You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: “பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயரமானது” - ராகுல் காந்தி
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம், பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயர்மிகுந்தது" என தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்ஸிற்கு நீதி கிடைக்க வேண்டும் என சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்திருந்திருந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், "தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என ஷிகர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"காவலர்களே கொலை செய்தால் யாரை அழைப்பது" என இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் கடை வைத்திருந்ததாக சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் போலீஸ் காவலில் அடித்து துன்புறுத்தப்பட்டு பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கே அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் அவர்களது குடும்பத்தினரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக இறந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூ அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ''எந்தவித தாமதமும் இன்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே'' என பதிவிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் டி.இமான், ''அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. முழுக்க, முழுக்க மனிதத்தன்மையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்'' என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
''சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என நடிகர் ஜெயம்ரவி பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் சாந்தணு அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ''ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நடந்தது அநீதி என்றால் தூத்துக்குடியில் இன்றைக்கு நம்ம ஆளு ஒருத்தருக்கும் இதே நடந்திருக்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ''சாத்தான்குளத்தில் நடந்தது கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள்'' என பதிவிட்டுள்ளார்.
''நீதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்பும் நேர்மையான எந்த காவல்துறையினருக்கும் உரிய செயல் இது அல்ல. காவலர் சீருடையில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் வக்கிர எண்ணம் கொண்ட சிலருடைய வேலை தான் இது'' என நடிகர் கெளதம் கார்த்திக் குறிப்பிட்டிருக்கிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித், ''பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?'' என எழுதியுள்ளார்.
நடிகை ஹன்சிகா , ' ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான மிருகத்தனம் மிக்க செயலை கேட்டு அதிர்ந்து போனேன். குற்றவாளிகள் தப்பிக்க கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கிணங்க நீதி கிடைக்க வேண்டும்' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: