You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கம் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு என சொல்ல முடியுமா? - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சிறு, சிறு சரிவுகள் இருந்தாலும் முதலீட்டுச் சந்தையில் கூர்ந்து கவனிக்கக்கூடிய பொருளாக தங்கம் மாறியிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணம், அதில் உள்ள முதலீட்டு வாய்ப்பு, விலை உயரும் சாத்தியங்கள் ஆகியவை குறித்து பிபிசியிடம் பேசினார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். அவரது பேட்டியிலிருந்து:
கே. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணம் என்ன?
ப. தங்கத்தின் விலை உயர ஒரே ஒரு காரணம்தான். அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என எந்த அரசுக்கும் வருவாய் இல்லை. அதனால் செலவு செய்வதற்காக நோட்டுகளை கூடுதலாக அச்சிடுகிறார்கள். ஆனால், தங்கம் என்பது குறிப்பிட்ட அளவில்தான் கிடைக்கும். தங்கத்தின் விலை உயர்வதற்கு இதுதான் முக்கியமான காரணம்.
கே. உலகின் மிகப் பெரிய அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், நுகர்வு குறைந்திருப்பதால் கடந்த சில மாதங்களாக இறக்குமதி வெகுவாகக் குறைந்திருக்கிறது. இருந்தும் விலை உயர்வு ஏன்?
ப. இதில் இரண்டு, மூன்று விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தங்கம் என்பது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள். இறக்குமதி செய்யும்போது 12.5% அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. 3% ஜிஎஸ்டி இருக்கிறது.
அதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை 15-16% அளவுக்கு அதிகம். அதனால், தங்கம் நேரடியாக இறக்குமதி செய்யப்படுவது மிகவும் குறைவு. அதனால், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை நாடுகளிலிருந்து கடத்தப்பட்டுதான் உள்ளே வருகிறது.
ஒரு கிலோ தங்கத்தின் விலை இன்று 60 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதனால், ஒரு கிலோவை எப்படியாவது கடத்தினால் 8 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதில் பல தரப்பினரும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். ஆகவே தங்கக் கடத்தல் மிகச் சாதாரணமாக நடக்கிறது.
தங்கத்தால் எந்தப் பலனும் இல்லை என அரசு தவறாகக் கருதுகிறது. அதனால், மக்கள் தங்கத்தை வாங்கக்கூடாது என பல விஷயங்களை முயற்சிக்கிறார்கள்.
காங்கிரஸ் அரசும் இந்த அரசும் இதைச் செய்கின்றன. ஆனால், மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவே முடியாது. ஏனென்றால் மக்கள் வங்கிகளில் சேமித்தால் போதுமான லாபம் கிடைப்பதில்லை. ஒரு வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், 5.3 சதவீதம்தான் வட்டி கிடைக்கும். இதில் வருமானவரி பிடித்தம் செய்வார்கள்.
ஆக, கிடைப்பது 4.75%. இன்று பண வீக்கம் என்பது அரசு சொல்வதன்படியே பார்த்தாலும் 6.03%. ஆனால், உணவுப் பொருட்களில் பணவீக்கம் என்பது 7.8ல் இருக்கிறது. அசைவ உணவுகளுக்கான பணவீக்கம் 16-17% அளவு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய உணவுப் பொருட்களை வாங்க இந்த ஆண்டு 108 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
ஆனால், வங்கியில் இந்தப் பணத்தை வைத்திருந்தால், எனக்கு ரூ. 104.75 தான் கிடைக்கும். ஆக, பணத்தைச் சேமிக்க விரும்பும் ஒருவர் எங்கு சேர்த்து வைப்பார்? தங்கத்தை வாங்கித்தான் சேமிப்பார். அதைத் தடுக்க முடியாது.
கே. தங்கத்தின் இறக்குமதி குறைந்திருப்பதால் நம்முடைய வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்குமா?
ப. இது தவறான கருத்து. வர்த்தகப் பற்றாக்குறை குறைவதற்குக் காரணம், பெட்ரோலியத்தின் விலை குறைவு. முன்பு 70 டாலர் இருந்த கச்சா எண்ணை இன்று 35 டாலராக இருக்கிறது. அது தவிர, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நாம் கச்சா எண்ணையைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த ஜூலை மாதத்தோடு ஒப்பிட்டால், 21 சதவீதம் குறைவாக டீசலைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஆகவே வர்த்தக பற்றாக்குறை குறைந்ததற்கு கச்சா எண்ணெய் பயன்பாடு குறைந்ததுதான் காரணமே தவிர, தங்கம் முக்கியமான காரணமல்ல.
கே. விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கத்தை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு எனச் சொல்ல முடியுமா?
ப. நிச்சயமாக. ரிசர்வ் வங்கியோ அதை ஒப்புக்கொண்டிருக்கிறது. முன்பு தங்கத்துக்கு அதன் மதிப்பில் 75% அளவுக்கு கடன் கொடுத்தார்கள். ஆனால் இப்போது தங்கத்தின் மதிப்பில் 90% அளவுக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள்.
தங்க முதலீட்டில் மற்றொரு வகை Sovereign Gold bond. ஒருவரால் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு பணத்தை முடக்க முடியும் என்றால் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் அரசுக்குத்தான் பெரும் இழப்பு. 2015ல் ஒருவர் 100 கிராம் தங்கத்தை முதலீடு செய்தால், 2 கிராம் தங்கம் வட்டி. அன்று அந்த 2 கிராமின் விலை 5,200 ரூபாய். இன்று அதே இரண்டு கிராம் 12 ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது. 5 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மேலும் இரண்டாண்டுகளுக்கு நான் முதலீடு செய்தால், நான் முதலீடு செய்த 2,60,000 ரூபாய்க்கு பதிலாக அரசு எனக்கு 6 லட்சமாகத் திரும்பத் தர வேண்டும். அதாவது மத்திய அரசு இந்த பாண்டுகளின் மூலம் 25 சதவீத வட்டிக்குக் கடன் வாங்குகிறது. இதைவிட முட்டாள் தனம் இருக்க முடியுமா?
ரிசர்வ் வங்கியும் பிற வங்கிகளும் 5.5 சதவீத வட்டியில் கடன் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதைவிட்டுவிட்டு 25% வட்டிக்குக் கடன் வாங்கினால், உலகம் சிரிக்கும். இந்தியா மட்டும்தான் அப்படிச் செய்கிறது.
கே. தங்கத்தின் விலை உயர்வு அரசாங்கத்தின் செலவினங்களை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
ப. பாதிக்காது. ஆனால், அரசுகள் பொறுப்பில்லாமல் நோட்டுகளை அடித்துத் தள்ளக்கூடாது. இந்த முறை நோட்டுகளை அதிகம் அடிப்பது அவசியம். இன்னும் கடன் வாங்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். இதற்கு முந்தைய காலத்தில் பொறுப்பில்லாமல் செலவு செய்ததால்தான் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
உதாரணமாக, பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்கிறோம் என்பார்கள். ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தை விற்கிறோம் என்று சொல்வார்கள். அதனை மற்றொரு அரசு அமைப்பான ஓஎன்ஜிசி வாங்க வேண்டும் என்பார்கள். கடனே இல்லாத அந்த நிறுவனம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தை வாங்கியுள்ளது. கேட்டால் தனியார்மயமாக்கம் என்பார்கள். இதுபோல ஐந்து வருடமாக பொறுப்பே இல்லாமல் அரசு செயல்பட்டது.
இப்போது கோவிட் - 19 காலத்தில் நிறைய கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஏற்கனவே ஏகப்பட்ட கடனை வாங்கிக் குவித்திருக்கிறோம். இப்போதும் கடனை வாங்குவதால் தங்கத்தின் விலை ஏறுகிறது. அரசாங்கம் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால்தான் தங்கத்தின் விலை ஏறும்.
1980களில் 31 அவுன்ஸ் தங்கத்தின் விலை 850 டாலராக இருந்தது. அப்போது அப்போது பால் வோல்கர் என்பவரை ஃபெடரல் ரிசர்வ் ஆளுனராக நியமித்தார்கள். அவர் உடனடியாக வட்டி விகிதத்தை 20 சதவீதமாக அதிகரித்தார். உடனடியாக பணப்புழக்கம் குறைந்தது. 850 டாலராக இருந்த தங்கத்தின் மதிப்பு 200 டாலர் குறைந்தது. ஆக அரசாங்கம் எவ்வளவு பொறுப்போடு இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் தங்கத்தின் விலை ஏறவோ, இறங்கவோ செய்யும்.
2008ல் ஒரு சிக்கல் ஏற்பட்டது. தங்கத்தின் விலை 1900 டாலரிலிருந்து 1,300 டாலருக்கு இறங்கியது. அதாவது 40 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி. ஆனால், இந்தியாவில் 40 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி இல்லை. 15% தான் விழுந்தது. ஏனென்றால் ரூபாயின் மதிப்பும் 25% அளவுக்குக் குறைந்தது. இப்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2,500 டாலரைத் தொட்டு கீழே இறங்குவதற்குள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாக வீழ்ந்து விட்டால் தங்கத்தின் விலை குறையாது. ஆகவே ஒரு அரசாங்கம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் காட்டும் அளவுகோல்தான் தங்கம்.
கே. இந்த விலை உயர்வை இரண்டு விதமாக அணுகுகிறார். ஒன்று முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. மற்றொன்று, திருமணம் போன்றவற்றுக்கு நகை வாங்குவோர், பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் உங்கள் அறிவுரை என்ன?
ப. திருமணத்துக்கு தங்கம் வாங்க வேண்டும் என்பது தவறு. நான் பல முறை இதைச் சொல்லிவிட்டேன். நடுத்தர வர்க்கம் கடன் வாங்கி கல்யாணத்திற்கு செலவு செய்வதென்பது தேவையே இல்லை. தங்கம் என்பது வெறும் முதலீடுதான். இப்போது கொரோனா பரவல் காரணமாக, மூன்று மாதங்களாக வேலை இழந்த ஒருவர் தன் கையில் இருக்கும் தங்கத்தை வைத்து பணம் வாங்கி செலவழிக்கலாம். அப்படி ஒரு நெருக்கடி நிலைக்கான முதலீடுதான் தங்கம். ஆகவே, கல்யாணத்துக்கு தங்கம் வாங்குவேன் என்பது தவறு.
கே. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரமா?
ப. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது குதிரை ஓடுவதற்கு முன்பாக, லாயத்தை மூட வேண்டும். தங்கத்தை பொருத்தவரை குதிரை ஓடிவிட்டது. இனி லாயத்தை மூடி பயன் இல்லை. ஆனால், இனிமேலும் தங்கத்தின் விலை இனி எந்த அளவுக்கு உயருமென யாரும் சொல்ல முடியாது. இப்போது சுத்தமான தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,000ஐ நெருங்கிவிட்டது. ரூ. 7,000ஐத் தொட்டுவிட்டு திரும்ப ரூ. 5,000க்கு வரலாம். அல்லது ரூ. 6000லிருந்தே 5,500க்கும் வரலாம். இப்போது தங்கத்தின் விலையைப் பொருத்தவரை, இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, 10% ஏற்ற இறக்கத்துடன் இதே விலையில் நீடிக்கலாம். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்போ, தேர்தலுக்குப் பிறகு வரும் அதிபரோ கூடுதலாக நோட்டுகளை அடித்தால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,500 டாலரைத் தாண்டிவிடும். ஆனால், ஒரு நாள் தங்கத்தின் விலை ஒரு கிராம் 10,000ஐ நிச்சயம் தொடும். ஆனால், அது என்று என்பதுதான் தெரியாது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது சாத்தியமா?
- சென்னை-அந்தமான் ரூ.1,224 கோடி கண்ணாடி இழை கேபிள்: தொடக்கி வைத்த பிரதமர் மோதி
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: