கொரோனா வைரஸ்: மதங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

coronavirus impact on religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது, ஒருபுறம் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டன. மறுபுறம், தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக ராமாயணம் உருவெடுத்தது.

ஆகவே, மக்கள் தங்களுக்கு விருப்பமான மத வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல முடியாததால் ஏமாற்றமடைந்தார்களா அல்லது அவர்கள் இன்னும் விசுவாசத்தையும் பக்தியையும் நோக்கி சென்றார்களா?

ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடித்த தீபிகா சிக்காலியா டோபிவாலா, கொரோனாவுக்குப் பிந்தைய உலகில் ஆன்மீகம் அதிக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்கும் என்று நம்புகிறார்.

பெருந்தொற்றுநோயின் விளைவாக, இந்திய மக்களில் பெரும் பகுதியினர் "இயற்கை மற்றும் ஆன்மீகத்தை" நோக்கி திரும்பக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

“இனி பூங்காவில் நிறைய பேர் தியானம் செய்வதை காண முடியும்” என்கிறார் தீபிகா.

அஜ்மீரில் உள்ள 13ஆம் நூற்றாண்டினை சேர்ந்த புகழ்பெற்ற சூஃபி துறவி கவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவின் பராமரிப்பாளரான சையத் கவுஹர், இந்த வைரஸை "அல்லாஹ்வின் கோபம்" என்று கூறுகிறார். கொரோனா வைரஸ் மசூதிகளுக்குள் நுழையாமல் தேவதூதர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்புகிற மக்களும் மதத் தலைவர்களும் அவருடைய சமூகத்தில் உள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அதேபோன்று, சிலர் கொரோனா வைரஸை வெல்ல பசுவின் சிறுநீரை பரிந்துரைத்துள்ளனர். கொரோனாவின் சாபத்தைத் தடுக்க மத அடையாளங்கள் மற்றும் சடங்குகளைப் பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரபூர்வமாக அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது.

“நவீன மதங்களுக்கு அறிவியலுடன் எந்த மோதலும் இல்லை. மாறாக, அவர்கள் அதை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்த நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி.எஸ்.டி.எஸ். என்ற ஆய்வு மையத்தின் மருத்துவர் ஹிலால் அகமது.

“முன்னெப்போதுமில்லாத ஒன்றை எதிர்கொள்ளும்போது, அவர்கள் எப்போதும் ‘தங்கள் மதம் அதைக் கொண்டிருந்தது’ என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்” என்று அவர் கூறுகிறார்.

மதங்களுக்கான புதிய இயல்புகள்

நிச்சயமற்ற தன்மைகள் வேதனையளிக்கின்றன. ஆனால் இறுதியில், ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டு அது அனைவருக்கும் கிடைக்கும் வரை மக்கள் நியூ நார்மல் என்று சொல்லக்கூடிய ஒரு புதிய “சாதாரண” உலகில் வாழத் தொடங்க வேண்டும். இது முடிவுக்கு வருவதற்கு பல மாதங்களோ அல்லது சில ஆண்டுகளோ கூட ஆகலாம்.

இந்திய சமூகம் மதங்களை நோக்கி செல்வது அதிகரிக்குமா அல்லது அறிவியல்பூர்வமான மனநிலையை வளர்த்துக் கொள்ளுமா என்பதைக் கணிப்பது கடினம் என்றாலும், தற்போது நிலவும் குழப்பத்திலிருந்து சில போக்குகள் வெளிப்படுவதைக் காணலாம்.

coronavirus religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா சர்மா தன்னம்பிக்கை கொண்ட திறமைசாலி. முடக்க நிலை குறித்து புகார் ஏதும் சொல்லாமல் அவர் தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். “தியானமே” அவரது வலிமையாக உள்ளது.

மென்மேலும் ஆன்மிகத்துடன் நெருக்கமாகி வருவதை போன்று அவர் உணர்கிறார். "தற்போதைய சூழ்நிலையில், ஆன்மிகத்தைத் தேர்வுசெய்ய கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்" என்று அவர் கூறுகிறார்.

பத்திரிகைத் துறையை பின்னணியாக கொண்ட அவர், பேரழிவு காலங்களில் தனியாக இருக்க விரும்புகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து அவர் உறுதியாக இருக்கிறார். "கொரோனா ஒரு பாடமே தவிர, சாபம் அல்ல. அதற்கு தியானமே பதில்” என்பது அவர் கருத்தாக உள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட யோகா குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதில் தியானத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

இணையவழி பிரார்த்தனைகள்

முடக்க நிலை காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டன. இந்த நிலையில், ஜூன் 8 அன்று பல கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மத வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

coronavirus religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

மத வழிபாடு மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் கூட்டம் என்பது இயல்பான ஒன்றாக இருந்துவந்த நிலையில், தற்போது அங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மத வழிபாட்டுத்தலங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை என்றாலும், அது பக்தர்களை இணையம் வழியே கோயில்களுக்கு செல்வதை தடுக்கவில்லை.

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள கடைக்காரரான குர்ஷீத் ஆலம், கவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் பக்தர் ஆவார். அஜ்மீரில் உள்ள அந்த சமாதி ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.

"நான் தர்காவுக்கு பயணிக்க முடியாது. எனவே அவரின் ஆசீர்வாதங்களைப் பெற நான் அவ்வப்போது காணொளி அழைப்புகளை செய்கிறேன்."

அவரைப் போன்ற பலர் தங்கள் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய காணொளி சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

coronavirus religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

“பொற்கோயில் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்ரீ ஹர்மிந்தர் சாஹேப்பின் பக்தர்களின் மனதில் நிறைய ஏக்கம் இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வர விரும்புகிறார்கள். ஆனால் இயல்புநிலை திரும்பிய பிறகும் கூட சில முடக்க நிலை கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் தலைவரான ரூப் சிங்.

போப் பிரான்சிஸின் பிரசங்கங்கள் வத்திக்கானில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஜெப ஆலயங்களும் மத சேவைகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.

இஸ்லாமியர்களின் புனித்தலங்களில் ஒன்றான மெக்காவில் உள்ள மிகப் பெரிய மசூதி மூடப்பட்டுள்ளது. எனினும், ஒரு நாளைக்கு ஐந்து முறை அங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மதத்தின் பொருளாதாரம்

மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் நிறுவனங்கள் திடீரென மூடப்பட்ட நிலையில், அவற்றிற்கு பக்தர்களிடமிருந்து கிடைத்து வந்த நன்கொடைகளில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

coronavirus religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் குருத்வாராவிற்கு வருவது மட்டுமின்றி, நன்கொடை செலுத்தி வந்தனர். அது தற்போது முற்றிலும் நின்றுபோய்விட்டது” என்று கூறுகிறார்.

இது தங்களுக்கு மிகவும் சவாலான காலம் என்றும், இதனால் சமீப காலமாக இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நன்கொடை கோரி வருவதாகவும் சிர்சா கூறுகிறார்.

முடக்க நிலைக்கு முன்பு வரை, டெல்லியின் மிகப்பெரிய குருத்வாராவான பங்களா சாஹிப் குருத்வாராவில் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 25,000 பேருக்கான உணவை தயார் செய்வார்கள். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை சுமார் 1,00,000 வரை உயரும்.

ஆனால், இப்போது நாடு முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், நகரத்தில் உள்ள ஏழைகள் வேலையற்றவர்களாகவும், வாழ்க்கையைத் தக்கவைக்க வழியின்றியும் இருப்பதால், குருத்வாராவின் சிறப்பு ஊழியர்கள் ஒரு நாளைக்கு 2,00,000க்கும் மேற்பட்டோருக்கு தேவையான உணவுகளை தயாரிக்கிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"முடக்க நிலை முடிவுக்கு வந்ததும் இந்த எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று சிர்சா மேலும் கூறுகிறார்.

முடக்க நிலை முடிவுக்கு வந்தாலும் கூட, உடனடியாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரமாட்டார்கள் என்றும், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு பெறப்பட்ட நன்கொடைகளை பெறுவதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று கருதுவதாக அவர் கூறுகிறார்.

coronavirus religion

பட மூலாதாரம், BBC / Puneet Kumar

குருத்வாராவுக்கு முன்பு கிடைத்த அளவுக்கு தற்போது நன்கொடைகள் கிடைக்காவிட்டாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இணையம் வாயிலாக கிடைக்கும் நன்கொடை அவர்களின் பணியை தொடர உதவுகிறது.

படங்கள்: புனீத் குமார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: