You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
RCB vs KKR: முகமது சிராஜ் போராடி சாதித்த கதை - அபார பந்துவீச்சால் வென்ற பெங்களூரு
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஐதராபாத் நகரின் எண்ணற்ற ஆட்டோ டிரைவர்களில் முகமது கெளஸும் ஒருவர். ஏழ்மை நிலையில் வாழும் எண்ணற்ற பெற்றோர்களை போல அவருக்கும் தனது பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.
முகமது கெளஸின் இளைய மகனான முகமது சிராஜ், 2017 ஐபிஎல் தொடரில் ரூ. 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றபின், அந்த பெருங்கனவு நனவாகிவிடும் என்றே அவர்களின் குடும்பம் நம்பியது.
2017-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக முதல்முறையாக முகமது சிராஜ் விளையாட, அவரின் குடும்பமும், நண்பர்களும் மேலும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆனால், வாழ்க்கையின் போராட்டங்கள் மிகவும் கடுமையானது என்பது விரைவில் முகமது சிராஜூக்கு புரிந்தது.
ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக ஆரம்ப போட்டிகளில் பெரிதும் சாதிக்க இயலாத சிராஜ், விரைவில் இந்திய அணி வாய்ப்பை இழந்தார்.
விமர்சனங்கள் மற்றும் போராட்டங்கள்
ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அவர், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார்.
கொரோனா பெருந்தொற்றால் 2020 ஐபிஎல் தொடரின் துவக்கம் தாமதமானதால், மீண்டும் உடல்தகுதி மற்றும் போட்டி தகுதிக்காக சிராஜ் போராட வேண்டியதாக இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில், ஆர்சிபி ( பெங்களூரு) அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் டேல் ஸ்டெய்ன், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி மற்றும் உடானா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களே அணியில் இடம்பெற்றனர்.
பெஞ்சில் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த சிராஜ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் 2 விக்கெட்டுக்களை எடுத்தபோதும், அந்த போட்டியில் அதிக வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியுற்றதால் அவரின் பங்களிப்பு கவனம் பெறவில்லை.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சிராஜ் பந்துவீச்சில் கிறிஸ் கெயில் ஆடிய அதிரடி ஆட்டத்தால், அந்த போட்டிக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் சிராஜ் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
இதற்கு அடுத்த போட்டியில் சிராஜ் அணியில் இடம்பெறவில்லை. இதுவரை இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய சிராஜ், குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கவில்லை.
புதன்கிழமை பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் அபுதாபியில் விளையாடிய 2020 ஐபிஎல் லீக் போட்டியில் அனைத்தும் மாறியது.
டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த நிலையில், முதல் ஓவரை கிறிஸ் மாரீஸ் வீசினார்.
இரண்டாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் அல்லது நவ்தீப் சைனி வீசக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், சிராஜை பந்துவீச கோலி அழைத்தார்.
சிராஜின் அபார சாதனை
மிகவும் நேர்த்தியாகவும், வேகமாகவும் சிராஜ் பந்துவீச தொடக்க வீரர் ராகுல் திரிபாதி தடுமாறினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். ஆனால் சிராஜின் மிக சிறப்பான பங்களிப்பு அடுத்த பந்தில் தான் வெளிப்பட்டது.
மிகவும் துல்லியமாக சிராஜ் வீசிய பந்தில் ராணா போல்டானார். மேலும் அந்த ஓவர் மெய்டன் ஓவராகவும் அமைந்தது.
இதற்கு அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். அந்த ஓவரும் மெய்டன் ஓவரானது. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து மெய்டன் ஓவராக பந்துவீசிய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமை சிராஜுக்கு கிடைத்துள்ளது.
சிராஜ் மற்றும் சாஹலின் அற்புதமான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 84 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 85 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை பெங்களூரு அணி 13.3 ஓவரில் எட்டியது. மேலும் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தான் வீசிய 4 ஓவரில் 8 ரன்கள் மட்டும் வழங்கி, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகன் உட்பட பல விருதுகளை வென்றார்.
போட்டி முடிந்தவுடன் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, கடந்த ஆண்டு சிராஜின் பங்களிப்பு சிறப்பாக இல்லாததால், கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மிகவும் கடுமையாக போராடியே அவர் இந்நிலையை அடைந்துள்ளார் என்று சிராஜின் பங்களிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
சிராஜின் ஆரம்பகால போராட்டங்கள்
மிகவும் எளிய பின்னணியில் பிறந்துவளர்ந்த முகமது சிராஜ், ஆரம்ப காலங்களில் டென்னிஸ் பந்தில் மட்டுமே விளையாடியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு தான், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2016-17 ரஞ்சி கோப்பி தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய சிராஜ் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஐபிஎல், இந்திய அணி என வாய்ப்புகள் கிடைத்து பெரும்புகழ் கிடைத்தபோதிலும், அவரால் அதனை தொடர்ந்து தக்கவைக்கமுடியவில்லை.
தான் விளையாடிய 3 சர்வதேச போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள அவர், இதுவரை 1 சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ரஞ்சி மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவரால் எவ்வித தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக அளவு ரன்கள் தந்ததால், கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டியதாக இருந்தது.
போராடி கிடைத்த வாய்ப்பை தக்கவைப்பது, அதைவிட கடுமையான போராட்டம். அதனை கடந்த இரண்டு ஆண்டுகளில் நன்கு உணர்ந்தது சிராஜின் நேற்றைய பங்களிப்பில் வெளிப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: