You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்லூர் ராஜு : ‘’கொரோனா வைரஸ் நம்மை கண்டு தெறித்து ஓடும்’
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினகரன்:கொரோனாவை வெல்வோம்? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் என்ன தெரியுமா ?
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, மருத்துவர்களை தெய்வமாக வழிப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
''ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவை சுற்றி பல நாய்கள் இருக்கும். அந்த நாய்களை பார்த்து வடிவேலு கடிக்காதீங்க, கடிக்காதீங்க'' என்று கூறுவார். ஆனால் அந்த நாய்கள் கடித்து குதறிவிடும். பின்னர் நாய்கள் அனைத்தும் செத்து கிடக்கும். ''நான்தான் சொன்னேனே கேட்டீங்களா? என்று வடிவேலு நாய்களை பார்த்து கேட்பார். அதேபோல இந்த கொரோனாவை நாம் வெல்வோம். கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும்'' என்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.
''கொரோனா ஊரடங்கால் ஆலயங்கள் மூடப்பட்டுள்ளது. அதனால் தெய்வத்திற்கு இணையாக மருத்துவர்களை வணங்குங்கள். தெய்வமும் இதையே தான் கூறும். இயற்கையாகவே கடவுள் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு கொடுத்திருக்கிறார். எனவே கொரோனா நம்மை அண்டவே அண்டாது'' என்று மதுரை நடந்த விழா ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜு உரையாற்றி இருக்கிறார் என தினகரன் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமணி :கேரளாவில் யானைக்கு நிகழ்ந்த கொடூரம் போல குரங்குக்கும் நேர்ந்ததா?
அன்னாச்சிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்கு கொடுத்ததை போல குரங்குக்கு ஏதேனும் வெடிமருந்து கொடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. குரங்கு ஒன்று மூக்கு மற்றும் ஒரு கண்ணில்லாமல், முகத்தில் இரண்டு பெரிய ஓட்டைகளுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வயநாடு பகுதியில் உள்ள முத்தங்காவில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. அங்குள்ள குரங்கு ஒன்றின் முகம் சிதைந்துள்ளதை புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படும் வைரலாக பரவி வருவதுடன், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
புகைப்படத்தில் உள்ள குரங்கின் வலது பக்க கண் மற்றும் மூக்கு முழுவதுமாக சிதைந்து முகம் சேதமடைந்துள்ளது. அதன் கையிலும் காயங்கள் உள்ளன.
கையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மரத்திற்கு மரம் தாவமுடியாமல் தவிக்கிறது. எனவே இந்த குரங்கின் புகைப்படம் குறித்து கேரள வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.
இந்து தமிழ் திசை:''ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் தர்காவை சுத்தம் செய்ய கூடாது'' தர்கா நிர்வாகிகள் திட்டவட்டம்
ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தர்காவை சுத்தம் செய்ய கூடாது என தர்கா நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆலா ஹசரத் தர்கா அமைந்துள்ளது. கொரோனா பரவலால் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழிபாட்டுத் தலங் களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், பரேலி தர்காவில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி தெளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலா ஹசரத் தர்கா வின் தலைமை இமாம் முப்தி நஷ் தர் பரூக்கீ கூறும்போது, "போதை தரும் ஆல்கஹாலை பயன் படுத்த இஸ்லாத்தில் தடை உள்ளது. எனவே ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட கிருமிநாசினிகளை முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது. இதை நன்கு அறிந்த பின் மசூதி, தர்காக்களில் பயன்படுத்து வது இஸ்லாத்தில் குற்றமாகும். எனவே, ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறு கோரியுள்ளேன்" என்கிறார்.
இதுபோல, வழிபாட்டுத்தலங்களில் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்த அனுமதி மறுப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலின் மா வைஷ் ணோவதம் நவ் துர்கா கோயிலின் தலைமை பண்டிதரான சந்திரசேகர் திவாரி கிருமிநாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என இந்து தமிழ் நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: