ரிலையன்ஸ் ஜியோ: அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது

பட மூலாதாரம், Getty Images
அபுதாபியைச் சேர்ந்த முபதாலா முதலீட்டு நிறுவனம் தங்களுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்ம்களில், 9,093 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம், கடந்த ஆறு வாரங்களுக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஜியோ பெற்றுள்ள முதலீடுகளின் மதிப்பு 87,655 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதாவது, இதுவரை ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்துள்ளன.
ஜியோ பிளாட்ஃபார்மில் 1.85% பங்குகளை வாங்கும் முபதாலாவின் முதலீட்டின் பங்கு மதிப்பு 4.91 லட்சம் கோடி ரூபாய் என்றும் நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாய் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முபதாலா நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், உலோகங்கள் மற்றும் சுரங்கங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், ரியல் எஸ்டேட், மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 229 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, "இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி தேசமாக மாற்றுவதற்கான பயணத்தில் உலகளாவிய வளர்ச்சி முதலீட்டாளர்களில் ஒருவரான முபதாலா கூட்டு சேர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."
"அபுதாபியுடனான எனது நீண்டகால உறவுகளின் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதிலும் உலகளவில் இணைப்பத்திலும் முபதாலாவின் பணியின் தாக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் கண்டேன். முபதாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் நுண்ணறிவு ஆகியவற்றிலிருந்து பயனடைய நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, ஜியோ நிறுவனத்தின் 5,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான, 9.9% பங்குகளை சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியது.
இதன்மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களிலேயே அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ள பங்குதாரராக ஃபேஸ்புக் நிறுவனம் உருவெடுத்தது.
இசை, நேரலை ஒளிபரப்பு, இணையவழி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பங்குதாரர் ஆனதன் மூலம் இந்திய வர்த்தகச் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது ஃபேஸ்புக்.
அமேசான் நிறுவனம்ஏர்டெலில் முதலீடு செய்கிறதா ?
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பாரதி ஏர்டெலின் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று வெளியானது.
இந்திய மதிப்பில் சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏர்டெல்லின் ஐந்து சதவீத பங்குகளை வாங்க அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் கூறுவதாக ராய்ட்டர்ஸ் முகமை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த தகவலை ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












