You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மின்னல்: பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு
பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
அம்மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
ஜூன் 22ஆம் தேதியன்று பிகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும், அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் நீரோட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது எனவும் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.
"பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மின்னலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற துயர்மிகு செய்தி கேட்டேன். மாநில அரசுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பேரழிவில் தங்களின் அன்புக்குரியோரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை நிலவும் சூழலில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிகாரின் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் ப்ரத்யம் அம்ரித், "அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். பல மாவட்டங்களில் மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவே சேதங்கள் அதிகமாக இருக்கலாம்," என பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.
"அடுத்த சில தினங்களுக்கு வானிலை மோசமாகதான் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பலத்த மழை பொழியலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிகாரில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளன, நதிகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி 24 உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் பிபிசி ஹிந்தி சேவைக்காக பணிபுரியும் சமீராத்மஜ் மிஷ்ரா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக டியோரா என்னும் நகரில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
- யாருக்காவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அழைக்க வேண்டும். மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை தொடுவதில் எந்த ஆபத்துமில்லை. மின்னலில் எந்த மின்சார சக்தியும் இல்லாததால், அதன் மூலம் யாருக்கும் மின்சாரம் பரவாது.
- மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் நாடித் துடிப்பினை உடனடியாக சோதிக்க வேண்டும். எவ்வாறு முதலுதவி தர வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் பாதிப்படைந்தவருக்கு நீங்கள் முதலுதவி தரலாம்.
- பொதுவாக பாதிப்படைந்தவர்களின் தலை பகுதியும், கால் பாத பகுதியும் மின்னல் தாக்குதலில் எரிந்து விட வாய்ப்புண்டு. மின்னோட்டம் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் இவை தான்
- மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புகள் உடைதல், காது கேளாமை மற்றும் பார்வை இழப்பு ஆகியவை ஏற்படலாம். நீங்கள் இதனை கவனிக்க வேண்டும்
- கடைசி மின்னல் வெளிச்சத்துக்கு பிறகு 30 நிமிடங்கள் காத்திருப்பது சிறந்தது. ஏனெனில், மின்னல் தாக்குதல் தொடர்பான பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்து முடிந்தவுடனே நிகழ்ந்துள்ளது.
- மின்னல் தாக்குதல் நிகழும் போது, கீழே குனிந்து உங்கள் முழங்கால்களுக்கு இடையே உங்கள் தலையை நுழைத்தவாறு அமரவும். மரங்கள், வேலிகள் மற்றும் கம்பங்கள் இல்லாத கீழ் பகுதியினை தேர்ந்தெடுப்பது நல்லது.
- உடலில் நேரடியாக மின்னோட்டம் நுழையும் உலோகங்கள், மற்றும் குடை அல்லது கைபேசி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
பிற செய்திகள்:
- சஹரான் இந்தியா செல்ல ரிஷாட் பதியூதீனின் சகோதரனே உதவினார் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு
- பிரேசிலில் ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட ‘வாட்சாப் பே’ - இந்தியாவில் கால்பதிப்பது சாத்தியமா?
- தங்கள் நாட்டில் கொரோனா இல்லையென அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்?
- 'நான் சொன்னதை திமுக கேட்காததால் எம்.எல்.ஏ-வை இழந்துள்ளோம்' - அன்பழகன் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: