You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிராவில் சிபிஐக்கு திடீர் கட்டுப்பாடு: சுஷாந்த் சிங், டிஆர்பி மோசடி விசாரணைக்கு தடங்கலா?
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய புலனாய்வுத்துறை விசாரிக்கும் வழக்குகளுக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப்பெற்றுக் கொள்ளும் அறிவிக்கையை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இதனால், இனி அந்த மாநிலத்தில் எந்தவொரு வழக்கிலும் தனி நபர் அல்லது அரசு ஊழியரை சிபிஐ விசாரிப்பதாக இருந்தால், அதற்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும்.
ஏற்கெனவே, மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், தொலைக்காட்சி பார்வையாளர்கள் கணக்கீடு தொடர்பான டிஆர்பி விவகாரத்தில் ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகள் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில், மாநில காவல்துறை விசாரணை நடத்தியபோதே, அவற்றை வேறு மாநில அரசு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
சுஷாந்த் சிங் மரணம், ரிபப்ளிக் டிவி விவகாரத்தால் சர்ச்சை
இதில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, வழக்கை விசாரித்து வந்த நிலையில், பிஹார் மாநில காவல்துறையில் அவரது தந்தை அளித்த புகார் அடிப்படையில், அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பிஹார் அரசு உத்தரவிட்டது. அதை பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் பயன்பாடு இருந்ததாகவும் அதற்கு அவரது தோழி ரியா சக்ரவர்த்தி உடந்தையாக இருந்ததாகவும் கூறி அவர் உள்ளிட்ட 10க்கும் அதிகமானோரை சிபிஐ விசாரித்து வருகிறது. அதே சமயம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடைய விவகாரத்தை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிப் உட்பட 10க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அதில் ரியா சக்ரவர்த்தி சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட நான்கு தொலைக்காட்சிகள், டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் எனப்படும் நிகழ்ச்சிகளை பார்வையிடும் நேயர் எண்ணிக்கையை மதிப்பீடும் செயல்பாட்டில் முறைகேடு செய்ததாக வந்த புகார் அடிப்படையில் அவற்றின் நிர்வாகம் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் ரிபப்ளிக் டி.வி இலக்கு வைக்கப்படுவதாகக் கூறி அதன் முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தொலைக்காட்சியில் நேரலையாக மும்பை காவல்துறையைச் சாடினார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் மும்பை காவல்துறை ஆணையாளர் பரம் வீர் சிங்கை திணறடிக்கும் வகையில் நேரலையில் கேள்வி எழுப்பியதற்காக தன்னையும் ரிபப்ளிக் டி.வியையும் அவர் பழிவாங்குவதாக அர்னாப் கோஸ்வாமி சாடினார்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம் லக்னெள காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் டிஆர்பி முறைகேடு விவகாரம், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக நிர்வாக வரம்புக்கு உட்பட்ட பிரச்னை என்பதால் அதை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் எனக்கூறி அந்த விவகாரத்தை சிபிஐயிடம் உத்தர பிரதேச அரசு ஒப்படைத்தது.
இதன் மூலம் இரண்டாவது முறையாக தமது அதிகார வரம்பில் இருக்கும் இரு வழக்குகளை சிபிஐ அதன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது. இந்தப் பின்னணியிலேயே எதிர்காலத்தில் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் சிபிஐ, மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க வழங்கப்பட்ட பொது அனுமதியை திரும்பப் பெறுவதாக மகாராஷ்டிரா அரசு புதன்கிழமை அறிவித்திருக்கிறது.
இது குறித்து சிபிஐ சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.ஆர். கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "மாநில அரசின் இதுபோன்ற நடவடிக்கை, இதுவரை பதிவு செய்யப்பட்டு சிபிஐ நடத்தி வரும் வழக்குகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், எதிர்கால வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள இந்த நடவடிக்கை தடங்கலாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
என்ஐஏ - சிபிஐ வேறுபாடு என்ன?
இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நிறுவப்பட்டுள்ளது. இந்த விசாரணை அமைப்புக்கு மத்திய காவல்துறைக்கான அதிகாரம், என்ஐஏ சட்டம் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பயங்கரவாத செயல்பாடுகள், அது தொடர்புடைய சந்தேக செயல்பாடுகள் என வரும்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தின்படி, என்ஐஏவால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அந்தத்துறையால் விசாரிக்க சட்டத்தடங்கல் கிடையாது.
ஆனால், இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ, டெல்லி சிறப்புக் காவல் அமைப்பு 1941-இன்படி நிறுவப்பட்டது. இரண்டாவது உலகப்போரின்போது ஊழல், போர் கொள்முதல் போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆங்கிலேயர் அரசால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வகை செய்யும் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புக்காக 1946இல் சட்டம் இயற்றப்பட்டது. பிறகு அதே சட்டத்தின்படி 1963ல் இந்தியா முழுவதும் நடக்கும் தேசப்பாதுகாப்பு தொடர்புடைய குற்றங்கள், தீவிர மோசடி, கருப்புப் பணம், அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் நடக்கும் குற்றங்கள் ஆகியவற்றை விசாரிப்பது சிபிஐயின் பணி என வரையறுக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு தொடர்புடைய ஊழல் மற்றும் குற்றச்செயல்களை விசாரிக்கும் அதிகாரம் சிபிஐவசம் வந்தது. அதன் செயல்பாடுகளை இந்திய கண்காணிப்பு ஆணையம், 1988இல் நிறுவப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி மேற்பார்வையிடும் என்றும் கூறப்பட்டது.
எந்தெந்த வழக்குகளில் சிபிஐ விசாரிக்க முடியும்?
அதே சமயம், ஒரு மாநிலத்தில் நடக்கும் குற்றச்செயல்களில் சிபிஐ வழக்கு விசாரணையை தொடங்க மூன்றில் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் 6ஆவது பிரிவு கூறுகிறது. இதன்படி முதலாவதாக, குற்றம் நடந்த மாநிலத்தில், அந்த மாநில அரசால் வழக்கை விசாரிக்க சிபிஐ கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்ற விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கை குறித்த கருத்தை சிபிஐயிடம் மத்திய அரசு கேட்ட பிறகு, அதற்கான அறிவிக்கையை வெளியிடும்.
இரண்டாவதாக, மத்திய அரசு வெளியிடும் அறிவிக்கை மற்றும் டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் 6ஆவது பிரிவின்படி, மாநில அரசு குறிப்பிட்ட அந்த வழக்கை விசாரிக்க மாநில அறிவிக்கையை வெளியிடும். அதில் "சிபிஐ அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்கவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசு அனுமதி வழங்குகிறது" என்று தெரிவிக்கப்படு்ம்.
மூன்றாவதாக, குறிப்பிட்ட சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில, சிபிஐ வழக்கை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இதுபோன்ற உத்தரவை மாநில உயர் நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க முடியும்.
இது தவிர மாநிலங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய துறைகள் தொடர்பான குற்றங்கள், ஊழல் விவகாரங்களில் சிபிஐ நேரடியாகவே தனது விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
"தன்னிச்சையாக வழக்கை விசாரிக்க முடியாது"
"எந்தவொரு தனி நபர் அளிக்கும் புகார் அடிப்படையில் சிபிஐ தன்னிச்சையாக ஒரு வழக்கையோ சம்பவத்தையோ விசாரிக்க டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் 6ஆவது பிரிவு அனுமதிக்கவில்லை," என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.கே. கெளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"அந்த சட்டத்தின் 2ஆவது பிரிவு, சிபிஐ அதற்கு என வரையறுக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணையை தன்னிச்சையாக நடத்தலாம் என்றும் அது யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பொருந்தும் என்பதை அந்த சட்டத்தின் 3ஆவது பிரிவு வரையறுக்கிறது."
"ஒரு வேளை மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டாலும், அதற்கு குற்றம் நடந்த மாநிலத்தின் அரசு, முறைப்படி ஒப்புகை தெரிவிக்கும் அறிவிக்கையை வெளியிட வேண்டும்."
"இன்றைய காலகட்டத்தில் சிபிஐ மூன்று வகையான குற்றங்களை விசாரிக்கிறது. ஒன்று, ஊழல் தடுப்பு, இரண்டாவது பொருளாதார குற்றங்கள், மூன்றாவது, சிறப்புக் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்ட மிகத்தீவிர குற்றம், பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், அமைப்பாக இயங்கும் குற்றங்கள்தான் மூன்றாவது வகைக்குள் வருகின்றன. அவை தொடர்பான வழக்குகளில்தான் ஒரு மாநில அரசோ, உயர் நீதிமன்றங்களோ உச்ச நீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்."
"தமிழ்நாட்டில் சமீபத்தில் சாத்தான்குளம் தந்தை-மகன் நீதிமன்ற காவலில் இருந்தபோது உயிரிழந்த விவகாரத்தை இந்த அடிப்படையிலேயே தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது," என்று ஆர்.கே. கெளர் தெளிவுபடுத்தினார்.
வேறு மாநிலங்களில் கட்டுப்பாடு உள்ளதா?
இதற்கு முன்பும் இதே மஹாராஷ்டிரா அரசு, சிபிஐ முன் ஒப்புதல் பெறுவது அவசியம் என்று கூறி பொது ஒப்புதலை திரும்பப்பெற்ற நடவடிக்கை, 1989இல் நடந்துள்ளது. இதற்கான ஒப்புதலை அப்போதைய மாநில ஆளுநர் பிறப்பித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்திலும் இதேபோல, பொது ஒப்புதல் அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற பொது ஒப்புதல் அறிவிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் அரசியல் கட்சிகள், சிபிஐயை பயன்படுத்தி மாநிலத்தில் உள்ளவர்கள் மத்திய அரசால் இலக்கு வைக்கப்படலாம் என்று குற்றம்சாட்டினார்கள்.
எனவே, தற்போதைய மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை, மத்திய அரசுக்கு விடுக்கப்படும் ஒரு அரசியல் குறிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது என்று சிபிஐ முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிபிஐக்கு பொது ஒப்புதலை வழங்க மறுக்கும் மாநிலங்கள் அனைத்திலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நேரடியாக ஆட்சிக்கு தலைமை தாங்கவில்லை என்பதை கவனிக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, "பொது ஒப்புதல் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், மாநில அரசு விரும்பினால், ஒவ்வொரு வழக்காக அனுமதி அளிக்கும் முடிவை மாநில அரசு எடுக்கலாம்" என்று கூறுகிறார், சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.கே. கெளர்.
சட்டப்பூர்வமாக கட்டுப்பாடு உள்ள மாநிலத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடருவதில், மாநில அரசின் நடவடிக்கை தடங்கலாக அமையலாம். ஆனாலும், இதிலும் ஒரு வழி உள்ளது என கூறும் சிபிஐ சட்டப்பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வழக்கை பதிவு செய்வதற்கு பதிலாக, சிபிஐ தனது தலைமையத்தில் வழக்கை பதிவு செய்யலாம். ஆனாலும், விசாரணை என வரும்போது சில நடைமுறை பிரச்னைகளை அந்தத்துறையினர் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதுபோன்ற பிரச்னைகள் எழக்கூடாது என்பதால்தான், மாநில அரசுகள், "பொது ஒப்புதல்" என்ற பெயரில் ஒரு அனுமதியை வழங்கும் அறிவிக்கையை வெளியிடும்.
இந்த பொது ஒப்புதல் அறிவிக்கைதான், தற்போது மகாராஷ்டிரா அரசால் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிபிஐ பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை என சிபிஐ உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், புதிதாக ஒரு வழக்கில் மத்திய அரசு ஊழியரையோ, மாநில அரசு ஊழியரையோ விசாரிக்க வேண்டுமானால் கூட அதற்கு மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் சிபிஐயின் அன்றாட நடவடிக்கையை பாதிக்கச் செய்யலாம் என்று சிபிஐ சட்டப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: