You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வசந்தகுமார் மறைவு: "தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தவர்" - நரேந்திர மோதி இரங்கல்
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியகுமாரியைச் சேர்ந்த எம்.பி., எச். வசந்தகுமார் காலமானதை அறிந்ததில் வருத்தம் கொள்கிறேன் என்றும், ஒரு தொழில்முனைவோராக சமூக ஆர்வலராக, அரசியல் மற்றும் வணிக உலகில் தனது பெயர் ஈட்டியவர் வசந்தகுமார். தமிழ்நாட்டில் மக்கள் நோக்கங்களுக்காக அவர் கொண்டிருந்த பக்தி மிகவும் ஈர்க்கத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தமது டிவிட்டர் பக்கத்தில் வசந்தகுமாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
"வணிக மற்றும் சமூக சேவை முயற்சிகளில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அவருடனான நான் பேசியபோதெல்லாம், தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவரது ஆர்வத்தை கண்டேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், வசந்தகுமாரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். "காங்கிரஸ் சித்தாந்தம் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைக்கும். காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அவரது மறைவு இழப்பாகும். இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களுடைய பிரார்த்தனைகள்" என்று ராகுல் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், தீவிர காங்கிரஸ் பற்றாளரையும் உண்மையான மக்கள் தலைவரையும் நாடு இழந்து விட்டதாகக் கூறி இரங்கல் செய்தி பகிரப்பட்டுள்ளது.
வசந்தகுமாரின் சகோதரர் மகளும் தெலங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், சித்தப்பா, நீங்கள் இல்லை என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது. கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது. ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று இரங்கல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தீவிர காங்கிரஸ் ஊழியராகவும் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் தொகுப்பாகவும் வசந்தகுமார் திகழ்தார். அவரது மறைவால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்! காங்கிரஸ் கட்சியினருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும்! என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: தொடரும் வென்டிலேட்டர் சிகிச்சை - நிலவரம் என்ன?
- நீட், ஜேஇஇ தேர்வு: காங்கிரஸ் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?
- கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக தகவல் - உடல்நலப் பிரச்சனை காரணமா?
- நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: