அர்னாப் ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்ற கதவுகள் திடீர் திறப்பு, ஒரே நாளில் உத்தரவு வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
மும்பையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை விசாரிப்பதற்காக, தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. கீழமை நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை அவசர விவகாரமாகக் கருதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தது. ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மனுக்கள் மீதான விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், மகாராஷ்டிரா அரசு, மும்பை காவல்துறை தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மூன்று பேரையும் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
ஆனால், நாட்டில் எத்தனையோ முக்கிய வழக்குகள் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, குறிப்பிட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவசர வழக்காக அவற்றை விசாரிக்க பட்டியலிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய துஷ்யந்த் தவே, "தலைமை பதிவாளரின் செயல்பாடு தொடர்பாக கடிதம் எழுதியதன் நோக்கம், ஒரு நபரை இலக்கு வைத்து அல்ல. அது பொது மக்களின் உரிமைகள் தொடர்பானது" என்று கூறினார்.
"இது உச்ச நீதிமன்றத்தின் மரியாதை தொடர்புடையது. இந்த நாட்டில் எல்லா குடிமக்களும் சமமானவர்கள். எல்லோருக்கும் ஜாமீன் பெறும் உரிமையும் அவர்களின் மனுக்கள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற உரிமையும் உள்ளது. உயர்நிலையில் இருக்கும் பிரபலங்கள், வழக்கறிஞர்களின் வழக்குகளுக்கு தனி கவனம் செலுத்தி முன்னுரிமை கொடுக்கப்படக்கூடாது என்றே நாங்கள் கடிதத்தில் வலியுறுத்தினோம்," என்று துஷ்யந்த் தவே தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மனுக்கள் பட்டியலிடப்படும் நடைமுறை என்ன?
உச்ச நீதிமன்றம் பண்டிகை காலங்களிலோ, அலுவல்பூர்வ விடுமுறையின்போதோ முக்கிய விவகாரங்களை விசாரிக்க விடுமுறைக்கால அமர்வு என்ற பெயரில் சில நீதிபதிகளை வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிப்பார்.
குறிப்பாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள், ஆட்கொணர்வு மனு, சொத்துகள் இடிப்பு வழக்குகள், வெளியேற்றல் நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் வழக்கு, பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம், ஜாமீன் நிராகரிப்பு அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் மிக முக்கியத்துவம் கருதி விசாரிக்க அனுமதிக்கப்படும் மனுக்கள், அந்த விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்படலாம் என உச்ச நீதிமன்ற விசாரணை நடைமுறை கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பட்டியலிட உத்தரவிடும் எந்தவொரு மனுவும் விசாரிக்க தகுதி பெறுகின்றன.
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தால் நவம்பர் 9ஆம் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்படாத நிலையில், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அவசர வழக்காக இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜேட்மலானி, "காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களை திடீரென தடுத்து வைத்து விசாரிக்க முற்படும் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அதனாலேயே இது உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டியதாயிற்று. இதை துஷ்யந்த் தவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மகேஷ் ஜேட்மலானி, "உச்ச நீதிமன்றம் ஆளுக்கு ஏற்றவாறு இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கூறினார். ஆனால், பல வழக்குகளில் வழக்கின் தீவிரம், தன்மையைப் பொருத்து, உச்ச நீதிமன்றமே நேரடியாக அந்த விஷயத்தை தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரிக்கும். அதனால், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவது சரியல்ல" என்று கூறினார்.
இது குறித்து துஷ்யந்த் தவேயிடம் மீண்டும் பிபிசி பேசியபோது, நீண்ட கால காவலில் வைக்கப்படுவது உள்ளிட்ட பல வழக்குகள் குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை இன்னும் பட்டியலிடப்படவும் இல்லை. விசாரிக்கப்படும் தேதியும் அறிவிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதே நிலைப்பாட்டுடன் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் காணப்படுகிறார். இந்திய குடிமக்கள் திருத்தச் சட்டம் போன்ற மக்களின் வாழ்வா சாவா பிரச்னைகள் எழுந்தபோது அவை எல்லாம் மாதக்கணக்கில் விசாரணைக்குப் பட்டியலிடப்பாமல் உள்ளன. ஆனால், அர்னாப் கோஸ்வாமியின் மனுக்கள் மட்டும் சில மணி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டதும் விசாரணைக்கு வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
இதேபோல, அதிகாரத்துக்கு நெருக்கமாக இல்லாத பலருக்கும் ஜாமீன், விசாரணை போன்றவை விரைவாக நடக்காதபோது, அவர்களுக்கு சமமான உரிமை கிடைப்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்னை வாழ்வா சாவா போன்றது என்றது துஷ்யந்த் தவே கூறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகள்
உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவான தரவுகளின்படி 2020, நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 63,693 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் இந்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று கூறினார்.
2018ஆம் ஆண்டில் 43 ஆயிரத்து 363 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் 45,787 வழக்குகளின் விசாரணை முடிந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் விசாரித்து முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 13,850.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல், பொது முடக்கம் ஆகிய நடவடிக்கை காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணை செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சட்டம் மற்றும் கொள்கைக்கான மையத்தின் ஆய்வறிக்கைப்படி கடந்த ஏப்ரல் மாதம் 355 உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இதே காலத்தில் கடந்த ஆண்டு 10,586 உத்தரவுகளும் கடந்த ஆண்டு 12 ஆயிரத்து 84 உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே தங்களுடைய வழக்குகள் விசாரிக்கப்படாமல் தொடர்ந்து தள்ளிவைக்கப்படாமலோ பட்டியலிடப்படாமலோ உள்ளது என பல வழக்கறிஞர்களும் தன்னிடம் முறையிட்டு வருவதாக துஷ்யந்த் தவே கூறுகிறார்.
"கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்புவரை 15 அமர்வுகள் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தன. இப்போது 7-8 அமர்வுகளே வழக்குகளை விசாரிக்கின்றன. அவற்றின் அலுவல் நேரமும் குறைவு. சிறிய வழக்கறிஞர்களின் வழக்குகள் பின்தங்கி வரும் நிலையில், செல்வாக்கு படைத்த வழக்கறிஞர்கள், முக்கிய பிரபலங்களின் வழக்குகள் மட்டும் முன்னுரிமை பெறுகின்றன" என்று துஷ்யந்த் தவே தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றிய மகேஷ் ஜேட்மலானி, "ஒரு சில வழக்குகளில் எதேச்சையாக அப்படி நடந்திருக்கலாம். அதை வைத்து ஒட்டுமொத்தமாக நீதித்துறையின் செயல்பாடுகளை விமர்சிப்பது சரியாக இருக்காது," என்று கூறினார்.
அர்னாப் மீது என்ன வழக்கு?
தனியார் கட்டட உள்ளரங்க வடிவமைப்பாளர் அன்வே நாயக் 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். அர்னாப் கோஸ்வாமியின் தொலைக்காட்சி வைத்துள்ள நிலுவை கட்டணத்தின் நிதிச்சுமை தாங்காமல் தற்கொலை செய்துள்வதாக அன்வே நாயக் கடிதம் எழுதியதாகவும் அதே விவகாரத்தில் அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமியின் பங்கு தொடர்பாக விசாரிக்க மும்பை காவல்துறை போதிய ஆதாரங்களில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தது. அப்போது மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி செலுத்தியது. இந்த நிலையில், அங்கு சில வாரங்களுக்கு முன்பு அன்வே நாயக்கின் மனைவி அக்ஷதா மும்பை உள்துறை அமைச்சரை சந்தித்து தனது கணவர் தற்கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என மனு அளித்ததை அடுத்து, அன்வே நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் உள்ளிட்ட மூவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
பிற செய்திகள்:
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- "சூரரைப் போற்று" கேப்டன் கோபிநாத்தின் கதை என்ன?
- தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு, மறுஉத்தரவு வரும்வரை தள்ளிவைப்பு - தமிழக அரசு
- நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களோடு போரிட்டார்களா?
- பிகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்குச் சொல்வது என்ன?
- அமெரிக்க அதிபராகவுள்ள பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?
- உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மரணம்: யார் இவர்?
- குறையும் ஸ்டிரைக் ரேட்: தேர்தல்களில் காங்கிரஸ் துணையா, சுமையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












