You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்குப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருமணம், மரணம் போன்ற முக்கியமான காரணங்களுக்காக செல்ல விரும்புபவர்கள் தமிழக அரசிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்துவந்தது. இந்த அனுமதி இ-பாஸ் என அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால், அத்தியாவசியமான தருணங்களில் விண்ணப்பித்தால்கூட இ-பாஸ் கிடைப்பதில்லை, பல அத்தியாவசியமான காரணங்களை இ - பாஸ் கோரிக்கை மனுவில் குறிப்பிட முடியவில்லை என நீண்ட காலமாக புகார்கள் இருந்து வந்தன. இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசிடம் கோரி வந்தனர்.
இ-பாஸ் முறையை ரத்துசெய்தால், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்களைக் கண்காணிக்க முடியாது; கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி இந்த முறையை நீக்க தமிழக அரசு மறுத்து வந்தது.
இந்த நிலையில், இன்று இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விண்ணப்பித்தால், விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் இ - பாஸ் வழங்கப்படும் என முதலமைச்சரின் அறிவிப்பு கூறுகிறது.
பொதுமக்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டும் விண்ணப்பித்து இ - பாஸை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரச்சனை என்ன? - விரிவான தகவல்கள்
- கமலா ஹாரிஸின் ஒரேயொரு பலவீனம் இதுதான் - தாய்மாமா பகிரும் புதிய தகவல்கள்
- தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை
- பிரசாந்த் பூஷண்: குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்
- இஸ்லாத்தை `பாதுகாப்பதற்கான' மசோதா: பாகிஸ்தானில் தொடரும் சர்ச்சை
- ”தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே”: கு.க. செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: