தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: கொரோனா வைரஸ் காரணமா? - விரிவான ஆய்வு

    • எழுதியவர், மொஹம்மத் ஷாஹித்
    • பதவி, பிபிசி

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் வேலைவாய்ப்பிழப்பு மக்களைப் பாதித்து வரும் நிலையில் மற்றொரு பக்கம், நாளுக்கு நாள், தங்கம், வெள்ளி விலை விண்ணை எட்டி வருகிறது.

தொற்றுநோய்த் தாக்கத்தினால், நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமான நிலையை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.5% இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவிலும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9% என்ற அளவிலேயே இருக்கும் என்று ஐ எம் எஃப் மதிப்பிட்டுள்ளது.

இவையனைத்துக்கும் இடையிலும் ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறதென்றால், அது தங்கத்தின் விலை நிலவரம்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 46 ஆயிரத்து 600 ரூபாய் என்ற அளவில் இருந்தது இப்போது பத்து கிராம் தங்கத்தின் விலை 48 ஆயிரம் ரூபாய் என்று உயர்ந்துள்ளது.

உலக அளவில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு இந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமையன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அது வெறும் சுமார் 400 ருபாய் அளவிற்குத் தான் இருந்தது. தங்கத்தின் விலையில் இன்னும் கடும் உயர்வு ஏற்படவாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஒரு புறம், கொரொனா வைரஸ் நோய்த்தொற்று உலகில் தொடர்ந்து பரவி வருகிறது. பல வர்த்தகத் துறைகளில் மந்த நிலை காணப்படும் சூழலில், தங்கத்தின் விலை மட்டும் இப்படி விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது எதனால்? இந்திய மேலாண்மை நிறுவனமான ஐ.ஐ.எம் (அகமதாபாத்) பேராசிரியர் மற்றும் இந்திய தங்கக் கொள்கை மையத்தின் தலைவருமான பேராசிரியர் அரவிந்த் சஹாய் அவர்களுடன் நாம் உரையாடினோம்.

தங்கத்தில் செய்யும் முதலீடு பாதுகாப்பானதா?

முதலீட்டாளர்களோ பொது மக்களோ லாபத்தைத் தான் எதிர்பார்த்து ஓடுகிறார்கள். பங்குச் சந்தை, நிலையான வைப்புத்தொகை, பல்வேறு வகையான பத்திரங்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த லாபத்தைப் பெறுகிறார்கள்.

இயல்பு நிலை நிலவும் பட்சத்தில், பங்குச் சந்தை, பத்திரங்கள் போன்றவை இந்த லாபத்தைத் தருகின்றன. ஆனால் உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை இருக்கும்போது, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை நோக்கிச் செல்கிறது.

தங்கத்தால் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அதன் மதிப்பு குறையாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால், முதலீட்டில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்தே வருகிறது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் அது இன்று, 50 ஆயிரம் ரூபாய் அளவை எட்டவுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இது 40 முதல் 42 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது.

இந்த நிச்சயமற்ற தன்மை கொரோனா வைரஸ் காரணமாக மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று கூறமுடியாது. முன்னதாக, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரும் இந்த நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து தங்கத்தின் விலை உயரக் காரணமாக இருந்தது. கொரோனா வைரஸ் அதன் விலையை மேலும் அதிகரித்துள்ளது.

கொரொனா வைரஸால் ஏற்பட்டுள்ள தாக்கம் எத்தகையது?

கொரோனா தொற்றுநோயால் மக்கள் வேலை இழந்ததால், பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. முன்னதாக, வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டது, ஆனால் இப்போது அதில் 6 சதவீத சரிவு கணிக்கப்படுகிறது.

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் செலவு செய்யப் பணம் இல்லை, கடைகள்-உணவகங்கள், விமான நிறுவனங்கள், ரயில்வே அனைத்தும் முடங்கியுள்ளன. வேலை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறார்கள். இந்தக் காரணங்களால், நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை.

இந்த நிச்சயமற்ற தன்மை மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது, இதன் காரணமாக அவர்கள் செலவு செய்யத் தயங்குகிறார்கள். அவர்கள் பாதுகாப்பை விரும்புகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த பாதுகாப்பை அவர்கள் தேடுகிறார்கள். இதன் காரணமாக, முதலீட்டுத் துறையில் நுகர்வு அதிகரித்துள்ளது.

பொது மக்கள் மட்டுமல்ல, உலகின் பெரிய மத்திய வங்கிகளும் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளன. மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஐரோப்பிய மத்திய வங்கி, சீன மக்கள் வங்கி, பெடரல் ரிசர்வ் வங்கி போன்ற வங்கிகள் இதில் அடங்கும்.

5,000 ஆண்டுகளுக்கு முன்பும், தங்கம் மிக மதிப்பு மிக்கதாகவே கருதப்பட்டது, ஏனெனில் தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாமல் அதிகரிக்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால் அதன் மதிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே வருகிறது.

ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் இந்திய தங்க கொள்கை மையம், வரவிருக்கும் 5-6 மாதங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடுகிறது. இந்த மையம் 2018 ஆம் ஆண்டிலேயே தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மூன்று வகையானவை. முதலாவதாக, ஆபரணத்தங்கம், இரண்டாவது முதலீட்டிற்கான தங்கம், மூன்றாவதாக, மத்திய வங்கிகள் தங்களின் தங்க இருப்புக்காக வாங்கும் தங்கம். நாட்டின் மத்திய வங்கியில் தங்கத்தின் இருப்பு எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு , அந்த நாட்டின் கடன் மதிப்பீடு(கிரெடிட் ரேட்டிங்) நன்றாக இருக்கும்.

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் என்னவென்றால், 2018-19 ஆம் ஆண்டில் வங்கிகள் வாங்கிய 600 டன் தங்கம் ஆகும். இதனால் தேவை அதிகரித்து தங்கத்தின் விலை உயர்ந்தது.

தற்போது இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் சில்லறைத் தேவை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது, ஆனால் முதலீட்டுக்கான தேவை நிறைய அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தங்க நுகர்வு ஆண்டுக்கு 700-800 டன் ஆகும், இதில் 1 டன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதில், 60 சதவீதம் நகைகளுக்காகவும், 30 சதவீதம் பார்-நாணயங்களில் முதலீடாகவும், மீதமுள்ள 10 %, தொழில் அல்லது கோயிலுக்கு காணிக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படப் போவதில்லை. நாம் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்கிறோம், இதன் காரணமாக அது வர்த்தக பற்றாக்குறையின் கீழ் மட்டுமே வருகிறது. பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் தங்க விலை உயர்வால் அதிக வீழ்ச்சி ஏற்படப் போவதில்லை. ஆனால் அரசாங்கம் சில கொள்கைகளை உருவாக்கினால், அதன் காரணமாக நாம் பொருளாதாரத்தை மேம்படுத்த தங்கத்தைப் பயன்படுத்தலாம்.

நம் நாட்டில் சுமார் 25,000 டன் தங்கம் பொது மக்களிடையே புழக்கத்தில் உள்ளது . இதில், 10-12 ஆயிரம் டன் தங்கம் செல்வந்தர்களிடம் உள்ளது.

இந்த தங்கம், வங்கி லாக்கர்களிலோ அல்லது வீட்டின் அலமாரிகளிலோ கிடக்கிறது. இந்த தங்கம் நாட்டின் பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படவில்லை.

லாக்கரில் அல்லது அலமாரியில் கிடக்கும் தங்கம் பயன்படுத்தப்படாத பணம் போன்றது. அரசாங்கம் சில கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த முடங்கிய தங்கத்தை நாட்டின் பொருளாதாரத்தில் இணைக்க முடியும்.

உதாரணமாக, உங்களிடம் ஒரு கிலோ தங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இதன் விலை சுமார் 48 லட்சம் ஆகும். அதை அடமானம் வைத்தால், நீங்கள் 80% வரை தொகையைப் பெறுவீர்கள். இந்தத் தொகை தொழில் துறையில் முதலீடு செய்யப்படலாம் அல்லது ஊழியர்களுக்கு சம்பளமாகவும் வழங்கப்படலாம்.

அதாவது, லாக்கரில் இருந்த பயன்படுத்தப்படாத தங்கம் பணமாக மாறியது, அது மக்களின் கைகளை அடைந்தது, இது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தது.

செயலற்ற தங்கத்தைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது, ஏனெனில் இது பொருளாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :