அன்பழகன் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி - 'நான் சொன்னதை திமுக கேட்காததால் எம்.எல்.ஏ-வை இழந்துள்ளோம்'

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

"தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கடுமையான சூழலிலும், ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்காமல், தவறான தகவல்களை நாள்தோறும் தெரிவித்து அரசியல் செய்து வருகிறார். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி செய்வதில்லை," என முதல்வர் பேசினார்.

"தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி அரசு அதிகாரிகளின் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். ஆனால் அதைக் கேட்காமல், திமுக நிர்வாகிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிவாரணப் பணிகளைச் செய்தனர். அதில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சட்டமன்ற உறுப்பினர் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றாததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்துள்ளோம்," என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கோவிட் -19 தொற்றால் மரணமடைந்தது குறித்து பழனிசாமி விமர்சித்தார்.

மேலும் பேசியவர், "தமிழகத்தில் 90 நாட்கள் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் நோய்தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டு உயிர் சேதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது," எனக் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: