திருப்பூரில் காவல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மரணம் - என்ன நடந்தது?

திருப்பூரில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம்

பெண்ணின் பிறப்புறுப்பில் சுடுநீர் ஊற்றிய வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் நேற்று காவல்நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

வலிப்புநோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அவரது இறப்பில் சந்தேகமிருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

"நேற்று காலை இரண்டு காவலர்கள் எங்களது வீட்டிற்கு வந்தனர். விசாரணைக்காக கூட்டி செல்கிறோம் எனக் கூறி எனது தம்பியை அவர்கள் அழைத்துச் சென்றனர். உடனடியாக நாங்களும் அவர்கள் பின்னால் காவல் நிலையத்திற்கு சென்றோம். விசாரணை முடிந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் என நாங்கள் காத்திருந்தோம். உணவு வாங்குவதற்காக காவல்நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வந்து பார்க்கையில், மணிகண்டனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக காவலர்கள் கூறினர். அடுத்த சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனது சகோதரரின் இறப்பு குறித்து முழுமையான தகவல்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுக்கின்றனர்" என உயிரிழந்த நபரின் சகோதரி ஜெயந்தி தெரிவித்தார்.

மணிகண்டன் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழுமினர்.

பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் மணிகண்டன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம்

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்களை ஆட்சியர் சமரசம் செய்ததோடு, உயிரிழப்பு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், "சில தினங்களுக்கு முன்பாக பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் சுடுநீர் ஊற்றி மரணம் ஏற்படுத்திய வழக்கில், மணிகண்டன் என்பவர் அவரது வீட்டிலிருந்து, திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்காக அழைத்துவரப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து 176 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து இன்று அறிக்கை வெளியிடப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் முடிவுகளை பொறுத்தே இச்சம்பவத்தின் அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :