திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு: பா.ஜ.க தலைவர் எல். முருகன் கூறியது என்ன? - விரிவான தகவல்கள்

எல்.முருகன்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்து தமிழ் திசை: பெரியார் சிலை அவமதிப்பு - பா.ஜ.க தலைவர் கூறியது என்ன?

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர். இது தொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியார்

பட மூலாதாரம், Facebook

பா.ஜ.க தலைவர் எல்.முருகன், " திருச்சியில் ஈ.வெ.ராவின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் புனிதமான காவியை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல." என்று கூறி உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈவெராவின் பிறந்தநாள் அன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இதுதான் நீங்கள் அவருக்கு காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காவல்துறை விசாரித்து கொண்டிருக்கும் போதே உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி உள்ளார்.

தினத்தந்தி: "அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது"

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் நடைபெற உள்ளது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கட்சி வளாகத்தில் 2 இடங்களில் நிர்வாகிகள் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பிரமாண்ட எல்.இ.டி. டி.வி.க் களும் வைக்கப்பட்டு உள்ளன. செயற்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்கள் கருத்து கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுடன், பொதுக்குழு தேதி குறித்து அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.

அஜித்தின் முதல் படம் அமராவதி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்தார் அஜித். அதுதான் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம். இந்தப் படத்தில் அஜித் நடிப்பதற்கு முக்கியக் காரணம், எஸ்.பி.பி. அதுமட்டுமல்லாமல் தமிழிலும் அஜித்தின் அறிமுகத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஓர் இளமையான காதல் படத்துக்கு இளம் கதாநாயகனைப் பரிந்துரை செய்யுமாறு அமராவதி இயக்குநர் செல்வா, எஸ்.பி.பி.யிடம் கேட்டுள்ளார். அஜித் பற்றியும் தெலுங்குப் படம் பற்றியும் செல்வாவிடம் எஸ்.பி.பி. கூற, இதன்மூலமாகவே அமராவதி படத்தின் கதாநாயகன் ஆனார் அஜித் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

நடிகர் பாஸ்கிக்கு அளித்த ஒரு பேட்டியில் அஜித் குறித்து எஸ்.பி.பி. பேசி இருப்பதாக கூறும் அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது.

அஜித்தும் சரணும் பள்ளித்தோழர்கள். வீட்டுக்கெல்லாம் வருவார். அவர் பார்க்க நன்றாக இருப்பார். 16,17 வயதில் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல சட்டை வேண்டும் என்று சரணின் சட்டையை வாங்கிச் சென்றார். அது என் நினைவில் இருந்தது.

அப்போது அவர் வளர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். கொல்லபுடி மாருதி ராவ் சார் ஒரு படம் எடுத்தார். அவர் மகன் தான் இயக்குநர். அழகான, நல்ல தோற்றம் கொண்ட புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அஜித் ஞாபகம் தான் வந்தது. என் மகனின் வகுப்புத் தோழன் ஒருவன் இருக்கிறான். பார்க்கிறீர்களா என்று சொன்னதும் அந்த வாய்ப்பை அஜித்துக்கு வழங்கினார் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: