74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், TWITTER
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தேசிய கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோதி.
இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் பரவலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோதி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார்.

பட மூலாதாரம், ANI
டெல்லி செங்கோட்டையில் இன்று (சனிக்கிழமை) காலை 6.45 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வில் சரியாக காலை 7.30 மணியளவில் நரேந்திர மோதி தேசிய கொடி ஏற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது புதிய, புதிய திட்டங்களையும் நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பான தமது பார்வையும் பிரதமர் நரேந்திர மோதி வெளிப்படுத்துவார்.

பட மூலாதாரம், ANI
இந்த ஆண்டு, கொரோனா வைரஸ், பொருளாதார தாக்கம் என பல்வேறு பிரச்னைகளை நாடு எதிர்கொள்ளும் வேளையில், தமது சுதந்திர தின உரையில், ஆத்மநிர்பார் பாரத், தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக, இம்முறை சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் மிக முக்கிய பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் கொடி அணிவகுப்பு மரியாதை செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்படும் நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே இந்த ஆண்டு கலந்து கொளள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக நான்காயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாஜ்பேயியை விஞ்சிய பிரதமர் மோதி
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-இல் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதைத்தொடர்ந்து 2019-இல் நடந்த தேர்தலில், இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பிறகு, மோதி பங்கேற்கும் தொடர்ச்சியான ஏழாவது சுதந்திர தின நிகழ்ச்சி இதுவாகும்.
இதன் மூலம், மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு பிறகு அதிக நாட்கள் ஆட்சியில் தொடரும் பிரதமராகவும் நரேந்திர மோதி விளங்குகிறார். வாஜ்பேயி தமது அனைத்து பதவிக்கால நாட்களையும் சேர்த்து மொத்தம், 2,268 நாட்களுக்கு பிரதமராக இருந்தார். அந்த கால அளவை தற்போது பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோதி விஞ்சியிருக்கிறார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரதமர்களாக இருந்த ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர்தான் நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களாக இதுவரை அறியப்படுகிறார்கள்.
மத்தியில் பிரதமராக பதவிக்கு வரும் முன்பாக குஜராத் முதல்வராக நரேந்திர மோதி இருந்தார். 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு அந்த மாநில முதல்வராக நரேந்திர மோதி பதவி வகித்தார்.
பிற செய்திகள்:
- கோழிக்கோடு விமான விபத்து: கேரளாவில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சி நடக்குமா?
- எஸ்.பி. பாலசுப்ரமணியம்: வதந்திகளை நம்ப வேண்டாம் என மகன் எஸ்.பி. சரண் வேண்டுகோள்
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: தற்போதைய நிலை என்ன?
- தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை
- பிரசாந்த் பூஷண்: குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்
- இஸ்லாத்தை `பாதுகாப்பதற்கான' மசோதா: பாகிஸ்தானில் தொடரும் சர்ச்சை
- ”தி.மு.கவிலிருந்து என்னை நீக்கியது சந்தோஷமே”: கு.க. செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












