொளியாக பதிவு செய்து அதை வைத்தும் அந்த பெண்ணின் தோழிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு மிரட்டி சம்மதிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
காசி எவ்வளவு கொடூரமானவர் என்பது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளி மூலம் தெரியவந்துள்ளதாகவும் இயற்கைக்கு மாறாக பல பெண்களிடம் மிக கொடூரமாக காசி பாலுறவு கொண்டுள்ளது தெரிய வந்திருப்பதால் அவர் ஒரு செக்ஸ் சைக்கோவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
காசி மீது மற்றொரு பெண் அளித்த பாலியல் புகார் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பாலியல் காணொளி குறித்து காசியின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்க தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. மேற்கொண்டு இந்த செய்தி குறித்து வழக்கறிஞர் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அவருடைய கருத்துகளபிரசுரிக்கப்படும்.
பிற செய்திகள்:
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
- லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் ட்விட்டர்: இந்திய அரசு நடவடிக்கை பாயுமா?
- "புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது வருத்தத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கிறது" - அருந்ததி ராய்
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் ரத்து: குழப்பங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகள்
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- 4 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து தயாரிப்பு: சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தகவல்
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: