தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காய விலை: என்ன காரணம்? எப்போது குறையும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், குறைவான விலைக்கு அரசின் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விற்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு மழை காரணமாக குறைந்துவிட்டதால், வெங்காயத்தின் விலை உயர்ந்துவிட்டதாக கோயம்பேடு வெங்காய வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கோயம்பேடு மொத்த சந்தை வணிகரான குமாரிடம் பேசியபோது, மஹாராஷ்டிராவில் இருந்து வெறும் பத்து சதவீத சரக்குகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
''தினமும் சுமார் 40 டிரக் வண்டிகளில் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வரும். தற்போது அந்த எண்ணிக்கை 20-ஆக குறைந்துவிட்டது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள சரக்குகளை கொண்டுவந்தாலும், வெங்காயத்தின் தரம் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கும். மொத்த சந்தையில் 50 கிலோ வெங்காய மூட்டை ரூ.4,300ஆக உள்ளது. நுகர்வோருக்கு அந்த வெங்காயம் சென்று சேர்கையில் ஒரு கிலோ தரத்தை பொறுத்து ரூ.85 தொடங்கி ரூ.120 வரை விற்கப்படுகிறது,''என்கிறார் குமார்.
அடுத்துவரும் பத்து நாட்களுக்கு வெங்காயத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறும் குமார், காய்கறிகளின் விலை தீபாவளி முடிந்த பின்னர் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார்.
எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதியாகியுள்ள வெங்காய மூட்டை ரூ.3,500-க்கு கிடைத்தாலும், விற்பனைக்கு செல்லும்போது விலை அதிகரிக்கிறது என்கிறார் கோயம்பேடு சிறு வியாபாரியான வெங்கடேஷ்.

பட மூலாதாரம், Getty Images
''கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர்தான் வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தற்போது மழை காரணமாக வெங்காயம் வந்துசேர்வதில் சிக்கல் நீடிப்பதால் விலை அதிகரித்துவிட்டது. மற்ற காய்கறிகளை போல வெங்காயத்தை சேமித்துவைப்பது சிரமம். எங்களை போன்ற சிறு வியாபாரிகள் மொத்த வணிகர்களிடம் இருந்து வாங்கி சில்லறை கடைகளுக்கு சென்று சேர்க்கும்போது விலை அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது,''என்கிறார் வெங்கடேஷ்.
மேலும் கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் இயங்கிவந்த சுமார் 1,900 கடைகளில் வெறும் 200 கடைகள் மட்டுமே தற்போது இயங்கிவருகின்றன என்றார் அவர்.
''கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே சரக்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறுவணிகர்களுக்கு எளிமையாக கிடைக்கும். நாங்கள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து பெறுவதற்கு போக்குவரத்து செலவு செய்யவேண்டும் என்பதால், சிறுகடைகளுக்கு வெங்காயம் கொடுக்கப்படும்போது விலையை அதிகரிக்கவேண்டிய சூழல் உருவாகிறது,'' என்றும் வெங்கடேஷ் தெரிவித்தார்.
வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழக அரசின் பசுமைப் பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் வாங்குவதற்கு பொது மக்கள் வரிசையில் காத்திருந்து வெங்காயம் வாங்கி செல்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக ஒரு நபருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பண்ணை பசுமை கடையில் இரண்டு கிலோ வெங்காயம் வாங்கிய சதீஷ், ஆயுத பூஜை காலத்தில் விலை அதிகரித்துள்ளதால் அதிகப் பண விரயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
''தீபாவளி பண்டிகைக்கு செலவு செய்யவேண்டிய பணத்தை, அடுத்த ஒரு மாதத்தில் காய்கறி வாங்குவதற்கு செலவு செய்துவிடுவோமோ என்று அச்சமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக என் தையல் கடையை நான்கு மாதங்கள் திறக்கவில்லை. தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், அன்றாட செலவுகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட அதிகம் யோசிக்கவேண்டியுள்ளது,''என்கிறார்.
சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனையைத் தொடங்கி வைத்தபோது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும், 10 லட்சம் டன் சின்ன வெங்காயமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தேவைப்பட்டால் நியாய விலைக் கடைகளிலும் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். விலை நிர்ணயம் நிதியத்தின் மூலம் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் விலை உயரும் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படுவதால் வெங்காயத்தை பதுக்க வாய்ப்பில்லை என்றார் செல்லூர் ராஜூ.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












