இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக் எல்லையில் 15 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images
லடாக்கை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் சீன படைகளை விலகிக் கொள்வது தொடர்பான ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சுமார் 15 மணி நேரம் நடந்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சூஷுல் எல்லைச் சாவடியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி அளவில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இன்று, புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் முடிவடைந்துள்ளது.
அதாவது இந்த கூட்டம் 14.5 மணிநேரம் நடந்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது, ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலுக்குப் பின் இரண்டாம் கட்டமாகப் படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை ஆகும். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
ஜூலை 5ஆம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து இரு நாடுகளும் தங்களின் படைகளை விரைவாக விலக்கிக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
முதல் கட்டமாக படைகள் விலக்கப்பட்ட சமயத்தில் பாங்கோங் த்சோ ஏரி அருகே அமைந்துள்ள ஃபிங்கர் - 4, ஃபிங்கர்- 5 ஆகிய பகுதிகளிலிருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பேட்ரோலிங் பாய்ண்ட்- 14 ஆகிய பகுதிகளில் சீனப் படைகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கின என்று இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுடனான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது போல இந்தியப் படைகளும் அந்த பகுதிகளில் இருந்து விலகிக் கொண்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்தும் இந்தியா மற்றும் சீனாவால் தற்காலிகமாக ரோந்து செய்யப்படாத பகுதிகளாக கருதப்படும்.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு ராணுவத்தினரும் தற்போதைக்கு ரோந்துப் பணியில் ஈடுபட மாட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












