கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தளர்வுகள் நீக்கப்படுமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

சமீபத்தில் கோவிட்-19 தொற்று குறித்து பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அம்மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படலாம் என்று கூறியிருந்தார்.

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் தனது மாநில எல்லைகளை மூடுவதாக அறிவித்தது.

இந்தியாவில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மீதமுள்ள இடங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்கான வழிமுறைகளை அறிவித்தது.

இதுதொடர்பான முடிவுகளை சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியது.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிகார், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், மிசோரம் போன்ற மாநிலங்கள் ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன.

ஆனால், பெரும்பாலான தொழில்கள் மற்றும் நடவடிக்கைகள் திறக்கப்பட்டன.

ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிகவும் அதிகமாகி வருகிறது.

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?

இந்நிலையில், கொரோனா அதிகரிப்பால் மீண்டும் ஊரங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகள் பரவத் தொடங்கிவிட்டன.

மீண்டும் நாட்டில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படும் போன்ற செய்திகள் வாட்சப்பில் வைரலாக பகிரப்பட்டன.

ஆனால், அந்த செய்திகளில் எதுவும் உண்மையில்லை, வதந்தியே என்று மத்திய அரசின் செய்திப்பிரிவான PIB மறுத்துள்ளது.

இந்தியாவில் முதல் ஊரடங்கு மார்ச் 24ஆம் தேதி அமலானது. அந்த ஊரடங்கு 21 நாட்கள் நீடித்தது.

மார்ச் 30ஆம் தேதி அன்று பேசிய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, ஊரடங்கை நீட்டிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார்.

ஆனால், அதன் பிறகு நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது.

தற்போது நீட்டிக்கப்பட்டிருப்பது ஐந்தாவது முறை. மீண்டும் கடுமையான ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை இப்போதே கணிப்பது கடினமானதே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: