சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு

பட மூலாதாரம், Getty Images
சாத்தான் குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசின் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தற்போது நீதித் துறை நடுவர் விசாரணை செய்து வருகிறார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் தானாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐக்கு மாற்றவிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐக்கு மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதென்பது தமிழக அரசின் கொள்கை இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லையென நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுவரும் கோவில்பட்டியின் நடுவருக்கு சாத்தான் குளம் காவல்துறையினர் சரியாக ஒத்துழைக்கவில்லையென்றும் தடயவியல் துறையின் உதவி இயக்குனர் சாத்தான் குளம் சென்று தடயங்களைப் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அந்தக் காவல் நிலையத்தை வருவாய்த் துறையின் கீழ், அதாவது மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழத்தாக கூறப்படும் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரிக்க கோவில்பட்டி மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 16 மணிநேரம் விசாரணை நடத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












