கொரோனா வைரஸ் காலத்தில் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கினால், விரைவில் உங்களுக்குத் தேவைப்படும் பொருளை விற்க வேண்டிய நிலை வரும்'' என அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளரும் பெரும் பணக்காரருமான வாரன் பஃபெட் முன்பு கூறியிருந்தார். தற்போது நிலவும் கொரோனா காலம், அவரது வார்த்தைகளை நேரடி எடுத்துக்காட்டுகளுடன் கூறி மக்களுக்கு உணர்த்திவிட்டது.
பணமும், வருமானமும் நிலையானது அல்ல என்பதை இந்த கொரோனா மக்களுக்குக் காட்டிவிட்டது. முன்பு ஆடம்பரமாகச் செலவு செய்த மத்திய வர்க்கத்தினர் பலர், தற்போது நகையை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைக்கு கொரோனா தங்களை கொண்டு வந்துவிட்டுள்ளது என கூறுகின்றனர்.
இனி வரும் காலம் கடுமையானதாக இருக்கும் என்பதை அறிந்துக்கொண்ட பலரும், இருக்கும் பணத்தை சேமித்து வருமானத்தை எப்படி பெருக்குவது என யோசித்து வருகின்றனர்.
சென்னையில் ஐ.டி பணியில் இருக்கும் குமரனுக்கு கிட்டதட்ட மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம். வருமானத்தில் குறிப்பிட்ட அளவிலான பணத்தை உணகவம், ஷாப்பிங், டேக்சி போன்றவற்றிற்குச் செலவு செய்துவந்தார். ஆனால், லாக்டவுன் வந்த பிறகு இந்த செலவுகள் எதுவும் இல்லாததால் மாதம் கிட்டதட்ட 20,000 ரூபாய் சேமிக்க முடிந்தது என்கிறார்.


குமரனின் வேலைக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால், உபரியாக இருக்கும் வருமானத்தை எங்குச் சேமிக்கலாம் தெரியாமல் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.
''பங்குச்சந்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நண்பர்கள் சொன்னதைக் கேட்டு, மோசமான பலன் தரும் பங்குகளில் முதலீடு செய்தேன். இப்போது பாதி பணம் போய்விட்டது'' என்கிறார்.
மறுபுறம் இதே சென்னையில் தனியார் கார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் ராஜ கோபாலுக்குக் கடந்த 3 மாதங்களாகப் பாதி சம்பளம்தான் கிடைத்து வருகிறது. சராசரி வாழ்க்கையை வாழவே கடன் வாங்க வேண்டிய நிலை இவருக்கு.

பட மூலாதாரம், Getty Images
''சம்பளம் வந்தவுடன் செலவு செய்து விடுவேன். சேமிப்பு பற்றி அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், கிடைத்துவந்த சம்பளம் குறையும்போதுதான் சேமிப்பு பற்றி யோசிக்கிறேன்'' என்கிறார் ராஜகோபால்
இருவருக்கும் இந்த கொரோனா லாக்டவுன் காலம் வெவ்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஆனால், இனி வரும் காலங்களில் இதுபோன்றதொரு பொருளாதார நிலையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும், கொரோனாவுக்கு பின்னர் நல்ல வருமானம் தரும் முதலீடு எது என்பது இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் உள்ளது.
அவசரக் கால பணம்
''அவசரக் கால பணம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு கொரோனா உணர்த்தியுள்ளது. தடையில்லாத வருமானம் வந்ததால், அவசரக் கால பணம் குறித்து மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இனி வரும் காலங்களில் குறைந்தது ஒரு வருடத்திற்கு குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பணத்தை அவசரக் கால பணமாக மக்கள் வைத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் ப்ரகலா முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

''பெரிய அளவிலான கடன் வாங்க மக்கள் இப்போது தயங்குகின்றனர். ஏன் செலவு செய்வதைக் கூட பார்த்து பார்த்துத்தான் செய்கின்றனர். இந்த நிலை மாற குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம்'' என்கிறார் அவர்.
மேலும் அவர்,'' இந்த உலகத் தொற்றால் தங்கள் உயிருக்கும், வேலைக்கும் ஆபத்து என உணர்ந்த மக்கள், சேமிப்புகளை அதிகரிக்கத் துவங்கியுள்ளனர்'' என்கிறார்.
2020-ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்கள் 39,500 கோடி ரூபாயைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 8,735 கோடியை மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தன.
இந்த ஆண்டு இந்த விகிதம் 4 மடங்கு அதிகரிக்க, பரஸ்பர நிதி நிறுவனங்களில் புதிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடுகள் முக்கிய காரணமாக உள்ளன என பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் செபி அமைப்பு கூறியுள்ளது.
பங்குச்சந்தை ஆபத்துகள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பொது முடக்கத்தால் வீட்டிலே இருந்ததால் புதிய வகை உணவுகளை வீட்டிலே சமைத்துப் பார்ப்பது, புதிய கலைகளைக் கற்பது போல லட்சக்கணக்கானோர் பங்குச்சந்தையில் தங்களது பணத்தை முதலீடு செய்யத் துவங்கினர்.
2020-ம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 லட்சம் பேர் புதிதாகப் பங்குச்சந்தை முதலீட்டைத் துவங்கியுள்ளனர் என சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (சிடிஎஸ்எல்) நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஜனவரி-பிப்ரவரி மாதத்தை விட 33% அதிகமாகும்.
''பங்குச்சந்தை என்பது பரஸ்பர நிதி அல்லது வங்கி வைப்பு நிதி போன்றது அல்ல. பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டும் என்றால் ஒருவர் முழு நேரமும் இந்த துறையில் செலவிட்டு வேலை செய்ய வேண்டும். தற்போது டைம் பாஸுக்காக முதலீட்டைத் துவங்கிவிட்டு, பின்னர் உங்களது வழக்கமான அலுவலக பணி வந்தவுடன் விட்டுச் சென்றால் இழப்புதான் ஏற்படும்'' என்கிறார் சொக்கலிங்கம் பழனியப்பன்.
பங்குச்சந்தையில் அதிக ஆர்வம் இருந்தால், ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாயை மட்டும் முதலீடு செய்து பார்க்கலாம். ஆனால், தற்போது பங்குகளின் விலை குறைவாக இருப்பதால் கடன் வாங்கியோ அல்லது பி.எஃப் பணத்தை எடுத்தோ முதலீடு செய்வது தவறு எனக் கூறுகிறார்.
வணிக நாளிதழ்களையும் வருடாந்திர பங்குச்சந்தை அறிக்கைகளையும் தொடர்ந்து படிக்க முடியும், பங்குச்சந்தைக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்க முடியும் என்றால் இத்துறையில் சாதிக்கலாம் என்கிறார் பழனியப்பன்.
பணத்தைப் பிரித்து முதலீடு

பட மூலாதாரம், Getty Images
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வைப்புத் தொகைக்கு வங்கிகள் வழங்கும் வட்டியும் குறைந்துவருகிறது. இந்த நிலையில் தற்போதைய காலத்தில் சிறந்த முதலீடு எது?
''எப்போதும் ஒரே முதலீட்டை நம்பி இருக்காமல், பணத்தை மூன்றாகப் பிரித்து முதலீடு செய்தால் கொரோனா காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் பாதிப்பு இல்லை'' என்கிறார் பழனியப்பன்.
மேலும் அவர்,'' ஒருவர் சேமிக்கும் பணத்தில் 10 சதவீதத்தைத் தங்கத்திலும், 40 சதவீதத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட்டாகவும் 50 சதவீதத்தை மியூச்சுவல் பண்டிலும் போட்டுச் சேமிக்கலாம். அடுத்த 10-20 வருடங்களில் மியூச்சுவல் பண்டில் போட்ட பணம் நல்ல லாபம் தரும், அவசர தேவை என்றால் வங்கியில் இருக்கும் பிக்சட் டெபாசிட்டை எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார்.
''தற்போது சந்தை சரிந்து காணப்படுவதால், பரஸ்பர நிதியில் இப்போது முதல் மாதா மாதம் பணம் போட்டு வந்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்'' எனக் கூறுகிறார்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பதோ, பங்குச் சந்தை என்பதோ பெரிய இடர்ப்பாடுகளை உடைய முதலீட்டு வாய்ப்புதான். நல்ல பலனையும் தரலாம். முதலுக்கே மொத்தமும் மோசமாகலாம் என்ற பொதுவான எச்சரிக்கையை மனதில் வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இது முதலீட்டுத் துறையின் பாலபாடம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












