சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

சாத்தான்குளம் தந்தை-மகன் சிறைக் காவலில் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, சாத்தான்குளம் வழக்கில் உரிய விசாரணை நடைபெற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். ''சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அனுமதி பெறப்படும்.

காவல்துறையினருக்கு பொது மக்களுக்கு தொந்தரவு தரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இது லாக்-அப் மரணமல்ல: அமைச்சர் கடம்பூர் ராஜு

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்தது லாக் அப் மரணம் இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தவிவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினரைக் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பு லாக்-அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு

பட மூலாதாரம், Twitter

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே உயிரிழந்தனர். லாக் அப்பில் இருக்கும் போது காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் மட்டும் அது லாக்-அப் மரணம். இவர்களின் இறப்பு லாக் அப் மரணம் இல்லை`` என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி இருவரின் உடற் கூறாய்வு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். சாத்தான்குளம் சம்பவம் லாக் அப் மரணம் என கனிமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், திமுக ஆட்சிக்காலத்திலும் லாக் அப் மரணம் நடைபெற்றுள்ளது என்றார்.

''தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் 1996ல் திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு பேர் உயிரிழந்த லாக் அப் மரணம் நடைபெற்று உள்ளது. சாத்தான்குளம் விவகாரத்தைத் தேர்தல் வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த நினைக்கிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும்,'' என்றார் கடம்பூர் ராஜூ.

அமைச்சரின் கூற்று தவறு: ஹென்றி டிஃபேன்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டடு இறந்ததாக சொல்லப்படும் மரணம் லாக் அப் மரணம் அல்ல என கடம்பூர் ராஜு தெரிவித்த கருத்து சட்டத்திற்கு மாறானது என்கிறார் வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன்.

''ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இறந்தது மரணங்களை லாக் அப் மரணம் இல்லை என அமைச்சர் சொல்வது தவறானது. லாக்-அப் மரணங்கள் என்றால் காவல்துறையின் காவலில் இருக்கும் போது ஏற்படும் மரணங்கள் ஆகும். அதாவது காவல்துறையின் கட்டுப்பாட்டில் அவர்கள் இருக்கும் நேரத்தில் அவர்கள் இறந்தால் அது லாக்-அப் மரணங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளப்படும். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள். இதனால் இவர்களின் மரணம் லாக்-அப் மரணம்தான்,''என்கிறார் ஹென்றி திபேன்.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவாகியுள்ள லாக் அப் மரணங்களில் பெரும்பாலானவை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில்தான் நடந்துள்ளன என ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்கள் வெளியாவதை, அமைச்சர் கடம்பூர் ராஜு புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: