கொரோனா வைரஸ்: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" - பெண் மருத்துவரின் நம்பிக்கை கதை

    • எழுதியவர், நட்ராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இளம் மருத்துவராக இருக்கும் மிதுனா, கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றியபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவர் இவர். தற்போது நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக மீண்டும் தனது பணியை, கொரோனா சிகிச்சை பிரிவில் தொடங்கியுள்ளார் மிதுனா.

இவை அனைத்தும் எனது ஒரு அலைபேசி அழைப்பிலிருந்து தொடங்கியது என்கிறார் இளம்‌ மருத்துவர் மிதுனா.

"எனக்கு கொரோனா தொற்று இல்லை என்ற வார்த்தையை கேட்க எனது அலைபேசியில் அழைப்பை எதிர்பார்த்து அன்று காத்திருந்தேன். ஆனால் எனக்கு மறுபுறம் உள்ளவர் அதற்கு எதிர்மறையாக கூறினர். இதனால், என் மனதில் பயம் மற்றும் உதவியற்றத்தன்மை கொண்ட உணர்வு தோன்றியது. ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்பு கவச உடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் என்னை அழைத்துச்செல்ல வீட்டிற்கு வருவார்கள் என்ற தவிப்பு அதிகமாக இருந்தது," என்று கூறுகிறார் மிதுனா.

"என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மாறியது மே 30ஆம் தேதி, அன்றுதான் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட முதல் மருத்துவராக நான் இருந்தேன்."

இதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவில் ஒருவராக இருந்த தனது கடமை அன்று முதல் தடைப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"குடும்பத்தினரிடம் சொல்லவில்லை"

"எனக்கு தொற்று இருப்பதாக அறிந்த போது, எனக்குள் தைரியத்தை கொண்டுவர நேரமெடுத்தது. என்னுடன் தங்கியிருந்த தோழியின் ஆதரவு மட்டுமே, அன்று நான் சகஜ நிலைக்குத் திரும்ப உதவியது. ஆனால், என்னால் அவளுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று உணர்வு என்னை வாட்டியெடுத்தது," என்று கூறுகிறார் மிதுனா.

இந்த குழப்பங்களுக்கிடையில் எனது குடும்பத்தினருக்கு இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், இதைக் கேட்டு அவர்கள் கலக்கமடைவார்கள் என்ற கவலையானது, இதை பெற்றோரிடம் பகிர்வதை தடுத்தது என்று கூறுகிறார் அவர்.

"எனது பேராசிரியர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இந்த தொற்றிலிருந்து குணமடைய நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன் என்று கூறிய எலக்ட்ரீஷியன் உள்பட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இவர்களது வார்த்தைகள்தான் இந்த நோய் தொற்றை எதிர்த்து நான் தனியாக போராட்டவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும், இதுபோன்ற சூழலில் எனக்கு தேவையான மன தைரியத்தை கொடுத்தது," என்கிறார் அவர்.

"கைதட்டி, விளக்கேற்றினால் மட்டும் போதாது"

உங்களுக்கு தெரிந்த யாருக்காவது தொற்று ஏற்பட்டால், தயவுசெய்து உங்களுக்கு இது எப்படி தொற்றியது?, உன்னால் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது? போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார் மிதுனா.

"இந்த கேள்வியை கேட்பவர்கள் சாதாரணமாக கூட கேட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படும் தாக்கத்தையும், அவர்களுடைய மனநிலையையும் புரிந்துகொள்ள முடியாது. குறிப்பாக இதுபோன்ற நேரங்களில் அவர்கள் இனம் புரியாத குழப்பத்துடனும், பயத்துடனும் இருப்பார்கள். ஆகவே, அதற்கு பதிலாக ஆதரவாக பேசி, அவர்களுக்கு விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுக்கலாம்," என்கிறார் அவர்.

"மருத்துவ துறையினரை ஆதரிக்க கைதட்டுவதும் அல்லது விளக்கேற்றுவதும் மட்டும் போதாது. உங்களுக்கு அருகிலுள்ள ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும்போது அவரது நிலையறிந்து ஒற்றுமையைக் காட்டுவதே உண்மையான ஆதரவாகும். எனக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டபோது, எனது வீட்டிற்கு அருகாமையில் இருந்த சிலர் பிரச்சனை செய்துள்ளனர். ஆனால், அந்த நபர்கள் தான் சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களை கைதட்டியும், விளக்கு ஏற்றியும் பாராட்டுவதாக கூறினர்," என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் மருத்துவர் மிதுனா.

"நானே எனக்கு எடுத்துக்காட்டாய்…"

கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்ற தொடங்கியதாக கூறும் மிதுனா சிலர் தன்னை அச்சத்துடன் கண்டு விலகியதாக தெரிவிக்கிறார்.

"ஆனால், உண்மையில் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் 'ஹாய்' சொல்வதை நிறுத்துவது எனக்கு தெரிந்தது. மேலும், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்கமாட்டார்கள். என் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தமாட்டார்கள். ஒரு சிலர் பயத்துடன் விலகிச் செல்வதை நான் உணர்ந்தேன். இருந்தாலும் பரவாயில்லை, அது அவர்களுடைய அச்சத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். பிறகு, நான் நலமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனதிற்கு அமைதியளித்தது," என்று கூறுகிறார் மிதுனா.

"கொரோனா வார்டில் மீண்டும் பணியாற்ற செல்வதற்கு நான் பயப்படவில்லை என்று சொல்ல முடியாது. நரம்புகளில் சிறிதளவு தளர்வும், பயம் கலந்த உணர்வும் இருந்தது, இது பொதுவாகவே மனிதர்களின் இயல்பு. ஆனால், எனக்குள் இருக்கும் உந்துதல் சக்திதான், அந்த பயத்தை போக்க எனக்கு உதவுகிறது" என்று நம்பிக்கையுடன் கூறினார்‌ மிதுனா

"இப்போது என் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டி, அவர்களை பயத்திலிருந்து நீக்க உதவும் ஒரு எடுத்துக்காட்டாக என்னை நானே மேற்கோள் காட்டி, அதிக நம்பிக்கையுடன் அவர்களுக்கு உறுதியளிக்க உதவுகிறது. கொரோனா தொற்றிற்கு ஆளான நோயாளிகள் சீக்கிரம் குணமடைவர் என்று அவர்களிடம் உணர்வுபூர்வமான நம்பிக்கையை என்னால் ஏற்படுத்த முடிகிறது," எனத் தெரிவிக்கிறார் அந்த மருத்துவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: