சீமான் மீது விஜயலட்சுமி குற்றச்சாட்டு: ''இது தான் எனது கடைசி வீடியோ''

பட மூலாதாரம், Screen Grab
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினகரன்: ''இது தான் எனது கடைசி வீடியோ'': சீமான் மீது குற்றச்சாட்டு.
ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி நேற்று மாலை தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மயங்கிய நிலையிலிருந்த அவரை மீட்டு தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 'இதுதான் எனது கடைசி வீடியோ' என பேசி காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை நடிகை விஜயலட்சுமி முன்வைத்துள்ளார். சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடிகை விஜயலட்சுமி பல காணொளிகளை தானே பேசி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் விஜயலட்சுமி பேசியிருப்பதாவது: ''இது என்னுடைய கடைசி வீடியோ.4 மாதங்களாக சீமான் மற்றும் அவரின் கட்சி உறுப்பினர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இன்னும் சில நிமிடங்களில் எனக்கு பிபி குறைந்துவிடும். நான் கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை சீமான் மிகவும் அவமதிக்கிறார். நான் அவமானப்பட்டால் என்ன பண்ண வேண்டும் என்பது என்னோட முடிவு. இந்த வீடியோவில் நான் தெளிவாக சொல்லிருக்கிறேன். என் குடும்பத்தை நான் உங்களிடம் விட்டுவிட்டுப் போகிறேன். தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடைய இறப்பு பெரிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று மாலை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் மயக்க நிலையில் இருந்த விஜயலட்சுமியை மீட்டு, அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் என தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.


இந்து தமிழ் திசை:'கோயில் கட்ட 300கோடி ரூபாய் வரை தேவை'

பட மூலாதாரம், Getty Images
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நன்கொடை அளிக்கலாம். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் நன்கொடை அளித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ராமஜென்பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் விஸ்வபிரசன்ன தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் விஸ்வபிரசன்ன நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்ட நாடு முழுவதும் மக்களிடம் நபர் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் நன்கொடை கேட்கலாம். குடும்பத்துக்கு ரூ.100 வீதம் கேட்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கருத்து கூறியுள்ளேன். இது என்னுடைய யோசனை மட்டும்தான். மக்களுக்கான வரி அல்ல. ராமர் கோயில் கட்டும் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் பக்தர்கள், மக்களுக்கான ஒரு செயல்திட்டம்தான் இது.
என்னைப் பொறுத்தவரை, அடுத்தவாரம் நடக்கும் ராமர் கோயில் பூமி பூஜை, கட்டுமானத்துக்கான செலவு ரூ.300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி நடக்கும் மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1000 கோடி தேவைப்படும். நாடு முழுவதும் ராமர் கோயிலுக்கான நிதி திரட்டும் ஒருமாத நிகழ்ச்சி வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் தொடங்கும் என்று நினைக்கிறேன்'' என்று விஸ்வபிரசன்ன கூறினார் என்று இந்து தமிழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 1,000 காட்டுயானைகள் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மட்டும் கடந்த பத்தாண்டுகளில், 1000க்கும் அதிகமான காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உடற்கூராய்வு அறிக்கைகளை வனத்துறை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், காட்டு யானைகள் தாக்கி, மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது. ஆனால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட சில வனப்பகுதிகளில் யானைகள் தொடர்ந்து உயிரிழக்கின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
கடந்த, 2017ம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில், நாடு முழுவதும், 27 ஆயிரத்து 312 யானைகள் இருந்தன. அவற்றில், 10 சதவீத யானைகள், அதாவது, 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது.
2010 முதல் 2019 வரையிலான பத்தாண்டுகளில் தமிழகத்தில் 1013 யானைகள் இறந்துள்ளன. இவற்றில் 427 ஆண் யானைகள்; 575 பெண் யானைகள்; அழுகிய நிலையில் உடல் கண்டறியப்பட்டதால் பாலினம் கண்டுபிடிக்க முடியாத யானைகளின் எண்ணிக்கை 10. இந்த தரவுகள் யானை ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் இருந்து திரட்டிய தொகுப்பு என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












