கொரோனா வைரஸ்: திறக்கப்படும் திரையரங்குகள் - என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

"திறக்கப்படும் திரையரங்குகள் என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?"

தமிழகம் முழுவதும் வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10-ந் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 7 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன. தியேட்டர்களை திறப்பது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

பொதுத்துறை நிறுவனப் பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ்

பொதுத்துறை நிறுவன பணியாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி, போனஸ் பெற தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர ஊதிய உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, லாபம் ஈட்டியுள்ள மற்றும் நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இந்த அறிவிப்பால் போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தத் தொழிலாளா்கள் ரூ.8 ஆயிரத்து 400 தொகையே போனஸாக பெறுவா். மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளா்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அளிக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்யப்படும்.

கொரோனா தொற்றே காரணம்: கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உலகின் அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் பொதுப் போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாத காரணத்தாலும் வருமானம் மிகவும் குறைந்து விட்டது.

ஆனாலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளா்களுக்கும் தொடா்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் போனஸ் வழங்கத் தேவையான நிதி உபரித் தொகையாக இருந்தாலும் கரோனா தொற்றால் எழுந்துள்ள சவால்களையே எதிா்கொள்ள வேண்டியிருப்பதால் 10 சதவீதம் அளவுக்கு போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது," என தனது அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தினமணி நாளிதழில் பிரதானமானதாக இடம்பிடித்துள்ளது.'

மின்சார வாகனம் வாங்குவோருக்கு 2022 டிசம்பர் வரை 100 சதவீதம் வரி சலுகை

மின்சார வாகனங்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத வரிச் சலுகை வரும் 2022 டிசம்பர் மாதம் வரை 100 சதவீதமாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்குவதற்கான புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுத்து வருகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் இதுவரை மின்சாரத்தில் (பேட்டரி தொழில்நுட்பம்) இயங்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 2022வரை 100 சதவீதம் வரி விலக்குஅளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ''எரிபொருளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மின்சார வாகனங்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த வரிச் சலுகையானது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் வரை இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையால் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்'' என்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் சிலர் கூறும்போது, ''தேசிய மின் போக்குவரத்துதிட்டத்தின்படி அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு கோடி மின்சார வாகனங்களை இயக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை மத்திய, மாநில அரசுகள் தனியார்நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன.

நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் போன்ற வாய்ப்புள்ளஇடங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட உள்ளன. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் தற்போதுள்ள வாகனங்களில் 40 சதவீதவாகனங்கள், மின்சார வாகனங்களாக மாற வாய்ப்புகள் உள்ளன'' என்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: