You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை-அந்தமான் ரூ.1,224 கோடி கண்ணாடி இழை கேபிள்: தொடக்கி வைத்த பிரதமர் மோதி
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
சென்னை - அந்தமான் 1,224 கோடி கண்ணாடி இழை கேபிள் - இந்து தமிழ் திசை
சென்னை - அந்தமான் இடையே ரூ.1,224 கோடியில் கடலுக்கு அடியில் பதிக்கப் பட்டுள்ள கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்க முடியும் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
சென்னையில் இருந்து அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு ரூ.1,224 கோடி யில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன்படி, கடலுக்கு அடியில் 2,312 கி.மீ. தொலைவுக்கு கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள் திட்டத்தின் மூலம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்க முடியும்.
பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு இணைய வசதி மிகவும் அவசியம். இதற்காக நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இணைய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அப்போதுதான் ஆன்லைன் கல்வி, டெலி மெடிசின், வங்கி சேவை, ஆன் லைன் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி பெறும்.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு மேம் படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலோர எல்லைப் பகுதிகளின் உள் கட்டமைப்பும் பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் அந்தமானின் வடக்கு, மத்திய பகுதிகளில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. 1,200 பயணிகளை கையாளும் வகையில் போர்ட்பிஃளேர் விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின்கீழ் கடலில் தரையிறங்கும் விமான சேவை அந்தமானில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பெரிய நிகோபர் தீவில் ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய துறைமுகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் அதிகரிக்கும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். என பிரதமர் பேசினார் என்று விவரிக்கிறது அச்செய்தி.
இ-பாஸ் பற்றி விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு - தினத்தந்தி
தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தியின் செய்தி.
தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை என்ற அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வ ரத்தினம் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக தொழில்கள் முடங்கி வாழ்வாதாரம் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இ-பாஸ் அவசியம் இல்லை என தெரிவித்த நிலையில் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இ-பாஸ் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் வயதான பெற்றோரை நேரில் சென்று பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி பயில இருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து நேரடியாக சென்று பார்க்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான தனி மனித உரிமையை இ-பாஸ் திட்டம் தடுத்து வருகிறது.
இதுபோன்ற செயல், மனித உரிமை மீறல் என்பதால் இ-பாஸ் திட்டத்தை ரத்து செய்து பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் 4 வாரத்தில் தனது விளக்கத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார் என விவரிக்கிறது அச்செய்தி.
`தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது` - தினமணி
தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர தடுப்புப் பணிகளால் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ33.31கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் அதன்பிறகு கொரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் வல்லரசு நாடுகளே கொரோனா பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ளத் திணறி வரும் சூழலில், தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். கொரோனாவுக்கு சிகிச்சை தரமான அளிக்க அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப் சுகாதார நிலையங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகன்ங்கள் மூலம் நேரடி பரிசோதனை , சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: