You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநகராட்சி நடவடிக்கை
கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தவும் அவர்களின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இ- பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதால் சென்னைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கான இ - பாஸ் நடைமுறைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டு, போதிய விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 18,853 பேர் இ - பாஸிற்கு விண்ணப்பித்தனர். இதில் 18,823 பேருக்கு இ - பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இம்மாதிரி இ - பாஸ் பெற்று வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 7,8,10,11,13 ஆகிய மண்டலங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தற்போது இ- பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டிருப்பதால், சென்னையை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மாதிரி பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலை மற்றும் அலுவலகப் பணிகளுக்காக சென்னைக்குள் வரும் நபர்கள் குறித்த தகவல்களை மண்டல அலுவலர்கள் சேகரித்து அவர்கள் தனிமைப்படுத்தபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபாரப் பணிகளுக்காக வெளி மாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆகவே அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து கண்காணிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீதும் வெளியிடங்களுக்கு வரும்போது முகக் கவசம் அணியாதவர்கள் மீது, சமூக இடைவெளியைப் பின்பற்றாத வர்த்தக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- சென்னையில் மதுக்கடைகள் திறப்பு; எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை
- டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்
- கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?
- எட்டு வழிச்சாலை: "உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும்"
- எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
- சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: