அகதிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து: ஐரோப்பா செல்ல முயன்ற 45 பேர் பலி மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான கப்பல் விபத்து இது.
ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் மற்றும் ஐநாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.
லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாஃபி 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய நாடாக லிபியா உள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் சரியாக கணக்கிடப்படுவது இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 தொற்றால் இதுவரை இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் உலளகவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால், 10 லட்சம் பேரில், 34 பேர் இறப்பு என்ற எண்ணிக்கையை பார்க்கும்போது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட இந்தியாவில் குறைவான உயிரிழப்புகளே பதிவாகியுள்ளது.
விரிவாகப் படிக்க: இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் சரியாக கணக்கிடப்படுவது இல்லையா?
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து

பட மூலாதாரம், NICOLAS ASFOURI / Getty
சீனா தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்மின் ஒரு பிரிவு மேம்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, வரும் டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.
உலக அளவில் வேகமாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த முயற்சியில், வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்ற 75 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
விரிவாகப் படிக்க: கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் டிசம்பரில் விற்பனைக்கு வரும் மருந்தின் விலை எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் பரவியதா D614G கொரோனா திரிபு?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய மலேசியாவாழ் தமிழர் ஒருவர், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், மலேசியாவில் அவர் மூலமாக 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதை அடுத்து, சிவகங்கையில் உள்ள அவரது குடும்ப உறவினர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பத்து மடங்கு வேகமாகப் பரவும் என்று கணிக்கப்பட்டுள்ள D614G என்ற கொரோனா வைரசின் புதிய திரிபு அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம்.
விரிவாகப் படிக்க: தமிழ்நாட்டில் பரவியதா D614G திரிபு? மலேசிய நபரின் சிவகங்கை குடும்பத்தினருக்கு பரிசோதனை
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ரத்து

பட மூலாதாரம், FACEBOOK
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
விரிவாகப் படிக்க: இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ரத்து - புதிய அமைச்சரவை அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












