'மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு: இந்திய அரசின் உள்நோக்கம் என்ன?'

நீட் தேர்வு

பட மூலாதாரம், Hindustan Times

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களை அணுகும்படியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து.

கே. அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரும் வழக்குகளை விசாரிக்க முடியாது என்றும் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லையென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப. நீட் தேர்வு வந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல இடங்கள் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தன. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஒரு enabling சட்டத்தின் மூலம், அதாவது விரும்பினால் அளிக்கலாம் என்ற சட்ட வசதியின் மூலம் அளிக்கப்படுகிறது. ஆகவே, இதனை இப்போது நாங்கள் விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.

உச்சநீதிமன்றம் ஏன் இப்படி ஒரு உத்தரவை வழங்குகிறது? இந்தத் தீர்ப்பின் வழியாக யாருக்கு பலன், யாருக்கு பாதிப்பு என்பதைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் நிலை பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பான ஒரு நிலை. அகில இந்திய ஒதுக்கீட்டில், வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று சொல்வதன் மூலம் ஏற்கனவே உள்ள பாதிப்பு அப்படியே தொடரலாம் என்ற கருத்துக்கு உச்ச நீதிமன்றம் வலுச் சேர்த்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Hindustan Times

உச்ச நீதிமன்றம் பொதுவாக இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்புகளையே வழங்கிவருகிறது. ஆகவேதான், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கோருகிறோம். அப்படி தற்போது இல்லை. அதனால்தான், இப்போது உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடையாது.

1950களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செண்பகம் துரைசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தினால், தான் மருத்துவம் படிக்க முடியாமல் போயிற்று. அகவே அதனை நீக்க வேண்டுமென அவர் கோரினார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.

அப்போதுதான், செண்பகம் துரைசாமி, மருத்துவப் படிப்பிற்கே விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெரியார் இயக்கங்கள் உள்பட பல இயக்கங்கள் நடத்திய போராட்டத்தால், அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. இதன் மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு வி.பி. சிங் ஆட்சியில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இது தொடர்பான வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இருந்தாலும் அதே தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செல்லாது எனக் கூறியது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் விவகாரம் அந்த வழக்கிற்கே தொடர்பில்லாததது. இருந்தபோதும், இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

கே. மருத்துவக் கல்லூரி அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை இடங்களில் இடஒதுக்கீடு நீண்ட காலமாகவே வழங்கப்படுவதில்லை. ஆனால், இதற்கு பா.ஜ.க. அரசு மீதே இது தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஏன்?

ப. மத்திய அரசைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு எப்போதுமே இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வேலை வாய்ப்பில் அமல்படுத்த 10 வருடம் ஆனது. கல்வியில் அமல்படுத்த 17 வருடங்கள் ஆனது. அர்ஜுன் சிங் மத்திய மனித வளத்துறை அமைச்சராக இருந்தபோது 2006ல் அமல்படுத்தப்பட்டது.

அதற்குப் பிறகு வழக்குத் தொடரப்பட்டு, மேலும் மூன்று ஆண்டுகள் கழித்தே முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஆக, 2007லிருந்தே சட்ட ரீதியாக இட ஒதுக்கீடு அமலில்தான் இருக்கிறது. நீட் தேர்வு அமலான பிறகுதான் பிரச்சனை வருகிறது.

நீட் தேர்வை கொண்டுவந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லையே என்றார்கள்

பட மூலாதாரம், Hindustan Times

நீட் தேர்வை ஆதரித்த பா.ஜ.கவினர் ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள். அதாவது, நீட் தேர்வை கொண்டுவந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லையே என்றார்கள். தரத்தை உயர்த்தத்தானே இந்தத் தேர்வு, இதிலென்ன தப்பு என்றார்கள்.

ஆனால், கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் ஏன் நிரப்பவில்லை? இந்த இடங்கள் அப்படியே எல்லோருக்குமான பிரிவுக்குச் செல்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ்நாடுதான். இங்குதான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இங்குள்ள 25க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், 15 சதவீத எம்பிபிஎஸ் இடங்கள் மத்தியத் தொகுப்புக்குச் செல்கின்றன. முதுகலை இடங்களில் 50 சதவீத இடங்கள் மத்தியத் தொகுப்புக்குச் செல்கின்றன. இதில் இட ஒதுக்கீடு இல்லையென்றால் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுகிறது.

அகில இந்திய தொகுப்பில் ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாதற்கு மத்திய அரசு ஒரு காரணத்தைச் சொல்கிறது. அதாவது மத்திய அரசிடம் ஒரு பிறப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியல் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது. எந்தப் பட்டியலின்படி இட ஒதுக்கீட்டை அமல் செய்வது என்ற குழப்பம் இருப்பதால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்கிறது மத்திய அரசு.

ஆனால், அதே நேரத்தில் மத்திய அரசு நடத்தும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், மாநிலங்களில் இருந்து மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததற்குக் காரணம், எந்தப் பட்டியலைப் பின்பற்றுவது என்ற நடைமுறைச் சிக்கல்தான் என்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வைத்து 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது அல்லவா, குறைந்தபட்சம் அதே பட்டியலை வைத்து மத்தியப் பட்டியலில் ஒதுக்கப்படும் இடங்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமே.. மற்றொரு வழியும் இருக்கிறது. எந்த மாநிலத்தில் இடங்கள் நிரப்பப்படுகிறதோ, அந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வைத்து இடங்களை நிரப்பலாம். மருத்துவக் கவுன்சிலின் விதிகள் அதைத்தான் சொல்கின்றன. ஆனால், அதையும் செய்வதில்லை.

இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் ஒதுக்கும் இடங்களை பொதுப் பிரிவுக்கு நகர்த்திவிட்டு, அந்த இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டு என்பது, எந்தப் பிரிவிலும் இட ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் யார் இட ஒதுக்கீடு பெற்றவர்கள் என்பதே குழப்பமாக இருக்கும்போது, எப்படி இட ஒதுக்கீடு பெறாதவர்களைத் தீர்மானித்து அவர்களுக்கு பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை வழங்குகிறீர்கள்?

அதாவது, இட ஒதுக்கீடு பெறும் பிரிவினரை அடையாளம் கண்டால்தானே, இட ஒதுக்கீடு பெறாத பிரிவினரை அடையாளம் காண முடியும்? இட ஒதுக்கீடு பெறும் பிரிவினரை அடையாளம் காண முடியாத நிலையில், எப்படி பொதுப் பிரிவினரை அடையாளம் காண்கிறார்கள்? அப்படியானால், அரசின் உள்நோக்கம் என்ன, பிற்படுத்தப்பட்டோருக்கு இடங்கள் கிடைக்கக்கூடாது என்பதுதானே..?

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது தாங்கள்தான் என்கிறது பா.ஜ.க. அந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம்தான் பல பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்புகள், இட ஒதுக்கீடு இல்லாதது குறித்து புகார் அளித்திருக்கின்றன. அந்தப் புகார்களின் அடிப்படையில், மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இது தொடர்பாக வாதங்கள் வரும்போதெல்லாம், தங்களால் ஏன் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முடியவில்லையென, இட ஒதுக்கீடு கூடாது என்பவர்களின் வாதத்தை முன்வைக்கிறது அரசு. உண்மையில், பிற்படுத்தப்பட்டோர் மீது அக்கறையிருந்தால், இட ஒதுக்கீட்டை அல்லவா நிறைவேற்ற வேண்டும்?அப்படியானால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருப்பது, அவர்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலையா எனக் கேட்க விரும்புகிறேன்.

கே. இப்போது உயர் நீதிமன்றங்களை அணுகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றத்திலும் ஒவ்வொருவிதமாகத் தீர்ப்பு வந்தால் என்ன செய்வது?

ப. நிச்சயம் குழப்பம் ஏற்படும். அப்போது உச்ச நீதிமன்றம் சென்றுதான் தீர்க்க வேண்டியிருக்கும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

கே. ஆந்திர மாநிலத்தில் மருத்துவக் கல்வி இடங்களை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில்லை. தமிழகம் அதைப் பின்பற்ற முடியுமா?

ப. ஆந்திராவில் மட்டும்தான் அப்படி இருக்கிறது. அப்படி முடிவெடுத்தால், மருத்துவக் கல்விக்கென மத்திய அரசு அளிக்கும் தொகைகளைப் பெற முடியாது. அகில இந்திய இடங்களுக்கு ஆந்திர மாநில மாணவர்கள் போட்டியிட முடியாது. என்னைப் பொறுத்தவரை ஆந்திர மாநில அரசு எடுத்த முடிவுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக மருத்துவ இடங்களைப் பொதுப் பட்டியலுக்கு அளிக்கிறோம்.

மருத்துவமும் கல்வியும் முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு என்பதே தேவையில்லை.

கே. மருத்துவக் கல்வி ஒரு உயரிய படிப்பு. அதில் தகுதியின் அடிப்படையில்தான் இடங்களைப் பகிர வேண்டுமென்ற வாதமும் இருக்கிறது..

ப. இட ஒதுக்கீடும் ஒரு தகுதிதான். அது தகுதியில்லையென யார் சொன்னது? அப்படிச் சொன்னவர்கள் எல்லாம், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு, இரண்டு ஆண்டுகளாகத் தகுதியைப் பற்றிப் பேசுவதில்லையே.. வருமானத்திற்கும் தகுதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

மதிப்பெண்கள்தான் தகுதி என்று சொன்னால், சமீபத்தில் நடந்த பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த ஒரு விவகாரத்தைப் பார்க்கலாம். அதில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான கட் - ஆஃப், பின்தங்கியவர்களுக்கான கட் - ஆஃபைவிட மிகவும் குறைவாக இருந்தது. அப்போது எங்கே போனது தகுதி பற்றிய வாதம்?

பத்து வருடங்களுக்கு முன்பாகப் பார்த்தால், பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான கட் - ஆஃப் மார்க்குகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். ஆனால், இப்போது அந்த வித்தியாசம் மிகவும் குறைந்துவிட்டது. பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தோரில் பலர் பொதுப் பிரிவில் இடம் பெறுகிறார்கள். இந்த சாதனை தமிழ்நாட்டில்தான் அதிகம் நடக்கிறது. காரணம், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதுதான்.

குறிப்பாக சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில், தாழ்த்தப்பட்ட பிரிவின் கட் - ஆஃப் பொதுப் பிரிவுக்கு இணையாக இருக்கிறது. இதற்குக் காரணம் இடஒதுக்கீடுதான். ஆகவே, மதிப்பெண்ணைத் தகுதியாக வைக்கும் வாதம் ஏற்புடையதல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: