You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
40 வயதாகும் சந்துரு, கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஐடி நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளாக ஐடி ஊழியராக பணியாற்றிய சந்துரு, பணி நீக்கத்தை எதிர்த்து தற்போது தொழிலாளர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கான பள்ளிக்கூடசெலவு, ஐடி நிறுவன வேலையை நம்பி வாங்கிய வீடு, அன்றாட செலவுகளுக்கு உதவி செய்யும் மனைவி என பலவற்றையும் சிந்தித்து கடந்த ஐந்து மாதங்காளாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சந்துரு.
''18 ஆண்டுகளுக்கு முன் சாப்ட்வேர் டெவலப்பர் ஐடி வேலை கிடைத்தபோது வாழ்க்கை மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் என் வளர்ச்சியால் என் குடும்பத்தினர் மகிழ்வோடு இருந்தனர். 2016 முதல் ஐ டி நிறுவனங்களில் வெளிப்படையாக பணியாளர்களை நீக்கம் செய்வது தொடங்கியது. நான் டீம் லீடராக இருந்தேன் என்பதால், அதுபோன்ற ஒரு சிக்கல் இருக்காது என்று எண்ணினேன்,''என்கிறார் சந்துரு.
சந்துருவை போல சுமார் 25,000 ஐடி ஊழியர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் வேலையிழந்துள்ளனர் என தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கான யுனைட் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய யூனைட் என்ற தொழிற்சங்க அமைப்பின் பொது செயலாளர் வெல்கின், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வளர்ச்சி உள்ளபோதும், பணியிடங்களை குறைப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பும் தொழிற்சங்கவாதிகள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்கிறார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
''ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை அவர்களின் வளர்ச்சி குறியீடுகள் காட்டுகின்றன. ஐடி நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையைப் பார்த்தால், லாபம் உயர்ந்துள்ளது பற்றியும், தேவையற்ற பணிநீக்கம் எவ்வாறு அதோடு தொடர்புடையது என்பதை அறிந்துகொள்ளல்லாம். குறிப்பாக, ஐ டி நிறுவனங்களில் நடைபெறும் தேவையற்ற ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு தொடர்பாக வெளிப்படையாக பேசுபவர்களை பணிநீக்கம் செய்கிறார்கள்,''என்கிறார் வெல்கின்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.
'' ஒரு நாளில் எட்டு மணிநேரம்தான் வேலை என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதி. இதனை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள போதும், தற்போது 12 மணிநேரம் வேலை பார்ப்பதில் சிக்கல் இல்லை என விதிகளை மாற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 12 மணிநேரம் வேலைவாங்குகிறார்கள். ஊதியத்தை குறைத்துவிட்டார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு என எல்லாவற்றையும் நிறுத்தி, பணியிடங்களையும் குறைத்துவிட்டார்கள். பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பு போலவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்பை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை,''என்கிறார் ஜோதி சிவஞானம்.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படும் வேலைவாய்ப்பு இழப்பு காரணமாக நடுத்தர மற்றும் உயர் வகுப்பு மக்களின் நுகர்வு அளவை குறைவதால், பொருளாதார சரிவு நீடிக்கும் என்கிறார் அவர்.
''தகவல் தொழில்நுப்ட பணிகளுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது. இந்த பணிகளுக்கு தரப்படும் சம்பளத்தைக் கணக்கில் கொண்டு, வாங்கிய கடனை செலுத்துவதில் பிரச்சினை இருக்கும், அவர்கள் திட்டமிட்டிருந்த முதலீட்டில் பணம் போடமாட்டார்கள், சம்பள குறைப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அவர்கள் மூலம் ஏற்பட்ட நுகர்வுச் சங்கிலி அறுந்து பொருளாதார சரிவில் மேலும் ஒரு அழுத்தம் ஏற்பட்டுள்ளது,''என்கிறார் அவர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிநீக்கம் செய்யக்கூடாது என அறிவிப்பை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டது என்றும் போதிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கிறார் ஜோதி சிவஞானம்.
''அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடன், பணிநீக்கம் இருக்கக்கூடாது, இழப்பில் வாடும் நிறுவனங்களுக்கு அரசு உதவி கட்டாயமாக கிடைக்கும் என்ற உறுதி அளிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. நம் நாட்டில் குறைந்த அவகாசம் எதுவும் கொடுக்காமல், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது, பின்னர் முதலீடு துறைகளில் எந்த பணமும் புரளாத நிலை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நுகர்வு குறைந்தது, தற்போது பணிநீக்கம் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம்,''என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- உச்சநீதிமன்றம் உத்தரவு: “பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்” - தமிழகத்திற்கு இது பொருந்துமா?
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக தகவல் - உடல்நலப் பிரச்சனை காரணமா?
- ஜோ பைடன் "அமெரிக்கர்களின் கனவை அழித்துவிடுவார்" - டிரம்ப் எச்சரிக்கை
- வேலைவாய்ப்பு: இந்திய இளைஞர்களின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்? - ஓர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: