You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செலின் கவுண்டர்: "அமெரிக்காவில் வளர்ந்தாலும் தமிழர் பண்பாட்டை மதிப்பவர்" - குடும்பத்தினர் பெருமிதம்
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் உருவாக்கியுள்ள கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில், ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார். இதனால், அவரது குடும்பத்தினரும் ஊர்மக்களும் பெருமிதத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அருகே பெருமாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்கிற ராஜு கவுண்டர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவருக்கு பிறந்த மூத்த மகள் தான் செலின் ராணி கவுண்டர்.
தந்தையைப் போலவே படிப்பிலும், திறமையிலும் சிறந்து விளங்கினார் செலின் என, ஈரோட்டில் வசிக்கும் அவரது சகோதரர் தங்கவேலு பிபிசியிடம் தெரிவித்தார்.
"பெருமாப்பாளையம் கிராமத்தில் எங்களின் தாத்தா விவசாயம் செய்து வந்தார். அவரின் மூன்று மகன்களில் மூத்த மகன் செங்கோட்டையன் தான் எனது தந்தை. இளைய மகன் நடராஜனின் மகள் தான் செலின். குடும்பத்தினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இளைய மகனை படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். எனது சித்தப்பா நடராஜனும் நன்றாக படிக்கக் கூடியவர். 1966 ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக சித்தப்பா அமெரிக்கா சென்றார். படிப்பு முடிந்ததும் அங்கேயே போயிங் விமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே காதல் திருமணமும் செய்து கொண்டார். அவரது மூன்று மகள்களில் மூத்த மகள் தான் செலின். சிறுவயது முதலே, அமெரிக்காவிலிருந்து செலின் எங்கள் கிராமத்திற்கு வந்து செல்வார். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பாக பழகுபவர். தந்தையைப் போலவே படிப்பிலும், ஆற்றலிலும், அன்பிலும் சிறந்து விளங்குபவர். அந்த பண்புகள் தான் அவரை இன்று உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது" என பெருமிதத்தோடு கூறுகிறார் தங்கவேலு.
பெருமாப்பாளையத்தில் உள்ள இவர்களின் பூர்வீக வீட்டில், செலின் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்களைக் காண குடும்ப உறுப்பினர்கள் பலர் தற்போது வந்து செல்கின்றனர். அமெரிக்காவில் முக்கிய பொறுப்பை ஏற்றிருக்கும் செலினுடனான, கடந்த கால நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
"இந்தியா குறித்த பல தகவல்களை செலினின் தந்தை அவர்களுக்கு கூறியுள்ளார். அதனால், விடுமுறை காலங்களில், தமிழகம் வரும் செலின் மற்ற மாநிலங்களையும் சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டுவார். புதிதாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்வதிலும், அதை கற்றுக்கொள்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். ஆராய்ச்சி பட்டம் பெற்றிருந்தாலும், தலைக்கணம் இல்லாதவர். செலின் ஊருக்கு வரும்போதெல்லாம் கிராம மக்கள் அவரை ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஆனால், அவரோ புன்னகையோடு அனைவரிடத்திலும் மிக சாதாரணமாக பழகுவார். எளிமையாக உடை அணிந்து கொள்வார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அவர் எப்போதுமே மதிப்பார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணால், இந்த ஊரும் தமிழகமும் இன்று பெருமையடைந்துள்ளது" என மகிழ்ச்சியோடு பேசினார் செலினின் சகோதரர் தங்கவேலு.
1977 ஆம் ஆண்டு பிறந்தவர் செலின். இவரின் தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், 2004 ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
பல்வேறு நோய்கள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து வரும் செலின், தனது சொந்த கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.
செலின் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தேவராஜ் இது குறித்து கூறுகையில், 'ஒவ்வொரு முறை கிராமத்திற்கு வரும் செலின், இங்குள்ள மருத்துவ வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் செல்வார். இந்தியாவில் மருத்துவத்துறையின் வளர்ச்சி குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்வார்."
"தனது தந்தை மீது அதிக பாசம் கொண்டவர் செலின். அதனால், ஆரம்ப காலத்தில் அவரது தந்தை படித்து வந்த அரசு பள்ளியில் மாணவர்களின் கல்விக்காக உதவிகளை செய்து வருகிறார். கிராமத்து மாணவர்களுக்காக சிறப்பான ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கி தந்துள்ளார். கோவிட் தொற்று சீனாவில் துவங்கியபோதே, அதன் வீரியம் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு தகவல் அளித்தார். அவரது ஆலோசனைகளை குடும்பத்தினரிடமும், கிராமத்தினரிடமும் பகிர்ந்து கொண்டு பாதுகாத்துக் கொண்டோம். இன்று அவர் அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் சேவை சிறக்க ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்" என தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவைகளை செய்துள்ள செலினுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டில் பீப்புள் பத்திரிக்கை சார்பில் தேர்வு செய்யப்பட்ட உலகின் மாற்றத்திற்கான 25 சிறந்த பெண்களின் பட்டியலில் இவரும் இடம்பிடித்துள்ளார்.
தங்களது கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், அமெரிக்க கோவிட் தடுப்புக் குழுவில் இடம்பெற்று, புகழ் பெற்றிருப்பது இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக செலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்
- "சூரரைப் போற்று" கேப்டன் கோபிநாத்தின் கதை என்ன?
- நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களோடு போரிட்டார்களா?
- பிகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திற்குச் சொல்வது என்ன?
- அமெரிக்க அதிபராகவுள்ள பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?
- உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மரணம்: யார் இவர்?
- குறையும் ஸ்டிரைக் ரேட்: தேர்தல்களில் காங்கிரஸ் துணையா, சுமையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: