You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் வெங்காயம் கிலோ ரூ. 100 - எகிறும் விலை உயர்வு? பதறும் பொதுமக்கள்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 100 என்ற அளவில் விற்பனையாகிறது. அண்டை மாநிலங்களான கரநாடகா, தமிழ்நாடு ஆகியவற்றிலும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
முன்னதாக, இந்த அசாதாரண நிலையை தடுக்க இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநோயத்துறை அமைச்சகம், வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள வியாபாரிகளை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய பேசி வருகிறது.
இதற்காக தெற்காசிய நாடுகளில் உள்ள தனது தூதர்களை உடனடியாக அந்தந்த நாடுகளில் உள்ள வெங்காய வியாபாரிகளிடம் பேசுமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு ஏதுவாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளையும் இந்திய அரசு தளர்த்தியிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 35 முதல் ரூ. 40 என்ற அளவில் இருந்தது. இதன் விலை புதன்கிழமை ரூ. 46.33 ஆக இருந்தது.
அதே சமயம், தென் மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 60 முதல் ரூ. 90 என்ற அளவிலும் சில நகரங்களில் ரூ. 100 வரையும் விற்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்து நீக்க சான்றிதழ் பெறுவது அவசியம் என்ற விதி உள்ளது. தாவரங்கள் தனிமைப்படுத்துதல் தூய்மை ஒழுங்கு விதிகளின்படி இந்த நடைமுறையை இந்தியாவில் உள்ள வெங்காய இறக்குமதியாளர் பூர்த்தி செய்தால்தான், அவரால் நாட்டுக்குள் வெங்காயத்தை கொண்டு வர முடியும்.
இந்த சான்றிதழ் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வந்தால் அவை பூச்சி மருந்து கலப்புள்ள பொருளாகக் கருதப்பட்டு பறிமுதல் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம்.
இந்த நடைமுறையில் தற்போது தளர்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இந்திய நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது. இதேபோல, ராபி வெங்காய ரகத்தை மிதமான விலையில் மத்திய அரசின் விற்பனைக்கிடங்குகள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கடைகள் மூலம் விநியோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, இந்தியாவில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் எழுந்ததால், உள்நாட்டுச்சந்தையில் அதன் விலையேற்றத்தை தடுக்கும் விதமாக வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தடை விதித்தது.
அந்த தடை நடவடிக்கை, வெங்காயத்தை பொடியாக்கி ஏற்றுமதி செய்யவும், நறுக்கிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் பொருந்தாது என்று அரசு கூறியது.
மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொழிந்த கன மழை காரணமாக காரிஃப் பருவ சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும், பராமரிப்பகங்களில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம், விதை பராமரிப்பு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
இவை நீங்கலாக மற்ற இடங்களில் இருந்து 37 மெட்ரிக் டன் அளவுக்கு வெங்காயம் வர வாய்ப்புள்ளதால் அவை விலையேற்றத்தை தவிர்க்க உதவலாம் என இந்திய அரசு நம்புகிறது.
இதே சமயம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வெங்காய சாகுபடி குறைந்தாலும், வெங்காயத்தை அதிக விலைக்கு விற்க முடிவது சில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு அதிகமாக வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ. 1,400 கோடிக்கும் அதிகமாக வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3,200 கோடிக்கும் அதிகமாக இந்தியா வெங்காயத்தை ஏற்றுமதி செய்திருந்தது. இந்தியாவின் வெங்காயத்துக்கு இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இருந்தபோதும், தற்போதைய வெங்காய ஏற்றுமதி தடை நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோதும், உள்நாட்டில் அதிகரித்து வரும் விலையேற்றத்தை அரசு மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என நுகர்வோர் தரப்பு எதிர்பார்க்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: