கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கொடநாடு விவகாரம் தொடர்பாக அவதூறான குறும்படம் ஒன்றை வெளியிட்டதற்காக நஷ்ட ஈடு கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதில் விளக்கமளிக்க பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட சயன், வாலையாறு மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில், முதலமைச்சரைத் தொடர்புபடுத்தி பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார்.

தனது பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக மாத்யூ சாமுவேல், சயான், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து ஏழு பேரும் முதலமைச்சரை பற்றி பேசவும் எழுதவும் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டுமெனக் கோரி மேத்யூ சாமுவேல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் புதன்கிழமையன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.டி. ஆஷா, முதலமைச்சர் தொடர்ந்த வழக்கை இந்த கட்டத்தில் நிராகரிக்க தேவை ஏதும் இல்லை என்று கூறி மேத்யூ சாமுவேலின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக மாத்யூ சாமுவேல் செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனக் கூறி, வழக்கையும் ஒத்திவைத்தார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: