You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி அரசாங்கத்திடம் இந்திய ஊடகங்கள் மண்டியிட்டனவா?
- எழுதியவர், ஜுபைர் அஹ்மத்
- பதவி, பிபிசி
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் கவுன்சிலில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ``கோவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டோம்'' என்று கூறினார்.
இந்தியாவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் இது பரவலாக செய்தியாக்கப்பட்டது. ஆனால் ஆச்சர்யமூட்டும் வகையில், இதற்கு ஆட்சேபம் எதுவும் எழவில்லை. அவர் உரையாற்றிய நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது என்றாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது என்றாலும் அவருடைய உரைக்கு எதிர்ப்புகள் எதுவும் எழவில்லை.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், மக்கள் இயக்கமாக மாறியது என எப்படி கூறினார் என்பதற்கு இந்திய ஊடகங்கள் ஆதாரம் எதையும் கேட்கவில்லை. மாறாக, உதவிகள் கிடைக்காமல் அலையும் குடிமக்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் தங்கள் நேசத்துக்கு உரியவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அலைந்து கடைசியில் அவர்களை இழந்தவர்கள், சிகிச்சை வசதியைப் பெற்றுத் தர முடியாத குற்ற உணர்ச்சிக்கு ஆளானவர்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகளை சமூக ஊடகங்களில் பலர் எழுதி வருகின்றனர்.
மார்ச் 24 ஆம் தேதி தேசிய அளவில் முழு ஊரடங்கை பிரதமர் மோதி அறிவித்த போது, 21 நாட்களில் நோய் கட்டுப்படுத்தப் பட்டுவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அதன் பிறகு சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் முன்பைவிட மோசமான அளவுக்கு நோயின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக கூறப்பட்டது குறித்து மோதியிடம் எந்த ஊடகமும் வலுவான கேள்விகளை எழுப்பவில்லை. இப்போது நிறைய படுக்கை வசதிகள், நிறைய ஐ.சி.யூ. வசதிகள், நிறைய மருத்துவப் பரிசோதனை வசதிகள், புதிய சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு என சுகாதாரக் கட்டமைப்பு மேம்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் சாமானிய மக்களின் துன்பங்களும் அதே அளவுக்கு அதிகரித்துள்ளன.
நோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள் மக்கள் இயக்கமாக மாறிவிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதிகாரிகள், முன்களத்தில் நின்று செயல்படும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களே கொரோனாவுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய ஊடகங்களின் நிலைமை குறித்து மூத்த பத்திரிகையாளர் பங்கஜ் வோரா வருத்தம் தெரிவித்தார். கண்காணிப்பு என்பது தான் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். ஆனால், முக்கியமான மதிப்பீட்டை அளிப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் நிறைவேற்றத் தவறிவிட்டன என்று அவர் கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஊடகங்களின் போக்கு தெளிவாக அம்பலமாகிவிட்டது - இணக்கமாக செயல்படுவது அவர்களின் பாணியாகிவிட்டது என்று தற்போது லண்டனில் உள்ள மூத்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் கூறினார். இந்தக் கட்டுரையில் தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ``ஒரு ஜனநாயகத்தில் செய்தி ஊடகங்களின் பாரம்பரியமான பங்களிப்பாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த செய்திகள் முக்கிய இடம் பெறுகின்றன. மக்களின் சார்பில் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. எது நல்லது என்ற கொள்கையை உண்மை நிலையுடன், ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதுமே பயன் தருவதாக இருக்கும். ஊடகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், உண்மை நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் இப்போது இந்தியாவில் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதைவிட இன்னும் பெரிய இடைவெளியைக் காண முடியாது'' என்று அவர் தெரிவித்தார்.
நிறுவனங்களின் அலட்சியமா?
மோதியின் வளர்ச்சியை, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியராக உள்ள டோம் கின்ஸ்பர்க் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பேராசிரியர் டோம், இந்திய ஊடகங்கள் ஏன் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன என்பதற்கு விளக்கம் தருகிறார். பிரதமர் பொறுப்பில் மோதியின் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், ``ஊடகங்களின் உரிமையாளராக இருக்கும் தனது (மோதியின்) தோழமைகள் மூலமாக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை மூலமாகவும் இந்தியாவில் ஊடகங்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன'' என்று அவர் கூறியுள்ளார்.
ஆளும் பாஜகவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த செய்தி ஊடகங்களும் சொந்தமாகக் கிடையாது. இருந்தாலும், சில முக்கியமான செய்தி சேனல்கள் மோதி ஆதரவு நிலைப்பாடு கொண்டவையாக அல்லது வலதுசாரி சிந்தனை கொண்டவையாக உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர். பல பிராந்தியக் கட்சிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் ஊடக நிறுவனங்களின் முதலாளிகளாக இருக்கின்றனர். தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு ஆதரவான எண்ணங்களை ஏற்படுத்துவதற்கு இந்த ஊடகங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் மீதும், பத்திரிகைத் துறை மீதும் அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளைச் செய்யும்போது அவர்களுக்கு எதிராக அதிகார வர்க்கத்தினர் வழக்குகள் தொடுக்கின்றனர். ஊடக சுதந்திரம் குறித்த உலகளாவிய பல்வேறு பட்டியல்களில் இந்தியாவின் அந்தஸ்து மோசமானதாகவே இருக்கிறது.
நிறுவனங்களை அடக்கி வைப்பதையே முன்னணி தலைவர்கள் விரும்புகின்றனர் என்று பேராசிரியர் டோம் கூறுகிறார். ``இதுபோன்ற அமைப்புகளை விரும்பாத பிரபலமான தலைவர்கள் இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளனர். மக்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்புகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவது இல்லை. இந்த மூன்று நாடுகளிலுமே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது எதேச்சையான உண்மையாக இருக்கிறது. இந்த மூன்று நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண முடியும்'' என்று அவர் கூறினார்.
உலக அளவில் நெருக்கடிகள் ஏற்படும் போது, தங்களுடைய அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள தலைவர்கள் முயற்சி செய்வதால், நெருக்கடி பற்றிய முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்வீவ் ஹான்கே கூறுகிறார்.
மெதுவாக அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பது, அரசியல் தலைவர்களின் மற்றொரு அணுகுமுறையாக இருக்கிறது என்று பேராசிரியர் டோம் கின்ஸ்பர்க் கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்படுதல்; அதிகமான அதிகாரத்தை குவித்துக் கொள்வதற்குத் தேர்தலைப் பயன்படுத்துதல், நாடாளுமன்றத்திற்குச் செல்வது மற்றும் ஊடகங்கள் முன் தோன்றுவதைத் தவிர்த்தல், தேசப் பாதுகாப்பு பற்றி தவறான எச்சரிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்கி வைப்பது, இணக்கமான ஊடகங்கள் மூலம் கதைகளை பரப்புவது போன்றவை தான் பின்னோக்கி செல்வதன் அடையாளங்களாக உள்ளன.
ஜனநாயகப் பின்னடைவு மெதுவாக நடைபெறுகிறது. சட்டபூர்வமானது என்ற தோற்றத்தில், தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் இது நடக்கிறது. அதாவது, பின்னோக்கிச் செல்வதை செய்தி ஊடகங்களை உணராமல் இருக்கின்றன.
இந்தியாவைப் பொருத்த வரையில், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் கவலை தரும்படி உள்ளன என்று பேராசிரியர் டோம் கின்ஸ்பர்க் கூறினார். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் போக்கை அவர் கவனித்து வருகிறார். ``இந்தியாவில் இயக்கவாதிகள் மீதான கைது நடவடிக்கைகளும், சிலர் விடுதலை செய்யப்படுவதும் நடைபெறுகிறது. ஜனநாயகத்தில் பயன் தரக் கூடிய அமைப்புகளாக உள்ள பல்கலைக்கழகங்களின் நிலை குறித்து நான் கவலை அடைந்திருக்கிறேன். இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் அரசியல் மயமாக்கப்படுவதன் அறிகுறிகள் தென்படுகின்றன,'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
``பள்ளிக்கூட பாடப் புத்தகங்களிலும், நினைவுச் சின்ன இடங்களிலும், விருப்பத்துக்கு ஏற்றவாறு வரலாறுகளை திருத்துவது, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படி செய்வது'' ஜனநாயகத்தின் பின்னோக்கிய பயணத்தின் மற்றொரு அறிகுறியாக உள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை?
ஒருவேளை இப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால், ``அவசரநிலை பிரகடனம்'' செய்ய வேண்டிய தேவையே இருக்காது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற சூழ்நிலை இப்போது இருப்பதாக பேராசிரியர் டோம் கூறுகிறார். ``எங்களுடைய இப்போதைய காலத்தில் ஜனநாயகத்தை தூக்கி எறிய ஆட்சிக் கவிழ்ப்புகளோ அல்லது கம்யூனிஸ புரட்சிகளோ தேவைப்படாது. ஊடகத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும், அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும், ஒவ்வொன்றையும் படிப்படியாகச் செய்ய வேண்டும். அது போதும்'' என்று அவர் கூறுகிறார்.
``அவசர நிலை பிரகடனம்'' செய்யப்பட்டதன் 45வது ஆண்டை ஒட்டி அரசியல் மற்றும் சமூகவியல் நிபுணர் யோகேந்திர யாதவ் கடந்த மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பேராசிரியர் டாம் முன்வைக்கும் வாதங்களை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.``அவசரநிலை பிரகடனம் செய்வதற்கு சட்டபூர்வ அறிவிக்கை தேவைப்பட்டது. ஜனநாயகத்தைக் கைப்பற்றுவதற்கு அது தேவையில்லை. அவசர நிலை பிரகடனத்துக்கு ஒரு தொடக்கம் இருந்தது. இப்போது குறைந்தபட்சம் பெயரளவில் கூறினால், அதற்கு ஒரு முடிவு இருந்தது. நாம் வாழக்கூடிய இன்றைய காலக்கட்டத்தில் புதிய நடைமுறைகளுக்கு ஒரு தொடக்கம் இருந்தது, ஆனால் இதற்கு ஒரு முடிவு இருக்குமா என்று யாருக்குமே தெரியாது. குறுகிய எதிர்காலத்திற்குள் ஜனநாயகத்தின் மீதான சவால்கள் முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை. நாம் இந்த சூழ்நிலையில் வாழ்கிறோம்'' என்று கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பின்னோக்கிய பாதைக்கு கொண்டு செல்லும் போது ``எதிர்க்கட்சிகள் எப்போது போராடுவது என தெரியக் கூடாது. முன்கூட்டியே போராடினால், பைத்தியக்காரத்தனம் என மக்கள் சொல்லிவிடக் கூடும். தாமதமாகிவிட்டால், போராட அவகாசம் இருக்காது'' என்று கருதப்படுகிறது. அதனால் இந்த அணுகுமுறையை படிப்படியாக அமல் செய்கிறார்கள் என்று பேராசிரியர் டோம் கூறுகிறார்.
எதிர்க்கட்சிகளால் ஏன் மோதி அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை என்பதற்கு நிபுணர்கள் விளக்கம் தருகின்றனர். சிஏஏ. மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் மக்கள் இயக்கமாகத்தான் இருந்தனவே தவிர, எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாக இல்லை.
எதிர்க்கட்சிகளிடையே பிளவு
இந்தியாவில் நடக்கும் விஷயங்களுக்கு மோதியை மட்டும் குறை கூறுவது ``நியாயமானதாக இருக்காது'' என்று பத்திரிகையாளர் பங்கஜ் வோரா கூறுகிறார்.
``காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைப்புகளை பாஜக சீர்குலைக்கத் தொடங்கியது. சில இடங்களில் தாங்களாகவே முன்வந்து இணக்கமாக நடந்து கொள்ளும் நிர்வாகிகள் இருந்த காரணத்தால், அந்த அமைப்புகளை சீர்குலைக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போனது. இதுபோன்ற சூழ்நிலையில் அவசரநிலை பிரகடனம் போன்ற வழிமுறைகள் தேவையற்றதாகிவிட்டன'' என்று பங்கஜ் வோரா கூறினார்.
``பெரும்பான்மை சமூகத்தினரில் ஒரு பிரிவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தயங்கும் எதிர்க்கட்சிகளிடையே பிளவு இருக்கிறது. ஆளும் தரப்பினர் முன்வைக்கும் செயல் திட்டங்களுக்கு சரியான பதிலை அளிக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. எனவே, வெளிப்படையான அச்சுறுத்தல் ஏதுமின்றி சம்பந்தப்பட்டவர்கள் இணக்கமான நிலைக்கு மாறிவிடுகின்றனர். குறிப்பிட்ட சில நேர்வுகளில் மட்டும், ஒத்துழைக்க மறுப்பதற்கான பலன்களை அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களை மட்டுமே நீங்கள் குற்றம் சொல்வது அசாதாரணமானது, துரதிருஷ்டவசமானது. நாட்டில் எதிர்க்கட்சிகளின் நிலையை கைகழுவிவிட முடியாது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து திரு. வோரா மிகவும் கவலை தெரிவிக்கிறார். ``காங்கிரஸ் கட்சி நிறைய விஷயங்களுக்குப் பதில் கூறியாக வேண்டும். மக்களுக்கான கடமையை ஆற்றத் தவறியது மட்டுமின்றி, தங்கள் கட்சித் தொண்டர்களுக்கான கடமையையும் காங்கிரஸ் கட்சி ஆற்றத் தவறிவிட்டது'' என்று அவர் கூறுகிறார்.
இவையெல்லாம் மோதியின் வேலையை எளிதாக்கிவிட்டன. இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீது மோதிக்கு பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்களில் அவர் பங்கேற்பதில்லை என பல சமயங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரஃபேல் போர் விமான பேர ஊழல் குறித்த விவாதத்தின் போது, அரசின் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் கூறிய போது, பிரதமர் வரவில்லை. சமூக ஊடகங்களில் இதுபற்றி விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த டிசம்பர் மாதம், குடிமக்கள் (திருத்த) மசோதா மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் நடந்த போது, மோதி பங்கேற்கவில்லை. அது கவனிக்கப்படாமல் போகாது.
அதிகாரிகளையும் மோதி முழுமையாக நம்புவது இல்லை. ``ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்'' (Ek Bharat, Sheshtra Bharat) திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தபோது அதில் பங்கேற்ற பிரதமர், அதிகாரிகள் மீது மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது முதலாவது ஐந்தாண்டு கால ஆட்சியை அதிகாரிகள் கெடுத்துவிட்டார்கள் என்றும், இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அப்படி நடக்க விட மாட்டேன் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.
மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), அமலாக்கத் துறை போன்ற மத்திய நிறுவனங்களால் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அவருடைய ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளது. ஆட்சியை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு எதிராக பெரும்பாலான சோதனைகள் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், ராஜஸ்தான் போன்ற இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு முறைகூட, செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தியதில்லை என்ற முதலாவது பிரதமராக இவர் உள்ளார். இரண்டாவது ஆட்சிக் காலத்திலும் அதே போக்கு தொடர்கிறது. சில ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். ஆனால், கடுமையான கேள்விகளைக் கேட்கவில்லை என்று அந்த ஊடகங்கள் விமர்சனத்துக்கு உள்ளாயின.
மோதியை சரியாக எதிர்கொள்ளத் தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நிறைய விமர்சனங்கள் கூறப்படுகின்றன. ஆனால் மோதிக்கு சங்கடமான கேள்விகளை தொடர்ந்து எழுப்பும் அரசியல்வாதிகளில் ஒருவராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். கொரோனா நோய்த் தொற்று குறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் ராகுல் காந்தி தொடர்ச்சியாக ட்விட்டர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றியும் அவர் ட்விட்டரில் பதிவுகள் வெளியிடுகிறார். ஆனால், பல சமயங்களில் ராகுலின் ட்விட்டர் பதிவுகள் தேச விரோதமானவை அல்லது இந்து விரோதமானவை என விமர்சிக்கப்படுகிறது. மோதி குறித்துராகுலின் தாக்குதல்களும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. 2019 தேர்தலின் போது ``மோதி ஒரு திருடர்'' என்று ராகுல் காந்தி கூறியது, காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்களையும், மூத்த செய்தியாளர்களையும் அதிருப்தி அடையச் செய்தது.
ஜனநாயகத்தின் பின்னோக்கிய பயணம் உலக அளவிலான நடைமுறையாக உள்ளது.
``தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை பின்னோக்கிய பயணத்தில் தள்ளும் போக்கு பல நாடுகளில் காணப்படுகிறது. அரசியல்சட்ட திருத்தங்களை தவறாகப் பயன்படுத்துவது, அரசின் மற்ற கிளைகளின் செயல்பாடுகளில் தலையிட முயற்சிப்பது, அதிகாரவர்க்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிப்பது, பத்திரிகை சுதந்திரம் போன்ற பொது மக்கள் விஷயங்களில் தலையிடுவது மற்றும் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வது போன்றவை இந்தச் செயல்பாடுகளில் அடங்கும்'' என்று பேராசிரியர் டோம் கின்ஸ்பர்க் கூறியுள்ளார்.
மக்களிடம் பிரபலமாக இருக்கும் தலைவர்கள் அடிப்படை ஆதரவு மூலமும், தங்களுக்கு உள்ள பெரும்பான்மை மூலமும், பலத்தைப் பெறுகிறார்கள் என்று கின்ஸ்பர்க் உடன் பணியாற்றும் பேராசிரியர் அஜீஸ் ஹக் கூறினார். ``ஒரு விஷயத்தில் மட்டும் இன்றைய பிரபலமான தலைவர்களிடம் பொதுவான தன்மை இருப்பதாக நினைக்கிறேன். ஜனநாயகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அம்சங்கள் என நான் அதைக் குறிப்பிடுகிறேன். உங்களுக்குப் பெரும்பான்மை இருக்கும் வரையில், ஜனநாயகத்தை செயல்படுத்தும் அமைப்புகள் விஷயத்தில் உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்து கொள்ளலாம்'' என்று அஜீஸ் ஹக் குறிப்பிட்டார்.
இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் பொதுவான அம்சம் எது என யூகிக்க முடிகிறதா? இப்போதைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் இவை முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சினாரூ ஆகியோர் இந்த நோய் பரவலைத் தடுக்க தாங்கள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாகவும், நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் நம்மை நம்பச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
பின்னடைவை சரி செய்ய முடியாதா?
அரசியல்சட்டத்தின் படியான ஜனநாயகத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற தலைப்பில் பேராசிரியர் டோம் கின்ஸ்பர்க், அவருடன் பணிபுரியும் பேராசிரியர் அஜீஸ் ஹக் ஆகியோர் ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். ஜனநாயகத்தின் பின்னோக்கிய பயணம் பற்றி மட்டுமல்லாது, அதைக் கையாள்வதற்கான பயனுள்ள ஆலோசனைகளையும் அதில் கூறியுள்ளனர்.
``பயணத்தின் பாதையை மாற்றுவதற்கான ஒரு தேர்தல்'' எப்போதுமே இருக்கிறது என்பதில் இந்த இரு கல்வியாளர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ``நூலிழையில் நடந்த தவறுகள் என்பது பற்றி நாங்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம். ஜனநாயகம் எப்படி பின்னோக்கி செல்கிறது என அதில் குறிப்பிட்டிருக்கிறோம். ஜனநாயகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில், மகிந்தா ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் முயற்சி செய்தார். அப்போது தேர்தல் வந்தது. ஆச்சர்யம் தரும் வகையில் அவர் தோல்வி அடைந்தார். இப்போது அவர் மீண்டும் வந்துவிட்டார் தான். ஆனாலும் பின்னோக்கிய பயணம் நிறுத்தப்பட்டுவிட்டது'' என்று பேராசிரியர் டோம் கூறுகிறார்.
எல்லாமே மோசமான எதிர்காலத்தை உருவாக்குபவையாக இருப்பதில்லை. ஜனநாயகத்தில் மக்கள் சில விஷயங்கள் குறித்து கொஞ்சம் அதிருப்தியில் இருப்பார்கள். ``நம் கருத்தை வெளிப்படுத்த முடியும்'' என்ற நிலை இருப்பதே அதற்குக் காரணம் என இரு பேராசிரியர்களும் கூறுகின்றனர். ``கம்யூனிஸ சீனாவுக்கு நீங்கள் சென்றால், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் கூறுவார்கள். ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இப்போதும்கூட இந்தியாவையும், சீனாவையும் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்று நான் கூறுவேன். ஒரு மதத்தையே மொத்தமாக அழித்துவிட சீனா முயற்சிக்கிறது'' என்று பேராசிரியர் டோம் கூறினார்.
உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, இது மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால், மறு உருவாக்கம் தான் சிறந்த வழியாக இருக்கும். ``இப்போதைக்கு நாம் ஜனநாயகத்தில் 18வது நூற்றாண்டு போக்கை தான் பின்பற்றி வருகிறோம். அதாவது ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சென்று வாக்களிக்கிறோம். உண்மையில் அது 21வது நூற்றாண்டுக்குப் பொருத்தமானதாக இருக்காது. அது அவசியமானது, ஆனால் இது மட்டுமே போதாது. மக்கள் தங்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். வெறுமனே தேர்தலை சந்திப்பது மட்டுமின்றி, அடிக்கடி மக்கள் பங்கேற்பை ஏற்படுத்துவதால் எப்படி பயன் பெற முடியும் என்பது குறித்து பல நாடுகளும் பரீட்சார்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன'' என்று பேராசிரியர் டோம் கூறுகிறார்.
இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. உள்ளூர் மற்றும் பிராந்திய பிரச்சினைகளின் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன என்றாலும், தங்கள் ஜனநாயகம் பற்றி மக்கள் போதிய அக்கறை கொண்டிருந்தால், அந்தத் தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு அந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: