தமிழகத்தில் கொரோனா வைரஸ்: சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே 14 நாட்கள் தனிமை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல பரிசோதனை செய்து கொண்ட நபரின் குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1875 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 1406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1837 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 12 பேர் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே, தமிழ்நாட்டில் இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1372 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் தவிர, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17,659ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,829 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1406 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டில் 127 பேரும் கடலூரில் 18 பேரும் காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலையில் தலா 19 பேரும் திருவாரூர், நாகப்பட்டினத்தில் தலா 15 பேரும் ராணிப்பேட்டையில் 17 பேரும் திருவள்ளூரில் 72 பேரும் திருச்சியில் பத்து பேரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உயிரிழந்த 23 பேரில் 3 பேர் கொரோனா தவிர வேறு எந்த நோயாலும் பாதிக்கப்படாதவர்கள். சென்னையில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2 பேரும் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716ஆக இருக்கும் நிலையில், 27,398 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: