You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய அளவில் டிரண்டாகும் ஹேஷ்டாக் - யுவன்சங்கர் ராஜா படத்தால் தொடங்கியது
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்றினால் டிவிட்டரில் இந்திய அளவில் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது.
மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷ் ட்விட்டரில் இசைமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் தானும் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் யுவன் சங்கர் ராஜா “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும், மெட்ரோ ஷிரிஷ் ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும் அணிந்திருந்தனர்.
ஷிரிஷின் பதிவை ரீட்வீட் செய்த யுவன் சங்கர் ராஜா, அதற்கு ”தம்ஸ் அப்” பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட் பதிவிற்கு பிறகு இந்த புகைப்படங்களை பகிர்ந்து அந்த இரு வாசகங்களையும் பதிவிட்டு வருகின்றனர் சமூக பதிவாளர்கள்.
சமீப காலத்தில் எழுந்த சர்ச்சைகள்
டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, ஹிந்தி தெரியாததால், "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சமீபத்தில் சர்ச்சையாகியது.
"இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியரா?" என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியராக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டு கனிமொழி ட்வீட் செய்திருந்தார்.
அந்த சமயத்தில் இது ஹிந்தி மொழித் திணிப்பு என பலர் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பகிந்தனர்.
தென் இந்திய அரசியல் தலைவர்களும் கனிமொழியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கனிமொழியும் இதே ட்ரெண்டிங் பதிவு ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார்.
இதற்குப் பிறகு, இந்திய மருத்துவ முறைகளுக்கான 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியதாகவும், இந்தி தெரியாவிட்டால் வெளியேறலாம் என்று அதிகாரி கூறியதாகவும் தமிழக மருத்துவர்கள் குற்றம் சுமத்தினர்.
அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: