நிசர்கா புயல்: புனே அருகே மையம் கொண்டுள்ளது - கடும் சீற்றத்துடன் காற்று, மழை

பட மூலாதாரம், ANI
அரேபியக் கடலில் மையம் கொண்ட நிசர்கா புயல், மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தபிறகு வடகிழக்கு திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
புயலின் மையம் தற்போது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ராய்காட் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் புயலால் டிரான்ஸ்ஃபார்மர் விழுந்து இறந்த 58 வயது நபர் உள்பட இருவர் புயல் தொடர்புடைய சம்பவங்களில் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொங்கன், நாசிக் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
புயலின் பாதிப்பு அடங்க, இன்னும் 3 முதல் 6 மணி நேரம் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், PIB MAHARASHTRA
மும்பையில் புயலின் வேகத்தால் மரங்கள் சாய்ந்துள்ளன.
கடும் சீற்றத்துடன் மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோரப் பகுதியில் இன்று (புதன்கிழமை) 1 மணிக்கு நிசர்கா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.
உம்பான் புயல் கொல்கத்தாவில் கரையை கடந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு தற்போது நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் மையம் கொண்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வீசிய புயலில் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வங்க தேசம் உட்பட்ட இடங்களில் இதுவரை நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிசர்கா புயலின் மையப்பகுதியின் (புயலின் கண்) வடகிழக்கு பகுதி கரையை எட்டியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் ஒரு மணியளவில் தெரிவித்துள்ளது.
நிசர்கா புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு மூன்று மணி நேரம் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பை நகரிலும் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து 150 கொரோனா நோயாளிகளை புயலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், IMD
புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் ஏற்கனவே பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. புயல் மற்றும் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
- புயல் வரும் சமயத்தில் வெளியே சென்று டிக்டாக் செய்வது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்
- புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.
- கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.
- வீட்டின் கதவு மற்றும் சன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.
- காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல்விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.
- சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பட மூலாதாரம், ANI
7. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
8. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
9. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
10. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியை செய்திக்கு வழி. அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.
11. இது கொரோனா காலம். புயல், மழை என எது வந்தாலும் சுகாதாரம் மற்றும் சமூக விலகல் விதிகளை இயன்றவரை கடைபிடியுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












