மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு: தி.மு.க., பா.ம.க. வழக்கு

பட மூலாதாரம், FACEBOOK
தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களில் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் இது தொடர்பாக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்துவருவதாகவும் அதனை செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும் கோரி தி.மு.க.வின் சார்பில் அதன் வழக்கறிஞர் வில்சன் ரிட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படியே ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 சதவீத இடங்களையும் முதுகலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்ப வேண்டுமென மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அகில இந்திய அளவில் இடங்களை நிரப்பும்போது, மாநில இட ஒதுக்கீடு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என தி.மு.கவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் அளிக்கும் இடஒதுக்கீடு ஒருபுறமிருக்க, மத்திய அரசின் '2006ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம்' கூறுவதுபடி 27 சதவீத இடஒதுக்கீடு கூட அளிக்கப்படவில்லையென்றும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் முதுகலை இடங்களில் 8137 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டன. அதில் மத்திய அரசு வழங்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினால்கூட, 2197 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும். ஆனால், மாநில அரசுகளும் தனியாரும் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 224 இடங்களே பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்தன. ஆகவே 1973 பிற்படுத்தப்பட்டோர் தங்கள் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 425 இடங்கள், கிடைக்காமல் போனது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோல இளநிலை மருத்துவப் படிப்புகளில் 395 இடங்கள் கிடைக்காமல் போனது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times
ஆகவே, அகில இந்தியப் பிரிவில் 2019ஆம் ஆண்டுக்கான மருத்துவ முதுகலை இடங்களை நிரப்புவது தொடர்பான முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கின் முடிவு தெரியும்வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வுகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு கோரப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கிய இடங்களை நிரப்புவது தொடர்பாக மே 9 ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மாநில அரசு ஒதுக்கும் இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென்றும் தி.மு.கவின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டு வழங்க ஆணையிட வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் கடந்த 4 ஆண்டுகளாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாதது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவருக்கும் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிற செய்திகள்:
- கூகுள் வோடஃபோன் - ஐடியாவில் முதலீடு செய்கிறதா? உண்மை என்ன?
- பத்தே நிமிடத்தில் இலவசமாக இணைய வழியில் பான் எண் பெறலாம் - புதிய திட்டம் அறிமுகம்
- டிக்டாக்கால் 2 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த வாய் பேச முடியாத முதியவர்
- 'இந்தியா - சீனா எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தேவையில்லை' - டிரம்புக்கு மறுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












